தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2023 08:04
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனி பொங்கல் விழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை, தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா கடந்த 29ம் தேதி இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, மின் அலங்கார தேரோட்ட விழா, ஊஞ்சல் உற்சவம் புஷ்ப பல்லாக்கு போன்ற விழாக்களில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடு கோழிகளை பலியட்டும் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரவு தீர்த்தவாரியை முன்னிட்டு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் தாயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்த்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த பொங்கல் விழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.