பதிவு செய்த நாள்
27
செப்
2012
11:09
பவானி: ஊர் எல்லையில் கிடக்கும் ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு, கிடா வெட்டி, கிராம மக்கள் பூஜை செய்தனர். மழை வேண்டி, ஈரோடு வட்டார கிராம மக்கள், பல்வேறு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன் பவானி - சித்தோடு நான்கு வழிச்சாலையில், குமிலம்பரப்பு என்ற பகுதியில், பழைய ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், துடப்பம், முறம் போன்ற பொருட்களை யாரோ கொட்டிச் சென்றனர். அப்படி கொட்டிச் சென்றால், தாங்கள் வசிக்கும் பகுதியை வறட்சி தாக்காது என்பது நம்பிக்கை. அதேவேளை, குமிலம்பரப்பை சுற்றியுள்ள கிராம மக்கள், தங்கள் பகுதியை வறட்சி தாக்குமோ என, அஞ்சினர். உடனே, குமிலம்பரப்பு, சித்தோடு, பேரோடு, நல்லாக்கவுண்டன் பாளையம், வசுவப்பட்டி, ராயர்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டனர். தங்கள் பகுதியில் யாரோ கொட்டிச் சென்ற பொருட்களுக்கு, கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, ஏழு ஊர்களைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர், குமிலம்பரப்பு எல்லையில் திரண்டனர். வறட்சி நீங்கி, மழை பெய்ய வேண்டி, குமிலம்பரப்பு நான்கு வழிச்சாலை ஓரத்தில், பச்சைப்பந்தல் அமைத்தனர். கருப்பண்ண ஸ்வாமியை வேண்டி, இரவு, 10 மணிக்கு கிடா வெட்டி, குவிந்து கிடந்த பொருட்கள் மீது ரத்தம் தெளித்து, பூஜை செய்தனர். கற்களை லாரியில் ஏற்றிச் சென்று, காவிரியாற்றுக்குள் போட்டு வந்தனர். இப்படிச் செய்வதால் மழை வரும் என, அங்கு கூடியிருந்த பொது மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.