பதிவு செய்த நாள்
16
மே
2023
12:05
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் திருக்கோயிலில் 200 ஆண்டுகள் பழமையான மனித வாழ்வியல் சிலைகள் சேதமடைந்து கிடக்கிறது. இதனை பராமரிக்காத ஹிந்து அறநிலையத்துறைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நூற்றாண்டில் உருவானது. இக்கோயிலில் உலக பிரசித்த பெற்ற நீளமான 3ம் பிரகாரத்தை 1740 முதல் 1770 வரை கருங்கல் தூண்களுடன் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள மூன்று பிரகாரங்கள், அனுப்பு மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ராஜகோபுரங்களில் உள்ள சிலைகள், ஓவியங்கள் கலை நயத்துடன் வடிவமைத்து உள்ளனர். தீர்த்த தலமான இக்கோயிலில் ஆன்மீகமும், கலைநயம் மிக்க சிற்பங்கள் கூடிய கட்டடமைப்புகள் பக்தர்களுக்கு இறை நம்பிக்கையும், மனதிற்கு அமைதியும் அளிக்கிறது.
வாழ்வியல் சிலைகள் : கோயில் கிழக்கு நுழைவு வாசல் அனுப்பு மண்டப தூண்களில், அக்கால மக்களின் வாழ்வியல் முறை குறித்து தத்ரூபமாக 6 அடி உயரத்தில் சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்ட சில மூலப்பொருள்களால் சிலையை வடிவமைத்து உள்ளனர். இவைகள் 200 ஆண்டுக்கு மேலான பழமையானது ஆகும். இதனை காணும் பக்தர்கள், அக்கால மக்களின் நாகரீகம், உடைகள், சடங்குகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
பாராமுகம் : இச்சிலைகளை ஹிந்து அறநிலைத்துறையினர் பராமரிக்காமல் விட்டதால் சிலையின் கை, கால்கள் என 40 முதல் 60 சதவீதம் வரை சேதமடைந்து கிடக்கிறது. இதனை புதுப்பிக்கா விடில் ஒரிரு மாதங்களில் சிலைகள் முழுவதுமாக இடிந்து விழுந்து அபாயம் உள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து வி.எச்.பி., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஆ.சரவணன் கூறுகையில் : இக்கோயிலுக்கு வரும் பக்தரிடம் தரிசனம், நீராடல், உண்டியல் காணிக்கை மூலம் பணத்தை பறிக்கும் தமிழக அரசு, உடைந்து கிடக்கும் வாழ்வியல் தத்ரூப சிலைகளை புதுப்பிக்க முன்வரவில்லை. இதன் மூலம் ஹிந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை, கலாச்சாரத்தை ஒழிக்கவே அரசு திட்டமிடுகிறது. இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. விரைவில் துரித நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என்றார்.