மேல்மலையனுார் அருகே கி.பி.15ம் நூற்றாண்டு நினைவு கற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 08:04
செஞ்சி: மேல்மலையனுார் அருகே 15ம் நுாற்றாண்டை சேர்ந்த நினைவு கற்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அடுத்த அண்ணமங்கலம் கிராமத்தில் வரலாற்று தடையங்கள் இருப்பதாக ஓய்வு பெற்ற தலையை ஆசிரியர் முனுசாமி கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் அண்ணமங்கலம் கிராமத்தில் ஆய்வு செய்தார். இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது அண்ணமங்கலம் கிராமத்தில் ஏற்கனவே பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது நடத்திய ஆய்வில் அண்ணமங்கலம் கிராமத்தின் வடக்கில் ஏரிக்கரையின் மீது பலகை கல் ஒன்று காணப்படுகிறது. அதில் கைகளில் நீண்ட வாள் மற்றும் கேடயங்களைத் தாங்கிய நிலையில் இரண்டு வீரர்களை காட்டப்பட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கு அருகில் இரண்டு பெண் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் வீரர்களின் மனைவியர் ஆவர். ஊரைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போரில் இரண்டு வீரர்கள் உயிர் துறந்துள்ளனர். இவர்களது மனைவியரும் இவர்களுடன் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவர்களின் நினைவாக சதிக்கல் எனப்படும் இந்த நினைவுக் கல் எடுக்கப்பட்டுள்ளது. அண்ணமங்கலம் ஏரியின் தென்திசையில் பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட மற்றொரு சிற்பம் காணப்படுகிறது. இதில் ஒருவர் தனது ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலை தொங்க விட்டும் மேடைமீது அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் மெய்க்காவலர் இருவர் காட்டப்பட்டுள்ளனர். இதில் இருப்பவர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னராக இருக்கலாம். ஏரி செப்பனிடப்பட்டதுத் தொடர்பாக இவரை நினைவு கூறும் வகையில் இந்நினைவுக் கல் இங்கு எடுக்கப்பட்டு இருக்கலாம். அண்ணமங்கலம் கிராமத்தில் காணப்படும் மேற்காணும் இரண்டு சிற்பங்களும் சதிக்கற்கள் மற்றும் நினைவுக் கற்களாகும். இவற்றின் காலம் கி.பி., 15-16ம் நூற்றாண்டை சேர்ந்தது. இவை செஞ்சியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் காலத்தை சேர்ந்தவை. இந்த தகவலை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதி செய்துள்ளார். வரலாற்றை நினைவுகூறும் வகையிலான இந்த நினைவுக் கற்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஆய்வாளர் செங்குட்டுவன் கூறினார்.