பதிவு செய்த நாள்
17
ஏப்
2023
05:04
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் பெரியாறு புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ளதால் வனத்துறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் வழிபட வேண்டும் என குமுளியில் நடந்த தேனி, இடுக்கி கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் கூடலுார் அருகே தமிழக -கேரள எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இதில் தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இக்கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப் பகுதி வழியாக இருப்பதால் விழா கொண்டாடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி விழா கொண்டாடப்படும்.
ஆலோசனைக் கூட்டம்: இந்த ஆண்டு மே 5ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தேனி கலெக்டர் சஜீவனா, இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் தலைமையில் இன்று குமுளி வனத்துறை பாம்பூ குரூவ் கூட்ட அரங்கில் நடந்தது. இரு மாநில வனத்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவு: மே 5ல் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிப்பது, மாலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து திரும்புவது, கேரள வனத்துறை சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவது, கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்குவது, குமுளியிலிருந்து கோயில் வரை செல்லும் 14 கி.மீ., தூர ஜீப் பாதை சீரமைப்பது, லோயர்கேம்ப் பளியங்குடியில் இருந்து கோயில் வரையுள்ள 6.6 கி.மீ., தூர மலைப்பாதையை சீரமைத்து குடிநீர் வசதிகள் செய்து தருவது, கோயில் அமைந்துள்ள பகுதி பெரியாறு புலிகள் சரணாலயமாக இருப்பதால் வனத்துறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி வழிபட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களின் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார்.