பதிவு செய்த நாள்
24
செப்
2012
10:09
திருச்சி: நத்தர்வலி தர்ஹாவில், இரண்டு ஆண்டாக திறக்கப்படாத உண்டியல், நேற்று திறக்கப்பட்டது. அதில், 4.26 லட்சம் ரூபாய் இருந்தது.திருச்சி- மதுரை ரோட்டில், 1,015 ஆண்டு பழமை வாய்ந்த நத்தர்வலி தர்ஹா உள்ளது. இங்கு, எட்டு உண்டியல் உள்ளது. ஆண்டு தோறும், இரண்டு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும். பரம்பரை அறங்காவலராக குலாம் ரசூல் உள்ளார். தர்ஹா பொது அறங்காவலர்களாக ஜபருல்லாகான், மைதீன், பாதுஷா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்கள், ஒரு பங்காளி அறங்காவலரை தேர்வு செய்ய வேண்டும். இந்த நால்வரும் சேர்ந்து, ஒரு தலைமை அறங்காவலரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பாதுஷா தன்னையே தலைமை அறங்காவலராக அறிவித்துக்கொண்டார். இது தொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றத்துக்கு சென்றது.இந்த பிரச்னையால், 2010லிருந்து தர்ஹாவில் உள்ள உண்டியல் திறக்கப்படவில்லை.இதற்கிடையே, "வக்ஃபுவாரிய அதிகாரிகள் முன்னிலையில், உண்டியல் திறந்து எண்ணப்பட வேண்டும் என, மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக வக்ஃபு வாரிய உதவி செயலாளர் நாசர், கண்காணிப்பாளர் முகமதுஅலி, ஆய்வாளர்கள் திருச்சி சையது ரிஷா, கரூர் ஜெயினுலாபுதீன் ஆகியோர், நேற்று தர்ஹா வந்தனர்.தலைமை அறங்காவலராக அறிவித்துக் கொண்ட பாதுஷா, உண்டியல் சாவிகளை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். மாலை, 3 மணிக்கு மேல், ஒரு உண்டியல் மட்டும் திறந்து எண்ணப்பட்டது. அதில், நான்கு லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய் இருந்தது. "மற்ற உண்டியல்கள் இன்று காலை திறக்கப்படும் என, வக்ஃபு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.