பதிவு செய்த நாள்
12
மே
2023
03:05
சிதம்பரம்: சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடந்தது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு, ஒரு வருடத்தில், சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி,மார்கழி, மாசி, மாதங்களில் 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை நடராஜர் சிவகாம சுந்தரி சிறப்பு அலங்காரத்தில் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் எழுந்தருளினார். இரவு 7.30, மணிக்கு தொடங்கி 11 மணி வரை மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் புஷ்பம், பழங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்தனர்.