ஸ்ரீரங்கம் சித்திரைத்தேர் திருவிழா (விருப்பன் திருநாள்) ஏப்.,11ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 06:04
திருச்சி: பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் “சித்திரைத்தேர் திருவிழா வரும் ஏப்ரல் 11.04.2023 (பங்குனி மாதம் 28ம் தேதி) செவ்வாய்கிழமை தொடங்கி 11 நாட்கள் விமரிசையாக 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்திருவிழாவின் போது உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் திருவிழாவின் நான்காவது நாள் 14.04.23 அன்று மாலை கருட வாகனத்திலும், ஏழாம் திருநாளான 17.04.23 அன்று மாலை நெல்லளவு கண்டருளுகிறார். விருப்பன் திருநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘சித்திரை திருத்தேர்’ வடம் பிடித்தல் 9ம் திருநாளான வரும் 19.04.2023 புதன்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் நடைபெறஉள்ளது. 11ம் திருநாளான 21.04.2023 அன்று ஸ்ரீநம்பெருமாள் இரவு 8.00 மணியளவில் ஆளும் பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார்.
விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் 2-ம் ஹரிஹரனின் மகன் விருபாஷன் எனப்படும் உடையார் தம்முடைய பெயரால் சித்திரை மாதத்தில் தற்போது நடைபெற்று வரும் ப்ரஹ்மோத்ஸவத்தை கி.பி.1383-ம் ஆண்டு ஏற்படுத்தி வைத்தார். இவருடைய ப்ரதானிகள் மற்றும் மந்திரிகளான முத்தரசர் விட்டப்பர், சோமநாத தேவர், தேவராஜர், அண்ணப்ப உடையார், செண்டப்பர் முத்தய்ய தண்டநாயக்கர் ஆகியோர் திருக்கோயிலுக்கு பல கைங்கர்யங்கள் செய்துள்ளனர். விருப்பண்ண உடையார் காலத்துக் கல்வெட்டுகளில் ஆய்வு செய்திடும் போது திருவரங்கம் பெரிய கோயிலைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெளிப்படுகின்றன. விருப்பன் திருநாள் சித்திர மூலம் நட்சத்திரத்தில் கொடியேற்றமாகி ரேவதியில் திருத்தேர் உற்சவம் ஸ்ரீநம்பெருமாள் கண்டருள்வார். ஏப்ரல் மாதம் 19.04.2023 அன்று ஸ்ரீநம்பெருமாள் சித்திரைத் தேரில் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இப்போது நடந்து வரும் சித்திரை தேரோட்டம் கி.பி.1371-ல் ஸ்ரீநம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பிய போதிலும், கர்ப்பக்கிரகமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி கி.பி 1377-ல் தந்த 17 ஆயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள் சீரமைக்கப் பெற்றன.
பின்னர் கி.பி.1383-ல் நம்பெருமாள் உற்சவம் கண்டருளினார். இதில் கோயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி அவர்கள். துலாபாரமாக பெருமளவு செல்வத்தை தந்த விருப்பண்ண உடையார், கோயில் மேன்மை பெற மேலும் 52 கிராமங்களை தருமமாக தந்தார். அவருடன் வந்த குண்டு சாளுவையர், நம்பெருமாள் கொடியேற்றத்தின் போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கல திருக்கொடிதட்டினை செய்வித்தார். இந்த கொடித்தட்டு இப்போது புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது. எனவே, இந்த தட்டுக்கு வெண்கலத்தேர் என்ற பெயர் வழங்குகிறது. கிராமப்புற மற்றும் பாமர மக்கள் ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்த் திருவிழாவில் இன்றும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்திற்கு முன்பு. கோயில் கணக்குப் பிள்ளை, ஸ்ரீநம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும். இதற்கு காரணம் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியர்களோடு ஆஸ்தானம் திரும்புவதற்கு முன்பு இப்போதைய மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள அழகிய மணவாளன் கிராமத்தில் சில நாட்கள் தங்க நேரிட்டது. அந்த ஊர் மக்கள் அந்த கிராமத்தையே ஸ்ரீநம்பெருமாளுக்கு சாஸனமாக எழுதித் தந்தனர். அந்த கிராமத்தை குத்தகைக்கு விடும் நிகழ்ச்சிதான் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்ற நாளன்று சுட்டிக் காட்டப்படுகிறது.