எருமேலியில் சபரிமலை விமான நிலையம் மதுரைக்கு பாதிப்பு இல்லாதது உறுதியானது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2023 05:04
சபரிமலை: எருமேலியில் அமைய உள்ள சபரிமலை விமான நிலையத்தால் மதுரை விமான நிலையத்துக்கு பாதிப்பு இல்லை என்பைதை உறுதி செய்த பின்னர் மத்திய அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. கோட்டயம் மாவட்டம் எருமேலி அருகே செறுவள்ளி எஸ்டேட்டில் இரண்டாயிரத்து 266 ஏக்கர் பூமியில் சபரிமலை விமானம் நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கியது. விமானத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது. தொடக்க நிலை ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்ட ரன்வே திசை உள்ளிட்ட சில தொழில்நுட்ப விஷயங்களில் விமானத்துறை அமைச்சகம் சில சந்தேகம் மற்றும் அச்சங்களை வெளிப்படுத்தியிருந்தது. டேபிள்டாப் ரன்வே பாதுகாப்பு குறைவானது என்பதை விமானத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து டேபிள்டாப் ரன்வேயை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 301 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ரன்வேயின் நீளம் 3.50 கி.மீட்டராக அதிகரித்தது. கேரளாவில் இதுதான் மிக அதிக நீளமான ரன்வேயாக இருக்கும். இதை ஏற்றுக்கொண்ட விமான அமைச்சகம் மதுரை–சபரிமலை விமான நிலையத்தின் துாரம் பற்றி கேட்டது. இது ஆகாய மார்கத்தில் 148 கி.மீ. என்பதையும், சபரிமலை விமான நிலையத்தால் மதுரைக்கு பாதிப்பு இல்லை என்பதை மாநில அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து விமான அமைச்சகம் சபரிமலை விமான நிலையத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இனி அடுத்த கட்டமாக முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்று இதற்கான தனி அதிகாரி துளசிதாஸ் தெரிவித்துள்ளார்.