சதுரகிரியில் வைகாசி பிரதோஷ வழிபாடு ; கொளுத்தும் வெயிலில் மலையேறிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2023 04:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் வெளியூர் பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறினர். வழக்கத்தை விட மிகவும் அதிகமாக வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தினமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.