பதிவு செய்த நாள்
01
மே
2023
08:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், சித்திரை பெருவிழா தேரோட்டம், இன்று(01ம் தேதி) காலை கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
உலக பிரசித்தி பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஏப்.17ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, காலை,மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடந்தது. விழாவின் முக்கிய நிழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(01ம் தேதி), காலை 5:00 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் தேருக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, மேல வீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்திற்கு வந்தடைந்தது.
பின்னர், 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருள, தேரோட்டத்தை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகாட்சி மேயர் ராமநாதன், அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் கவிதா, சதயகுழுவினர் உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர் – கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்பாக பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர். சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன. நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து இருந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனால் ஊரே விழா கோலம் பூண்டிருந்தது.
தேர் அளவு: தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாகும். தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரத்திற்கு பிறகு, 43 டன் எடையாகும்.