பதிவு செய்த நாள்
27
செப்
2012
03:09
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.
நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வரலாறு: செந்தமிழ் இலக்கியக் கருவூலமாய்த் திகழும் பத்துப் பாட்டினுள் நல்லிசைப் புலவராகிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவர், இப் பட்டினப்பாலையையும் பெரும் பாணாற்றுப் படையினையும் அருளிச் செய்தவராவார். இவர் திருப்பெயர் முன்னர் அடைமொழியாக வந்த, கடியலூர், என்பதும் உருத்திரன் என்பதும், இவர் கடியலூர் என்னும் ஊரினர் என்பதையும், உருத்திரன் என்பாருடைய மகன் ஆவர் என்பதையும் நன்கு விளக்குகின்றன. தமிழகத்தே இக்கடியலூர் யாண்டுளதென்பது இன்னும் ஆராய்ந்து காணப்படவில்லை. உருத்திரங்கண்ணனார் என்பதனைப் பெயராகவே கொண்டு உருத்திரனுக்குக் கண்போன்று சிறந்த முருகன் என்னும் பொருட்டாக உரைப்பர் ஆசிரியர் மறைமலையடிகளார். இம் முருகனைக் குறிக்கும் பெயர்கொண்டு இப் புலவர்பெருமான் சைவ சமயத்தினராதலும் கூடும் என்பார். இனி, இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படையில்,
இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன்
என்றும்,
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
என்றும்,
நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டு
என்றும், இவரால் நிரலே திருமாலும், அக் கடவுள் உறையும் திருவெஃகாவும், அக் கடவுளின் திருவுந்தித் தாமரையும் பெரிதும் போற்றி உரைக்கப்படுதல் பற்றி, இவரைத் திருமாலை வழிபடும் சமயத்தினர் என்று கருதுதல் நேரிதாகாது. என்னை? பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாகிய தொண்டை மானிளந்திரையன் திருமாலை வழிபடும் சமயத்தவன் ஆகலால், அவன்பால் ஆற்றுப்படுத்திய பொருநரைக் காஞ்சிநகரத்தே, அம் மன்னனாற் போற்றப்படும் திருமாலை வழிபட்டுச் சென்மின் என அறிவுறுத்திய அத்துணையேயல்லது, இவர் தாமே திருமால்பால் அன்புடைமை பற்றி இங்ஙனம் கூறினர் என்னின், கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தோள் கடம்பமர் நெடுவேள், என முருகனை இவர் ஓதுதல் கண்டு, இவர் முருகனை வழிபடுவார்போலும் என எண்ணுதல் கூடுமன்றே! இங்ஙனம், எச்சமயத்து எத்தெய்வத்தைப் பாடினும், அச் சமயத்து அத் தெய்வத்து அன்புடையராய் நின்று அன்புணர்ச்சி ததும்பப் பாடும் வழக்கம் பண்டைநாள் தண்டமிழ்ப் புலவர் பலர்பாலும் காணப்படுவதால், இவையிற்றைக்கொண்டு இப்புலவர் சமய நெறியினைக் கண்டுரைத்தல் அரிதென்க. இனி,
ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி யவையவை பெறுமே (தொல்.மரபு-74)
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின் விளக்கவுரையில், பேராசிரியர், ஊரும் பெயரும் என்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங் கவுசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன என விளக்கிச் செல்லுதலால், இவர் பண்டைநாள் தண்டமிழ்நாட்டில் வாழ்ந்த பால்வேறு தெரிந்த நால்வேறு வகுப்பினுள் அந்தணர் வகுப்பினர் என்பது உணரப்படும். இனி, இப் புலவர்பெருமான் இயற்றியருளிய செய்யுட்கள் தம்மை ஓதுவோர் பன்முறையும் மறித்து மறித்து நோக்கிப் புதுப்புதுப் பயன்கொள்ளுதற்குரிய விழுமிய பொருள் பொதிந்த வீறுடைய தமிழ்ச் சொற்களாலியன்று கற்போர் உளத்தே கழிபேருவகையைத் தூண்டும் இயல்புடையனவாகும். இப்பட்டினப்பாலை, ஆசிரியமும், வஞ்சியுமாகிய ஓரினத் திருவகை யாப்பான் இயங்குதலின், ஓதுங்கால் இனிய ஓசையின்பந் ததும்ப இழுமெனச் செல்கின்றது.
