பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
11:04
செங்கல்பட்டு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு விழா நடைபெறும். இந்த ஆண்டு, தமிழ் புத்தாண்ட முன்னிட்டு, கடந்த 13ம் தேதி, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன் பின், உலக நாடுகளில் பொருளாதாரம் பெருகவும், இயற்கை வளம் பெறவும், உலக மக்கள் அனைவரும் வைரஸ் போன்ற நோய்கள் இன்றி ஆரோக்கியத்துடன் வாழவும் வேண்டி, கருவறை முன், கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இடையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்பாள் தங்க கவசத்தில் எழுந்தருளினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார், பக்தர்களுக்கு அன்னாதானத்தை துவக்கி வைத்தார். அதன்பின், சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, செவ்வாடை பக்தர்களுக்கு, அடிகளார் அருளாசி வழங்கினார். ஏராளமானபக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.