பதிவு செய்த நாள்
15
மே
2023
04:05
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை அடுத்து அரண்மனை வடிவிலான யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
காரமடை அருகே, குருந்தமலையில், ஹிந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர், பஞ்சாகர கணபதி, ஆறுமுக வேலவர், விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், ஆதி மூலவர், அகத்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன், வீரபாகு, ஆஞ்சநேயர் ஆகிய பரிவார் தெய்வங்களுக்கு, தனித்தனி சன்னதிகள் உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்த சன்னதிகளுக்கும், விமானங்கள், மயில் மண்டபம், தீபஸ்தம்பம், கொடிமரம், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டப்பட்டன. மலைமேல் செல்லும் பாதைகள் சீரமைத்து திருப்பணிகள் செய்யப்பட்டன. இதன் கும்பாபிஷேகம் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. மாதம், 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்குகிறது. ஆறு கால யாக பூஜைகள் நடைபெற உள்ளதை அடுத்து, கோவில் வளாகத்தில் அரண்மனை வடிவிலான யாகசாலை, தேவகோட்டையைச் சேர்ந்த சபரி குழுவினர், அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 32 யாக குண்டங்கள், நான்கு பெரிய வேதிகைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.