பதிவு செய்த நாள்
12
ஏப்
2023
10:04
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, வீரபத்திர சுவாமி கோவில் தேரோட்டத்தில், பக்தர்கள் தேரை தோளில் சுமந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பளேரப்பள்ளியில், பழமையான வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, அக்னி குண்டம் இறங்குதல் மற்றும் லட்சுமி நாராயண சுவாமி பூ பல்லக்கு விழா நடந்தது. விழாவையொட்டி, ராகு காலத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. அலங்கரித்த தேரில் உற்சவமூர்த்தியை அமர்த்தி, தேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி, பல்வேறு கிராமங்களின் வீதிகள் மற்றும் விளைநிலங்கள் வழியாக சென்றனர். பளேரப்பள்ளி, நாகொண்டபாளையம், மராட்டிபாளையம், குருபரப்பள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விரதமிருந்த பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகாவிலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்திருந்தனர்.