கூடலுார்: கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கூடலூரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கூடலழகிய பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் கோயில் போன்றே இக்கோயிலின் அமைப்பு உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு காப்புக் கட்டுதலுடன் துவங்கிய விழாவில் சக்கரத்தாழ்வார் வீதி உலா மற்றும் கோட்டை கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பால்குடம், தயிர் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். தங்களது விவசாய நிலத்தில் நெல் பயிரிடும் முன்பாக இக்கு கோயிலுக்கு வந்து விதை நெல்மணிகளை பிரசாதமாக பெற்று செல்வர். நேற்று இரவு கோயிலில் இருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் கிளம்பிய உற்சவர் கூடலழகிய பெருமாள் முக்கிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. அனைத்து சமுதாய மக்களின் மண்டகப் படிகளில் எழுந்தருளி கோயிலை அடைந்தது. முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்தவர் கூடலூரைச் சேர்ந்த அண்ணல் பேயத்தேவர். நீர் மேலாண்மையை அறிந்திருந்த இவர் அணை கட்ட பெரும் பங்களிப்பாற்றினார். கட்டுமான பணிகளுக்காக ஆட்களை திரட்டி அனுப்பி உதவி புரிந்தார். கூடலழகிய பெருமாள் கோயிலையும் நிர்வகித்து வந்தார். தற்போது அவரது வழிவந்த வாரிசுகள் தற்போது கோயிலை நிர்வகித்து வருகின்றனர்.