பதிவு செய்த நாள்
22
செப்
2012
10:09
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், மழை வேண்டியும், நாமக்கல் கணேசபுரம் செல்வி விநாயகர் கோவிலில், ஸ்வாமி தெப்பத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. நாமக்கல், கணேசபுரத்தில், செல்வி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்வாமி வழிபாடு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில், மழை வேண்டி சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, கடந்த, 19ம் தேதி, தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, மகா கணபதி யாகம், பூர்ணாகுதி, சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. ஸ்வாமி, சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மழை வேண்டி, தெப்பத்தில், ஸ்வாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. தினமும், மாலை, 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை (செப்., 23) மாலை, 3 மணிக்கு, விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், விசர்ஜனம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.