பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
11:04
காஞ்சிபுரம்:தமிழ் புத்தாண்டையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுதும் தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகளில் அறுசுவை உணவு தயாரித்து, தமிழ்க் கடவுள் முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு படையலிட்டு நேற்று வழிபட்டனர். முன்னதாக, கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவில்களில் அதிகாலை முதலே, பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய துவங்கினர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் பெருமாள் மாட வீதி புறப்பாடு நடந்தது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. அஷ்டபுஜப்பெருமாள் கோவில் அருகில் உள்ள திருக்கச்சியம்பதி விநாயகருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, வள்ளி, தெய்வானையருடன் முருகப்பெருமான் கேடய வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். இரவு வெள்ளித்தேரில் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பவனி வந்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானின், நெற்றி வியர்வையில் இருந்து தோன்றிய கோடி ருத்ரர்கள் வழிபட்ட பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் உள்ள பழமையான ருத்ரகோட்டீஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனை நடந்தது. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி விநாயகருக்கும், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், ராகு, கேது, சனீஸ்வரர், தாரை சமேத தேவகுரு, வள்ளி சேவை சேனா சமேத சிவசுப்பிரமணியர் மற்றும் அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து, சோபகிருது ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் செல்வ விநாயகர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதேப்போன்று சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழ் புத்தாண்டு பலன்கள் குறித்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நின்ற நிலையில் திருமண கோலத்தில் ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேப்போல், ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில், மதுரமங்கலம் எம்பார் சுவாமி கோவில், சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவில், மாகாண்யம் கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்டபல்வேறு கோவில்களில் தமிழ் புத்தண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்று வழிப்பட்டனர்.
தங்கத்தேரில் அம்மன் பவனி: காமாட்சியம்மன் கோவிலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தங்கத்தேரில் காமாட்சியம்மன் கோவில் உட் பிரகாரத்திலேயே பவனி வந்து அருள்பாலிப்பார்.சித்திரை மாதம் முதல் நாளான, தமிழ் புத்தாண்டு அன்று மட்டும், தங்கத்தேரில், காமாட்சியம்மன், காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளான, நான்கு ராஜவீதிகளில் பவனி வருவது வழக்கம். அந்த வகையில், தங்கத்தேர் உற்சவம் காஞ்சிபுரத்தில் நேற்று விமரிசையாக நடந்தது. ராஜவீதிகளில் ஏராளமான பக்தர்கள் நின்று, அம்மனை வழிபட்டனர். சித்திரை தேரோட்டம்: வாலாஜாபாத் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், சிவசுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி அன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டிற்கான தேரோட்ட உற்சவம் நேற்று காலை, 8:00 மணிக்கு, சிவசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.தொடர்ந்து, 9:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேர் வடம் பிடித்து, அரோகரா அரோகரா என, கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை வந்தடைந்தது.