பதிவு செய்த நாள்
27
செப்
2012
11:09
ஓசூர்: மழை வேண்டி, மல்ராய ஸ்வாமி சிலையை ஊர், ஊராக எடுத்து சென்று பொதுமக்கள், சுவாமிக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, நூதன பூஜைகள் செய்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காரபல்லா கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், மழை வேண்டி, மல்ராய ஸ்வாமி சிலையை அலங்கரித்து, தலைமை மீது சுமந்து ஊர், ஊராக எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.ஒவ்வொரு ஊரிலும் கிராம மக்கள், இந்த சிலையை வரவேற்று, சுவாமிக்கு தண்ணீர் அபிஷேகம் செய்து வழிப்படுகின்றனர். நேற்று மல்ராய ஸ்வாமி சிலை தின்னூர், மயிலேப்பள்ளி, சின்னதின்னூர், பட்டாகொர்லப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு எடுத்து வந்தனர். அக்கிராம மக்கள், ஸ்வாமிக்கு தண்ணீர் அபிஷேகம் செய்ததோடு, தங்களால் முடிந்த அரிசி, பருப்பு, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை ஸ்வாமிக்கு படைத்தனர்.ஊர், ஊராக சுற்றி வரும் மல்ராய ஸ்வாமி சிலை கடைசியாக காரபல்லா ஏரிக்கு எடுத்து செல்கின்றனர். அங்கு, சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரையும் அழைத்து, மழை வேண்டி சிறப்பு அபிஷேக, பூஜைகள் செய்கின்றனர்.ஊர் மக்கள் தானமாக வழங்கிய அரிசி, பருப்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உணவு சமைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.