பதிவு செய்த நாள்
05
ஏப்
2023
02:04
அவிநாசி: அவிநாசியில் அருள்பாளித்து வரும் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் 65ம் ஆண்டு பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்தனர்.
அவிநாசி கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் 65ம் ஆண்டு பூச்சாட்டு விழாவில் காப்பு கட்டுதல், அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து கரகம் எடுத்து சக்தியை அழைத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கடந்த 28ம் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி முதல், நேற்று வரை அபிஷேக ஆராதனை, படைக்கலம் எடுத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 31ம் தேதி, வெள்ளிக்கிழமை, அம்மன் 4 ரத வீதிகளிலும் திருவீதி உலா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனையடுத்து நேற்று,நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கிழக்கு வீதி வழியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று மீண்டும் மேற்கு ரத வீதி வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். மாவிளக்கு ஊர்வலத்தில்,அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலாவும், பொங்கல் வைத்தல் ஆற்றில் கும்பம் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், விழா குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது. நாளை (வியாழன்) சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது.