பதிவு செய்த நாள்
22
செப்
2012
04:09
விட்டல! விட்டல! ஜய ஜய விட்டல! ஹர ஹர விட்டல! என்று எந்நேரமும் கிருஷ்ண பஜனை செய்து கொண்டிருந்தவர் ஹரிதாசர். லோகதண்டம் என்னும் புண்ணியதலத்தில் ஜத்வாமுனிவர்- சாத்யகி தம்பதியின் திருமகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் புண்டரீகன். அவன் பெண்ணாசை மிக்கவனாக இருந்தான். மகன் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து வைத்தனர். அப்போதும் பயனில்லை. மகனுக்குப் புத்திமதி சொல்லிப் பார்த்தனர். ஆனால், கோபத்துடன் அவர் பேசிய பேச்சு பெற்றோர் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது. ஜத்வாமுனிவரும், சாத்யகியும், இப்படியொரு பிள்ளையைக் கொடுத்துவிட்டாயே என்று கடவுளிடம் முறையிட்டனர். அப்போது வீட்டு வாசலில் கோவிந்த நாம சங்கீர்த்தனம் கேட்டது. வீதியில் கோவிந்தா! ஹரி கோவிந்தா! என்று பாகவதகோஷ்டியினர் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அவர்களோடு யாத்திரை செல்வதாக மருமகளிடம் சொல்லி விட்டு, ஜத்வாமுனிவர் மனைவியோடு கிளம்பி விட்டார். விஷயம் அறிந்த புண்டரீகன், இன்றோடு என்னைப் பிடித்த கஷ்டகாலம் தொலைந்து விட்டது என்று ஆனந்தப்பட்டான்.
அன்றிரவு புண்டரீகனுக்கும், எங்காவது சுற்றுலா கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. கையில் இருந்த பணத்திற்கு இரு குதிரைகளை விலைக்கு வாங்கி வந்தான். கணவனும், மனைவியும் கிளம்பினர். சற்று தொலைவில் காட்டுப்பாதையில், தனது பெற்றோர் பாகவத கோஷ்டியோடு நடந்து செல்வதை புண்டரீகன் பார்த்தான். இதென்னடா வம்பு என மாற்றுப் பாதையில் குதிரையை செலுத்தத் தொடங்கினான். வழியில் ஒரு சத்திரத்தில் அவர்கள் தங்கினர். சத்திரம் அருகில் இருந்த குடிலில், குக்குட முனிவர் என்னும் தவசீலர் இருந்தார். அவரிடம், சுவாமி! தீர்த்த யாத்திரையாக நானும் என் மனைவியும் சென்று கொண்டிருக்கிறோம். இங்கிருந்து காசி எவ்வளவு தூரம் என்று சொன்னால் வசதியாக இருக்கும் என்று கேட்டான். நான் காசிக்குப் போனதும் இல்லை. கங்கையில் நீராடியதும் இல்லை. என் பெற்றோரின் பாதங்கள் தான் எனக்கு புனிதமான காசி. அதில் படும் நீரே எனக்கு புண்ணிய கங்கை என்று சொன்னார்.
இவரிடம் போய் விபரம் கேட்டோமே, என்று அலட்சியம் செய்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான். காலையில் எழுந்தான். முனிவர் குடிலின் வாசலில் மூன்று அவலட்சணமான பெண்கள் நின்று கொண்டிருந்தனர். இங்கும் அங்குமாக குடிலுக்குள் விரைந்து பணிகளைச் செய்து முடித்தனர். குடிலின் வாசல் பெருக்கி கோலமிட்டனர். செடிகளுக்கு நீர் பாய்ச்சினர். குடிலுக்குள் சென்று முனிவரை வணங்கினர். வெளியே வரும் போது, மூவரும் அழகானவர்களாக உருமாறியிருந்தனர். பெண்ணாசை பிடித்த புண்டரீகன் அவர்களை நோக்கி ஆசையுடன் ஓடினான். அற்பப் பதரே! எட்டிநில்! என்று கோபமாகக் கத்தினர். அவன் பயந்துபோய், அவர்களது கால்களில் விழுந்து தாய்மாரே! என்னை மன்னியுங்கள்! என்றான். அப்பெண்களின் அருட்பார்வையால் அவனைப் பற்றியிருந்த தீய எண்ணங்கள் மறைந்தன. அவர்கள் அவனிடம்,நாங்கள் தான் புண்ணிய நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி. உன்னைப் போன்ற கொடியவர்கள் நீராடுவதால் எங்களின் புனிதம் போய் விடுகிறது. எங்கள் பாவம் தீர வேண்டி, பெற்றவர்களே தெய்வமென வணங்கும் இந்த முனிவரின் குடிலுக்கு வந்து சேவை செய்கிறோம்.
பெற்றோருக்குச் சேவை செய்பவர்கள் பெரும்பாக்கியவான் ஆவார்கள், சொல்லிவிட்டு மறைந்தனர். குக்குட முனிவரின் குடிலுக்குள் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். ஒரு நொடிகூட காத்திராமல், பெற்றோரைத் தேடிப் புறப்பட்டான். காட்டுவழியின் ஓரிடத்தில் தாயும் தந்தையும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணிருந்தும் இத்தனை நாளும் குருடாக இருந்துவிட்டேனே! அம்மா! அப்பா! இருவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று அழுதான். மகனின் மனமாற்றம் கண்ட பெற்றோர் சந்தோஷம் கொண்டனர். திருந்திய புண்டரீகன், பக்த புண்டரீகராக மாறி விட்டார். குதிரையில் பெற்றோரை ஏற்றிக் கொண்டு காசி சென்றார். யாத்திரை முடித்து திரும்பும்போது, தாய் தந்தைக்காக பீமாநதிக்கரையில் குடில் அமைத்தார். எப்போதும் அவர் வாயில் ஹரிநாமம் ஒலித்தது. புண்டரீகருக்கு அருள்புரிய பாண்டுரங்கனே நேரில் வந்தார்.
ஆனால், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், பாண்டுரங்கா! இப்போது நான் பெற்றோருக்கு சேவை செய்து கொண்டிருக்கிறேன். சிறிதுநேரம் அங்கிருக்கும் செங்கல் மீதேறி காத்து நில்! இதோ வந்து விடுகிறேன்! என்று தன் பணியைத் தொடர்ந்தார். பெற்றோர் பாதசேவையை முடித்து விட்டு ரங்கனைத் தேடி வந்தார். கோபாலா! கோவிந்தா! என்னை மன்னித்துவிடு! எனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தாயே! என்ற வருந்தினார். புண்டரீகா! பெற்றோர் சேவையின் மகிமையை உலகிற்கு உணர்த்த உன் வாழ்வு உதாரணமாகட்டும் என்று இறைவனும் அருள்புரிந்தார். இந்த இடமே புண்டரீகரின் பெயரில் புண்டரீகபுரமாக விளங்கி, பண்டரிபுரமாக மாறிவிட்டது. செங்கல்லில் காத்திருந்ததால்பாண்டுரங்கனுக்கு விட்டலன் என்ற திருநாமம் ஏற்பட்டது. மராத்தியில் விட்டல் என்பதற்கு செங்கல் என்று பொருள். ஹரிபக்தியில் முழுமையாக ஈடுபட்ட புண்டரீகரை பக்தர்கள் ஹரிதாசர் என்று இன்றும் போற்றுகின்றனர்.