பதிவு செய்த நாள்
09
ஏப்
2023
08:04
ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில் கம்பம் ஊர்வலம், ஈரோடு மாநகரில் வழக்கமான உற்சாகத்துடன் நேற்று நடந்தது. ஊர்வலத்தின் போது மஞ்சள் நீராட்டமும் நடந்ததால், மஞ்சள் மாநகரான ஈரோடு, மஞ்சள் நீரில் மூழ்கி திளைத்தது.
ஈரோடு மாநகர் பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களான, பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம், தேர்திருவிழா மார்ச், 21ல் பூச்சாட்டுதல் துவங்கியது. மார்ச், 25ல் கம்பங்கள் நடப்பட்டன. தினமும் பக்தர்கள் பால் குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து கம்பங்களுக்கு ஊற்றினர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி சுமந்தும், கரகம் எடுத்தும், முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த, 4ல் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, 5ம் தேதி சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணியளவில் காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில் கம்பம் எடுக்கப்பட்டு, ஊர்வலமாக மணிக்கூண்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்தையும் கொண்டு வந்தனர். அங்கு மூன்று கம்பங்களும் ஒரு சேர இணைந்து, அந்தந்த கோவில் பூசாரிகளால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, எம்.எஸ், சாலை, ஜி. ஹெச். ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ஸ்வஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, ஆர்.கே.வி. சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியாக இரவு காரைவாய்க்காலை அடைந்தது. பின்னர் கம்பங்கள் வாய்க்காலில் விடப்பட்டன.
ஊர்வல பாதையில் சாலையின் இருமருங்கிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கம்பங்களின் மீது உப்பு, மிளகு துாவி வழிபட்டனர். ஊர்வலத்தில் பலர் நேர்த்திக்கடனுக்காக வேடமிட்டு கலந்து கொண்டனர்.
கம்பம் ஊர்வலம் துவங்கியதும் ஈரோடு மாநகர், புற நகரில் மஞ்சள் நீராட்டு தொடங்கியது. சிறுவர், சிறுமிகள், இளைஞர், இளம்பெண்கள், நண்பர்கள் வயது வித்தியாசமின்றி ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கம்பம் ஊர்வலத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், மாநகரில் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. இன்று மூன்று கோவில்களிலும் மறுபூஜை நடக்கிறது.