பதிவு செய்த நாள்
16
ஏப்
2023
05:04
அவிநாசி: அவிநாசி வட்டம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவிலில் 37ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுகின்றது.
அவிநாசி அடுத்த நடுவச்சேரியில் எழுந்தருளியுள்ள கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவிலில் 37 ம் ஆண்டு குண்டம் திருவிழா,இன்று (ஞாயிறு)கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் நீர் கிணறுக்கு சென்று வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை, 17ம்தேதி அபிஷேகம், மதியம் குண்டம் திறப்பு, அக்கினி பூ போடுதல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரவு தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பின்னர், 18ம் தேதி, செவ்வாய் அதிகாலை 5 மணிக்கு குண்டம் இறங்குதல் நடைபெறுகின்றது. குண்டம் விழாவில், 19ம் தேதி புதன் அன்று மறுபூஜை, மஞ்சள் நீராட்டு, சாமி சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகின்றது. குண்டம் திருவிழா நாட்களில்,உபயதாரர்கள் மற்றும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக,குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் செயல் அலுவலர் பவானி, கோவில் மிராசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.