முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா : விளக்குமாறால் அடித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 04:05
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் மாமன் மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விளக்குமாறால் அடித்து நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரு நாட்கள் நடந்த இக்கோயில் பொங்கல் விழாவில் பக்கத்து கிராமம் கன்னியப்பபிள்ளைபட்டியில் முத்தாலம்மன் சிலை செய்து தலையில் சுமந்து ஊர்வலமாக சுற்றி வந்தனர். மறவபட்டி முத்தாலம்மன் கோயிலில் சக்தி கிடா வெட்டி அம்மன் சிலையை வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, தீச்சட்டி, முளைப்பாரி எடுத்தனர். 2ம் நாள் விழாவில் சிறப்பு பூஜைகளுக்குப் பின் மாமன் மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் கோயில் முன்பு கூடினர். நீண்ட கயிறால் தங்களை ஒருவருக்கு ஒருவர் பிணைத்துக் கொண்டனர். கோயில் முன்பு சகதியுடன் கொண்ட விளக்குமாறால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு கோயில் முன்பு ஆடினர். இவ்வாறு செய்வதால் மாமன் மைத்துனர் உறவு முறை நீடிக்கும் என்றும், அவர்களுக்கான கஷ்டம் விலகும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.