சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் கோ, கஜ , ஒட்டக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2023 03:05
மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை, ஒட்டக பூஜையை தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் செய்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கும்பாபிஷேக விழாவை நடத்திட தருமபுரம் ஆதீன திருமடத்தில் இருந்து 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சொக்கநாத பெருமான் உடன் குரு லிங்க சங்கம் பாதயாத்திரை ஆக நேற்று இரவு சீர்காழி வந்தடைந்தார். அதன் பின்னர் சொக்கநாத பெருமானை கிளை திருமடத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று கும்பாபிஷேகத்தை விழாவை முன்னிட்டு அனுக்ஞை பூஜை தொடங்கியது. முன்னதாக தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் சிறப்பு கணபதி பூஜை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோ பூஜை, கஜ பூஜை, ஒட்டக பூஜைகளை செய்ததுடன் திருமடத்தில் சொக்கநாதர் பூஜையையும் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.