பதிவு செய்த நாள்
29
ஏப்
2023
12:04
வள்ளியூர்: வள்ளியூர் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
வள்ளியூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில் ஆகும். தென் மாவட்டங்களில் குகை கோயில்களில் சிறப்பு பெற்றது. வள்ளியூர் முருகன் கோயில் மலையை குடைந்து குகைக்குள் மூலவர் இருப்பதால் உள் பிரகாரம் இல்லாமல் கிரிவலம் வந்தால் தான் முருகரை சுற்ற முடியும் என்பது இந்த கோயிலின் சிறப்பு. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி, தெப்பம், தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்கிறது. இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவின் 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகர் எழுந்தருளினார். முருக பக்தர் பெரியவர் சுப்ரமணியனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதியம் 2 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தவத்திரு ஸ்ரீ வேலாண்டி ம்பிரான் சுவாமிகள் திருமட நிர்வாகிகள் ஆதி பாண்டி, சுப்பிரமணியன், ரவி, பஞ். தலைவர் , துணை த்தலைவர் கண்ணன், தி.மு.க., நெல்லை மாவட்ட துணை தலைவர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை தீர்த்தவாரி, இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.