கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி ஸ்ரீ பாலமுருகன் கோவில் பாலாலய பூஜை நேற்று நடந்தது.
வேம்பார்பட்டியில் பழமையான ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பாலாலயம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து நேற்று பாலாலய பூஜைகள் செய்யப்பட்டது. இதையொட்டி மகா அனுக்கை, மிருத்சங்க ரஹனம், புஷ்ப அங்குரம், சாந்தி ஹோமம், திக்பந்தனம், நித்திய ஆராதனம், திருமஞ்சனம், கும்ப ஸ்தாபனம், த்வார தோரண பூஜை, கும்ப மண்டல அக்னி ஆராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தொடர்ந்து சுவாமியின் திருமேனி படங்களை வரைந்து அவற்றுக்கு பூர்ணாகுதி, யாத்ரா தானம் முதலான வழிபாடுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நித்ய பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து கோவிலை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்தப் பாலாலய பூஜையில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.