பதிவு செய்த நாள்
12
மே
2023
03:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தாயார் சன்னிதி விமானத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள், 2010ல் துவங்கி 2012ல் முடிந்தன.
தங்க முலாம் பூசுவதற்கு எவ்வளவு தங்கம் பயன்படுத்தப்பட்டது எனவும், அப்பணிகளை செய்யும்போது வீடியோ, போட்டோ போன்றவை எடுக்கப்பட்டதா பல்வேறு கேள்விகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, வீடியோ போட்டோ எடுக்கவில்லை எனவும், தங்க பயன்பாடு குறித்து உபயதாரர் சொல்ல மறுத்து விட்டார் எனவும் கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இதனால், தங்க முலாம் பூசுவதில், 70 கிலோ முறைகேடு நடந்திருப்பதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் டில்லிபாபு ஆகிய இருவரும், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, கடந்த ஏப்., 11ம் தேதி, ஆன்லைன் வாயிலாக புகார் அளித்திருந்தனர். இப்புகார் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் இணை கமிஷனர் வான்மதிக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், வரும் 15ம் தேதி, இணைகமிஷனர் அலுவலகத்தில், இப்புகார் குறித்து விசாரணை நடக்க உள்ளது.