திருமங்கலம்: திருமங்கலம் அருகே நேசனேரி கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 11 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த அங்காள ஈஸ்வரி பாலகுருநாதன் கோவில் நேற்று பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
நேசனேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி பாலகுருநாதன் கோவில் உள்ளது. இதில் வழிபாட்டு முறையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவில் பூட்டப்பட்டது. தொடர்ந்து பலமுறை சமாதான கூட்டம் நடத்தி கோவிலை திறக்க முற்படும்போதும் சமாதானம் ஏற்படவில்லை. இந்நிலையில் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திறக்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்ட நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கோவில் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. திருமங்கலம் டி.எஸ்.பி., வசந்தகுமார், கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரை அம்மாள், அங்கயர் கன்னி, இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் முருகையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கோயில் திறப்பை ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக் கொண்ட நிலையில், மற்றொரு சமுதாயத்தினர் உடன்படவில்லை. இதனால் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.