திருப்பரங்குன்றம் கோயிலில் அணைந்து கிடக்கும் அணையா விளக்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 04:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூன்று அணையா விளக்குகளை எரிய வைக்க நிர்வாகம் ஆர்வமின்றி இருப்பதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
கோயிலில் 24 மணி நேரமும் சுடர்விடும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்தடி மண்டபம், திருவாட்சி மண்டபம், ஆஸ்தான மண்டபத்தில் மூன்று அணையா விளக்குகள் அமைக்கப்பட்டது. அதில் பக்தர்கள் எண்ணெய், நெய் ஊற்றி வழிபடும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா தடை உத்தரவுக்கு பின்பு கோயில் திறக்கப்பட்டு பல மாதங்களாக அந்த விளக்குகளில் ஒன்று எரியவில்லை. இது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. செய்தியின் எதிரொலியாக கோயில் துணை கமிஷனர் சுரேஷ் உத்தரவின்படி அணையா விளக்குகள் எரிய தொடங்கின. பல நாட்களாக மூன்று அணையா விளக்குகளும் அணைந்தே உள்ளது. கோயிலுக்குள் உள்துறைக்கென 15க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்களும், 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். இவ்வளவு பணியாளர்கள் இருந்தும் அணையா விளக்கை கவனிக்க யாருக்கும் மனமில்லை என்பதுதான் வேதனை.
பக்தர்கள் வேதனை: கோயிலில் அணையா விளக்குகள் எரியாமல் அணைந்து கிடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அணையா விளக்குகளை தொடர்ந்து எரிய வைக்க மனமில்லை என்றால் அந்த விளக்குகளை யார் கண்களிலும் படாத வகையில் எங்காவது ஒரு அறையில் பூட்டி வைத்து விடலாமே என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.