ராஜபாளையம்: ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு முத்தாலம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பஜனை கோயில் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 25ல் பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மே 2ல் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி முத்தாலம்மன் கோவில் தெரு, பெரிய சாவடி, மாதா மகேஸ்வரி கோயில், புதுக்கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நள்ளிரவு வரை சுற்றி வந்து அதிகாலை 3:00 மணிக்கு கோயில் திடலை அடைந்தது. மாலையில் வில்லிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை பொதுமக்கள் பொங்கல் வழிபாட்டிற்கு பின் மாலை 5:00 மணியளவில் மதுரை ரோடு கொலுசு பாறை ஊரணியில் அம்மன் உருவச்சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு முத்தாலம்மன் கோயில் விழா கமிட்டியார் செய்தனர்.