பதிவு செய்த நாள்
08
ஏப்
2023
12:04
சென்னை: இன்று, 125-வது ஆண்டு நிறைவு விழா காணும் சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம், அனைத்து சமுதாயத்தினரையும் துறவியாக்கி, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிறந்த சுவாமி ராமகிருஷ்ணரும், அவரது சீடர் சுவாமி விவேகானந்தரும், இந்தியாவில் சமூக புரட்சியை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள். அன்னிய ஆட்சி, சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, மூட நம்பிக்கைகள் என, பல்வேறு காரணங்களால், இருள் சூழ்ந்திருந்த காலகட்டத்தில், ஒளிக்கீற்றாக வெளிப்பட்டவர் தான் விவேகானந்தர். கடந்த, 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வ சமய மாநாட்டில், அவர் ஆற்றிய உரை, இந்தியாவில் ஆன்மிக மாற்றத்தை மட்டுமல்ல, அரசியல் மாற்றத்திற்கும் வித்திட்டது. உலகமே இந்தியாவை உற்று நோக்கத் துவங்கியது. விவேகானந்தரின் வாழ்வில் தமிழகத்திற்கு, குறிப்பாக சென்னைக்கு முக்கிய இடம் உண்டு. ஸ்ரீராமகிருஷ்ணனர் மறைவுக்கு பின், இந்தியா முழுதும் பயணம் மேற்கொண்ட விவேகானந்தர், 1892-ல் கன்னியாகுமரி வந்தார்.
முக்கடல் சங்கமிக்கும் கடலில் குதித்து நீந்தி, அங்குள்ள பாறையில் அமர்ந்து, மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டார். அதன்பின், அவர் சென்னை வந்தார். சிகாகோ சர்வ சமய மாநாட்டிற்கு செல்ல, நிதி திரட்டி கொடுத்ததும் சென்னை இளைஞர்கள் தான். இதுகுறித்து, சென்னை இளைஞர்களே... நீங்கள் தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள். நான் முன்னணியில் இருந்தேன். அவ்வளவுதான் என, சென்னை நண்பர் அளசிங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். சென்னை இளைஞர்களின் விருப்பப்படி, விவேகானந்தரால் அனுப்பி வைக்கப்பட்ட, ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர், 1897 மார்ச், 17-ம் தேதி, சென்னையில் ராமகிருஷ்ணா மடத்தை துவங்கினார். முதலில் ஐஸ் ஹவுஸ்ஸில் செயல்பட்ட மடம், மயிலாப்பூருக்கு மாற்றப்பட்டது. கடந்த, 125 ஆண்டுகளில் சென்னை ராமகிருஷ்ணா மடம், தமிழகத்தில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.
சுதேசி பொருளாதாரம் குறித்து ராமகிருஷ்ணானந்தர் எழுப்பிய கேள்வியே, வ.உ.சிதம்பரம் பிள்ளையை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவும், கப்பல் வணிகம் செய்யவும் வைத்தது.அதேபோல, மகாகவி பாரதியின் வாழ்விலும் ராமகிருஷ்ணா மடத்திற்கு பெரும் பங்குண்டு. விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதையை தன் மானசீக குருவாக, பாரதி ஏற்றுக் கொண்டார். பாரதியின் பெண் விடுதலை சிந்தனைகளுக்கு நிவேதிதையே காரணம் அனைத்து சமுதாயத்தினரையும் துறவிகளாக்கி, தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது ராமகிருஷ்ணா மடம். இம்மடத்தின் வாயிலாக துறவு வாழ்வை துவங்கிய பலர், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய மடங்களை துவங்கி, ஆன்மிக பணிகளோடு, கல்வி, சமூக சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர், கோவையில் பிறந்த சுவாமி சித்பவானந்தர். திருச்சி திருப்பராய்த்துறையில், ராமகிருஷ்ண தபோவனத்தை துவங்கிய இவர், தமிழகத்தில் அதிக கல்வி நிறுவனங்களை துவங்கி, பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றியவர். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியிலும், இவருக்கு பெரும் பங்குண்டு. தமிழகம் முழுதும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரிகளை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லுாரி சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி, தொழில் துறையிலும், சமூக பணிகளிலும் ஈடுபட்டனர். இப்படி தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட சென்னை ராமகிருஷ்ணா மடத்தின், 125 ஆண்டு விழாவில் இன்று, பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.