பதிவு செய்த நாள்
05
மே
2023
04:05
கூடலுார்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் தமிழக கேரள பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். தமிழக வனப்பாதை பளியன்குடி, நாயக்கர் தொழு வழியாக கூடுதல் பக்தர்கள் சென்றனர்.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., தூரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ.,தூர நடைபாதையும் உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பராமரிப்பின்றி கிடந்த இக்கோயில் வளாகத்தில் முட்புதர்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டிருந்தது. கண்ணகி பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் அங்குள்ள துர்க்கை அம்மன், சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணியளவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மலர் வழிபாடு, பொங்கல் வைத்தலும், மாலையில் பூமாரி நிகழ்ச்சியும் நடந்தது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களை அழைத்துச் செல்ல 250 ஜீப்புகள் இயக்கப்பட்டன.கேரள வனப்பாதையில் ஜீப்பிலும், நடந்தும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.
தமிழக வனப்பாதை: கேரள வனப்பகுதி வழியாக செல்லும் போது கேரள வனத்துறையினரின் கெடுபிடிகளை தவிர்க்க இந்த ஆண்டு தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக 3 ஆயிரத்து 280 பக்தர்கள் நடந்து சென்றனர். பளியன்குடி வனப்பாதையில் கூடலூர் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் உணவு வசதியும், மருத்துவ முகாமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு முதன் முறையாக தமிழக வனப் பகுதியில் மற்றொரு பாதையான நாயக்கர்தொழு, பஞ்சு புல்தேரி வழியாக கோயில் வரை செல்லும் 3.8 கி.மீ., தூர வனப்பாதையிலும் 200 பேர் வரை நடந்து சென்றனர். தமிழக வனத்துறையினர் ஆங்காங்கே முகாமிட்டு பக்தர்களுக்கு உதவினர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பிரசாதம்: கண்ணகியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள் மற்றும் பெண்களுக்கு வளையல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அட்சயப் பாத்திரம் மூலம் அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.