பதிவு செய்த நாள்
25
செப்
2012
10:09
திருவாரூர்: திருவாரூர் அருகே, நாரணமங்கலத்தில், கோவில் கட்டுமானப் பணிகளுக்கு பள்ளம் தோண்டிய போது, 300 ஆண்டுகள் பழமையான, ஐம்பொன் மாரியம்மன் சிலை கிடைத்தது. திருவாரூரில் இருந்து, திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில், நாரணமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு, பழமையான மாரியம்மன் கோவில் சிதிலமடைந்து இருந்ததால், புதுப்பிக்கும் பணி துவங்கியது. முதற்கட்டமாக, கடைக்கால் பதிக்க, பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, தென் மூலையில் பள்ளம் தோண்டிய போது, 1.5 அடி உயரமுள்ள, ஐம்பொன் மாரியம்மன் சிலை கிடைத்தது. தகவலறிந்த, திருவாரூர் தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள், சிலையைக் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள், "சிலையை, கோவிலில் வைப்பதா அல்லது அருங்காட்சியகத்தில் வைப்பதா என, உயரதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றனர். கண்டெடுத்த ஐம்பொன் சிலை, 300 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் ஏதேனும் சிலைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் உள்ளதா என, தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.