பதிவு செய்த நாள்
17
மே
2023
03:05
மேட்டுப்பாளையம்: முத்து மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் காமராஜ் நகரில் மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா, கடந்த, 2ம் தேதி, கணபதி ஹோமம், பூச்சாட்டுடன் துவங்கியது. 7ம் தேதி கிராம சாந்தியும், 9ம் தேதி கம்பம் நடப்பட்டது. இன்று காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமியை, பம்பை, உடுக்கை, தாரை, தப்பட்டை மேளம் முழங்க, கோவிலுக்கு அழைத்து வந்தனர். குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்த தலைமை அர்ச்சகர் மஹேந்திர குருக்கள், முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள், சிறுவர், சிறுமியர், பக்தர்கள் என ஏராளமானவர்கள், குண்டம் இறங்கி, தீ மிதித்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் அம்மனுக்கு தங்க கவசத்துடன், மகா அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். நாளை மஞ்சள் நீராட்டும், அன்னதானமும், 23ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.