பதிவு செய்த நாள்
13
மே
2023
03:05
பல்லடம்: பல்லடம் தண்டாயுதபாணி கோவில் பாலாலயம் நடைபெறுவதை முன்னிட்டு, கோவில் மற்றும் கடைகள் அகற்றப்பட உள்ளன.
பல்லடம் மங்கலம் ரோட்டில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், விநாயகர், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமையான இக்கோவிலில், நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் உத்தரவை தொடர்ந்து, தமிழக முழுவதும் கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பணி மேற்கொள்ள வேண்டிய பட்டியலில் உள்ள மாகாளியம்மன், பொங்காளி அம்மன் கோவில்களில், அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இத்துடன், தற்போது தண்டாயுதபாணி கோவிலும் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மூலவர் உட்பட சிலைகள் அனைத்தும் பாலாலையும் செய்யப்பட்டு, பொங்காளியம்மன் கோவிலில் வைக்கப்பட உள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், தண்டாயுதபாணி கோவிலை சுற்றி உள்ள கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, உரிமையாளர்களும் கடைகளை காலி செய்துள்ளனர். நாளை காலை 9 - 10.30க்குள் பாலாலய கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, பின்வரும் சில நாட்களில கோவில் மற்றும் கடைகள் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கோவில் கட்டும் பணிகள் துவங்கும். போதிய இடவசதி இல்லாததால், நவகிரக சிலைகள் தற்காலிகமாக முத்துக்குமாரசாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.. கோவில் புதுப்பிக்கப்பட்டதும், விநாயகர், முருகன் மட்டுமன்றி நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.