பதிவு செய்த நாள்
21
ஏப்
2023
07:04
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே கூலிசந்திரத்தில், ஊர் பண்டிகை நடக்கும் பொதுஇடத்தில், தமிழகத்திலேயே முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான, 89 நடுக்கற்கள் ஆங்காங்கு பராமரிப்பின்றி உள்ளன. இதை, அறம் வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அறம் கிருஷ்ணன் மற்றும் மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா ஆகியோர் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து, அறம் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்திலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், 8ம் நுாற்றாண்டு துவங்கி, 18ம் நுாற்றாண்டு வரையிலான நடுகற்கள் அதிகளவில் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஓசூர் தேர்ப்பேட்டையில், -20, கொத்துார், 28, சின்னகொத்துார், 25, சிங்கிரிப்பள்ளி, -74, நாகொண்டபாளையம், 45, ஒன்னல்வாடி, -24, உளிவீரனப்பள்ளி, 32, தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளியில், -48, பாகலுார் அருகே குடிசெட்லுவில், 25, காவேரிப்பட்டணம் அருகே பென்னேஸ்வர மடத்தில், 25, தொகரப்பள்ளி அருகே, 15க்கும் மேற்பட்ட நடுக்கல் தொகுப்புகள் உள்ளன. கூலிசந்திரத்தில் ஒரே இடத்தில் மொத்தமாக, 89 நடுக்கற்கள் உள்ளன. இதை குறும்பர் இன மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுக்கற்கள், 14ம் நுாற்றாண்டு துவங்கி, 18ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. ஒரே இடத்தில் எந்த பராமரிப்புமின்றி சிதறி கிடக்கின்றன. இங்கு கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலின் பிராதன வளாகத்தை சுற்றி, நடுக்கற்களை வைத்து பராமரிக்கும் நோக்கில் வேலைகள் நடக்கிறது. வரலாற்று பொக்கிஷமான நடுக்கற்களை பாதுகாக்க, அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பாக, ஊர்மக்களிடம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.