6 ஆண்டுகளுக்குப் பிறகு.. குலதெய்வ வழிபாட்டிற்காக 56 கிராமமக்கள் மாட்டு வண்டியில் பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2023 04:05
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து 56க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ராஜபாளையம் அருகே கூடமுடைய அய்யனார் கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக 15 நாள் மாட்டு வண்டியில் பயணத்தை தொடங்கினர்.
கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்க்கிராமத்தில் இருந்து 56க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தங்கள் குடும்பத்துடன் தங்கி அதிகாலை 4 மணிக்கு அனைவரும் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் வகையில் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எர்ச்சீஸ்வர பொன் இருளப்பசாமி கோயில், சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி கூடமுடைய அய்யனார் கோயில், சிவகாசி அருகே உள்ள மல்லி வீரமாகாளியம்மன் கோயில் குடும்பத்துடன் மாட்டு வண்டியில் 15 நாள் பயணமாக புறப்பட்டு சென்றனர். நரியன் சுப்புராயபுரம் சேர்ந்த முத்துக்குமார் கூறுகையில், கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 56 கிராமமக்கள் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு தாய்க் கிராமத்தில் இருந்து 15 நாள் பயணமாக மாட்டு வண்டியில் சென்று குலதெய்வத்தை வழிபட்டு வருவதை தொடர்ந்து செய்து வருகின்றோம். தற்போது உள்ள சூழ்நிலையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்தும் நவீன காலத்திலும் கூட பாரம்பரிய மாறாமல் மாட்டுவண்டியில் சென்று மட்டும்தான் எங்கள் குலதெய்வ வழிபாட்டு தொடர்கிறது. இதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களிலிருந்து மக்களும் ஒன்று சேர்ந்து செல்வது வழக்கமாக உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலில் வழிபடுவது வழக்கம். கொரோனா காலத்தில் இருந்து செல்லாத காரணத்தினால் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்பு செல்கின்றோம். இதனால் எங்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நடைமுறையை எங்கள் தலைமுறைக்கு பின்பும் தொடரும் என்பதை நம்பிக்கையாக உள்ளோம். 100 கி.மீ., தூரத்தை 4 நாட்கள் கடந்து 7 நாட்கள் தங்கியிருந்து 3 கோயிலில் வழிபட்டு பின்பு மீண்டும் மாட்டு வண்டியில் சொந்த கிராமத்திற்கு செல்லப்படுகிறது. இப்பயணத்தில் போது 215 மாட்டுவண்டிகள் செல்கின்றோம். மாட்டுவண்டியில் சென்று வழிபட்டால் மட்டும்தான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும். இதுபோன்று இவ்வளவு நாள் பயணத்தின் போது எங்களுக்குள் எந்தவித சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டது கிடையாது. எங்கள் உறவுகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. இதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. சொந்தப் பந்ததுடன் சொல்லும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் நடைபயணமாக சென்று வழிபட்டனர். பின்பு மாட்டு வண்டியில் செல்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றோம்,என்றார்.