மேட்டுப்பாளையம் குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 02:04
மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவிலில், குண்டம் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா, கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம், 4ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் கோவிலுக்கு அழைத்து வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து குண்டத்தை சுற்றி தெளித்தனர். பின்னர் குண்டத்தில் பூ பந்தை உருட்டி விட்டனர். கோவில் தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் முதலில் குண்டம் இறங்கினர். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள், பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, வேண்டுதல் நேர்த்தி கடனை செலுத்தினர். பல தாய்மார்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினர். விழாவில் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் நடந்த மாவிளக்கு பூஜையில், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.