பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
தர்மபுரி: தர்மபுரியில், மழைவேண்டி ஏரி மதகில் சிறப்பு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள பெரும்பலான ஏரிகள் வறண்டு உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் கருகி வருகிறது.தர்மபுரி அன்னசாகர பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்ய முடிவு செய்தனர். நேற்று மாலை, 5 மணிக்கு அன்னசாகரம் துரோபதி அம்மனுக்கு மழை வேண்டி களி படைத்து சிறப்பு பூஜை நடந்தது.அங்கிருந்து தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்ற அன்னசாரம் பெரிய ஏரி மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையை தொடர்ந்து ஏரியில், 200க்கும் மேற்பட்ட பக்கர்கள் வரிசையாக அமர்ந்து மழை வேண்டி வர்ண பகவனை பூஜித்தனர்.பின், பிரசாதமாக வழங்கப்பட்ட களியை ஏரி பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு சென்றனர். ஏற்பாட்டை துரோபதி அம்மன் கோவில் தர்மகர்த்த மாரிமுத்து, கவுன்சிலர் திருப்பதி, முன்னாள் கவுன்சிலர் ரவி, மாரியம்மன் கோவில் நிர்வாகி வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.