பதிவு செய்த நாள்
16
மே
2023
05:05
கோத்தகிரி: கோத்தகிரி நட்டக்கல் கிராமத்தில், படுகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் மே 15ம் தேதி படுகர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி அருகே உள்ள நட்டக்கல் கிராம மைதானத்தில்,சமுதாய மக்கள் கலாச்சார உடை அணிந்து, திரண்டனர். அமைதியை போற்றும் வகையில், வெள்ளை கொடியேற்றி பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து, படுகர் சமுதாயத்தின் தந்தை என அழைக்கப்பட்ட மறைந்த ராவ்பதூர் ஆரிகவுடரின் நினைவு கூறப்பட்டதுடன், சமுதாய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய சேவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், கல்வி, கலை மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சமுதாயத்தை மேம்படுத்தும் விதமாக, ஆடம்பரத்தை தவிர்த்து, எளிமையை கடைப்பிடிப்பது; குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவது என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆடல், பாடல் இடம் பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கோத்தகிரி பொரங்காடு சீமை உட்பட, நாக்கு பெட்டா சீமை தலைவர்கள், கிராம தலைவர்கள் உட்பட, சமுதாய மக்கள் திரளாக பங்கேற்றனர்.