பதிவு செய்த நாள்
11
ஏப்
2023
03:04
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., மோகன்ராஜ் நேரில் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் விழாவுடன் துவங்குகிறது. மே 1ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், மே 2ம் தேதி திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம்(தாலி கட்டுதல்) ஏற்றுக்கொள்ளுதல், மே 3ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இத்திருவிழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ். பி. மோகன்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது திருவிழா பகுதியான கோவிலில் திருநங்கைகள், பக்தர்கள் சுவாமியை வழிபட்டு செல்வதற்கு வழிகள், கூடுதல் பஸ் வசதிகள், தற்காலிக பஸ் நிலையங்கள், பைக்குகள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது தென்னித்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவி சிந்து மற்றும் திருநங்கைகள் கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கூறுகையில், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள், பக்தர்கள் வருகை புரிந்து தங்கம், வெள்ளி, பணம் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அவற்றை பற்றியோ, காணிக்கைகள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது என முறையிட்டனர். அதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அது குறித்து வெளிப்படையாக தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ., யோகஜோதி, டி.எஸ்.பி., மகேஷ், தாசில்தார் ராஜி, பி.டி.ஓ..க்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமிமுருகன், தென்னித்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவி சிந்து, அகில இந்திய திருநங்கைகளுகான குழு உறுப்பினர் ராமமூர்த்தி, திருநங்கைகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.