பதிவு செய்த நாள்
17
ஏப்
2023
01:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே, கங்கமடுகு கிராமத்தில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் தலைமையில், முதுகலை பட்ட மாணவர் அசோக்குமார் மற்றும் பட்ட ஆய்வாளர் செல்வமணி ஆகியோர், கள ஆய்வு மேற்கொண்டு, இசைக்கலைஞன் நடுகல்லை கண்டறிந்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: கங்கமடுகு கிராமத்தில், திம்மராஜ் வீட்டின் அருகே ராமே கவுடு–லட்சுமே கவுடு பெயரில் வழிபாட்டிலுள்ள, 13 நடுகற்கள் கண்டறியப்பட்டன. அதில், 11 நடுகற்கள் போரில் இறந்த வீரர்களுக்கும், இரண்டு இசைக்கலைஞர்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளது. இவை, 17ம் நுாற்றாண்டை சேர்ந்தவை.
இதில் இசைக்கலைஞர் ஒருவர் பறை இசை கருவியை, லேசாக சாய்த்தபடி மெய்மறந்து அடிப்பது போல், காட்டப்பட்டுள்ளது. வலது கையில் அடிக்குச்சி, இடது கையில் சிம்புக்குச்சி அல்லது சுண்டுகுச்சி கொண்டு இசைப்பது போல் உள்ளது. கால் சட்டை அணிந்து, கால்களில் தண்டை, வலது கையில் காப்பு, கழுத்தில் ஒரு அணிகலன் மற்றும் பின்னால் உறைவாள் ஒன்றும், கீழ் நோக்கி காட்டப்பட்டுள்ளது. இசைக்கலைஞரின் அருகில், இறந்து போன அவருடைய மனைவி சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. அவருடைய வலது கையில், பறை அடிக்கும் குச்சி, இடது கையில் மதுக்குடுவை உள்ளது. இத்துடன் கழுத்தில் ஆரமும், கைகளில் தண்டை, இடுப்பில் ஒட்டியாணம் அணிந்துள்ளார். இங்கு சிற்பமாக உள்ள இசைக்கலைஞர், அப்பகுதியில் புகழ் பெற்ற கலைஞராக இருந்திருக்கலாம். அவரை சிறப்பிக்கும் வகையில், அவரையும் அவருடைய மனைவி நினைவை போற்றும் வகையிலும், நடுகல்லை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.