பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
10:04
மயிலாடுதுறை: சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத்திருமேனிகள், செப்பேடுகளை கோவிலிலேயே வைத்து பாதுகாக்க வேண்டுமென பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைப்பதற்காக கடந்த 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன்னால் ஆன தெய்வத் திருமேனிகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்து செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் தெய்வ திருமேனிகள், செப்பேடுகள், அவற்றை கண்டெடுத்த பகுதியை நேற்று மாலை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாயன்மார்களின் பாடல் பதிக்கப்பட்ட செப்பேடுகள் இங்குதான் முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த தெய்வத் திருமேனிகள், செப்பேடுகள் இந்த கோவிலில் தான் இருக்க வேண்டும். இதற்கு பாதுகாப்பு அறை அமைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் தெய்வத் திருமேனிகள் என்பதால் இவற்றை கைப்பற்ற அறநிலையத்துறை முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது. பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள காப்பகத்தில் 300-க்கும் மேற்பட்ட தெய்வத்திருமேனிகள் போலியானவை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ஏற்கனவே கூறியுள்ளார். அதுபோல இந்த விக்கிரகங்களையும் போலியாக மாற்ற வாய்ப்பு உண்டு என்ற சந்தேகம் நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு வரை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தொகை வங்கியில் ரூ 500 கோடி இருந்தது. ஆனால் 2022 டிசம்பர் மாதம் ரூ. 421.92 கோடி காணவில்லை. இதனால் திராவிட மாடல் திமுக அரசை இந்துக்கள் நம்பத் தயாராக இல்லை. இந்த சிலைகளை சுத்தம் செய்து உரிய முறையில் ஆய்வு செய்து எந்த காலத்தை சேர்ந்தவை என்று அரசு ஆய்வு செய்யலாம். ஆனால் தெய்வத்திருமேனிகள், செப்பேடுகள் அனைத்தும் தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தான் இருக்க வேண்டும். கர்நாடகம் கேரளாவில் பாஜகவை எதிர்த்து ஏற்கனவே அதிமுக போட்டியிட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதனால் கர்நாடக தேர்தலுக்கும் இங்குள்ள கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார். உடன் பாஜக மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தமிழ்நாடு திருக்கோவில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் அழகிரிசாமி, விசுவ ஹிந்து பரிஷத் மண்டல அமைப்பாளர் செந்தில்குமார், பாஜக பிரச்சார அணி மாவட்ட துணை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.