பல்லடம்: பல்லடம் அருகே, தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, காவடி மற்றும் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
பல்லடம் அடுத்த, செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காவடி மற்றும் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி புதுக்காலனி விநாயகர் கோவில் திடலில் நடந்தது. குழந்தை வடிவேலன் கலைக்குழு சார்பில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை, ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். முன்னதாக, முருகப்பெருமானை வணங்கிய பின் கலை நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர் சிறுமியரின் காவடி கரகாட்டமும், இதையடுத்து, குழந்தை வடிவேலன் கலைக்குழுவினரின் கும்மி ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் நடந்தது. சிறுவர்கள், இளம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கும்மியாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் முன்னேற்ற அனைவருக்கும், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.