பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 05:05
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
சங்க இலக்கிய புகழ்பெற்ற இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் மண்டகப்படியாக நடந்து வருகிறது. ஏப். 28 ல் திருக்கல்யாணம் நடந்தது. 9ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்றநாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். காலை 5:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரத வீதி வழியாக தேர்கள் வலம் வந்தது. பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்கி வழிபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.