பதிவு செய்த நாள்
14
மே
2023
03:05
கருமத்தம்பட்டி: பாப்பம்பட்டி ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த மார்ச் 27 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தினமும் அபிஷேக, அலங்காரத்துடன் மண்டல பூஜை நடந்தது. இன்று 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து, பல்வேறு வாசனை திரவியங்கள், மூலிகைகளை கொண்டு, ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி, மகா தீபாராதனை முடிந்து, ஸ்ரீ கரிய காளியம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.