பதிவு செய்த நாள்
04
ஏப்
2023
04:04
மதுரை: கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை காத்திருக்க வைக்காமல், எளிதில் தரிசனம் செய்யும் வகையில் செயல் திட்டத்தை அறநிலையத்துறை உருவாக்கி வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் பல கோவில்களில், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். வி.ஐ.பி., வருகையின்போது பொது தரிசனம் நிறுத்தப்படுகிறது. பூஜை நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் வி.ஐ.பி.,க்கள் தரிசனத்தை உறுதி செய்ய வேண்டியது கோவில் நிர்வாகத்தின் கடமை. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு கோவில்களில் தனி வரிசை கிடையாது. கட்டண வரிசையில் நின்று தான் செல்ல வேண்டும். இத்தகையோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க இயலாது. இத்தகையோர் வழிபட தனி தரிசன நேரம் ஒதுக்க வேண்டும். தேவையின்றி காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க, அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பில், அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவது சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கோரும் நிவாரணம் பொத்தாம் பொதுவாக உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகளை பின்பற்றி பூஜை நடைபெறுகிறது. மனுதாரர் கோருவது போல உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளித்தால், மேலும் பலர் தங்களுக்கும் உடல்நலம் பாதித்துள்ளதாகக் கூறி உரிமை கோருவர். எனினும், கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை காத்திருக்க வைக்காமல் எளிதில் தரிசனம் செய்யும் வகையில், செயல் திட்டத்தை அறநிலையத்துறை கமிஷனர் 12 வாரங்களில் உருவாக்கி வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.