பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியதால் 6 ஆண்டுகளுக்கு பிறகு புரட்டாசி திருவிழா நடக்கிறது.கீழப்பாவூரில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சொத்துக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தை பராமரிப்பதில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே கடந்த 2006ம் ஆண்டு கோஷ்டி மோதல் ஏற்பட்டு திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்ததால் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் திருவிழா நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் இரு தரப்பினரும் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் கீழப்பாவூர் வக்கீல் அமுததமிழ்பாண்டியன் தலைமையில் மூன்று பேர், ஓய்வு பெற்ற ஆசிரியர் தர்மராஜ் சார்பில் மூன்று பேர் என 6 பேர் கொண்ட குழுவை அமைத்து ஒற்றுமையாக திருவிழா நடத்த நேற்று முன்தினம் இரவில் அனுமதி வழங்கியது. அனுமதியை பெற்ற திருவிழா குழுவினர் இரவோடு இரவாக திருவிழாவை நடத்தும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக பந்தல் அமைக்கப்பட்டு தயாராக இருந்த கரகாட்டம், மேளம் முழங்க முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் திருவிழா ஆரம்பமானது. நேற்று மாலை சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா, உச்சிகால பூஜைகள் நடந்தது.இன்று (27ம் தேதி) காலை அம்மனுக்கு சந்தனகாப்பு பூஜை, கனி பூஜை, மாவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம், பொங்கலிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா நடத்த ஐகோர்ட் உத்தரவு வழங்கியதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.