பிற்றைநாட் புலவர்கள் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம், அரசியற்படலம் எனத் தங் காவியங்களிலே பற்பல படலங்களை வகுத்துக்கொண்டு, பன்னூறு செய்யுட்களால் பாரித்துரைத்த செய்திகளை இப் பட்டினப்பாலையின் தொடக்கத்திருந்து 218 அடிகளில் காணலாம். இவ்வடிகள் ஒரு சில, ஒரு படலந்தரும் இன்பத்தினும் பன்மடங்கு இன்பம் நல்கும் இயல்புடையனவாகும். இவ்விருநூற்றுப் பதினெட்டு அடிகளும், தொடர்ந்து உணர்ச்சியுடன் ஓதுவோர் உளத்தே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த சோணாட்டைக் கண்கூடாகத் தோற்றுவித்து அளவிலாத காட்சிகளை நல்கி ஆற்றொணாத பேரின்பத்தைத் தோற்றுவிக்கும் கடவுட் பண்புடையனவாம்.
உலகமெல்லாம் மழைமறுத்து வற்கடகாலமாகிய பொழுதும் சோழமன்னர் தம் செங்கோலறத்தாலே பொன்னி மாநதி பூம்புனல் பரந்து சோணாட்டகத்தே பொன்கொழித்துக் கிடத்தலையும், கோடைக் காலத்தும் விளைவறாத பயன் பழுநிய அகன்ற மருதத் தண்பணை வளநாட்டையும், ஆங்குக் கரும்பாலைகளிலே மிக்கெழும் புகை நீர் நிறைந்த செய்யிற் செழித்த நெய்தற்பூவையும் வாடச் செய்தலையும், மிக்குவிளைந்து கிடத்தலாலே பசுங்கதிரையே மேய்கின்ற காரெருமைகளையும், அவையிற்றின் கன்றுகள் பால் நிரம்பப் பருகுதலாலே பகற் பொழுதிலே பிற உணவு வேண்டாது உயரிய நெற்கூடுகளின் நீழலிலே இன்றுயில் கொண்டு கிடத்தலையும், யாண்டும், தென்னை, வாழை, கமுகு, மஞ்சள், மாமரங்கள், சேம்பு, இஞ்சி முதலியன பயன் கெழுமி நிறைந்த குலைகளும் கிழங்கும் திகழ நிற்றலையும், இல்லங்களிலே மகளிர் நெல்லுலர வைத்திருத்தலையும், முக்காற் சிறுதேர்களைப் பொற்காற் புதல்வர் உருட்டி ஆடுதலையும், கொழுவிய குடிகள் நெருங்கிய பாக்கங்களையும், ஒன்றை ஒன்று அணுகியுள்ள எண்ணிறந்த சிற்றூர்களையும், இப் பாக்கங்களையும் குறும்பல்லூரையும் அகத்தே உடைத்தாய்ப் பரந்து கிடக்கும் நனி பெரிய சோணாட்டையும், அந்நாட்டின்கண் கடற்கரை யருகிலுள்ள உப்பங்கழிகளிலே நிரல்படக் குதிரைகளைப் பிணித்தாற் போன்று தறிகளிலே பிணிக்கப்பட்ட படகுகளையும், புலியிலச்சினை செதுக்கப்பட்ட பெரிய கதவுகள் அமைந்த இல்லத்தே உள்ள அடுக்களையில் சோறுவடித் தொழுக்கிய கொழுங்கஞ்சி தெருவிலே யாறுபோலப் பரந்து ஒழுகுதலையும், ஆண்டு கொழுத்த ஏறுகள் போரிடுதலாலே எழுந்த துகள் திங்கள் வெண்சுதை தீற்றிய மாடங்களிலே கதுவி மாசுறுத்தலையும், சிறிய குளமமைந்த முற்றத்தையுடைய எருத்துச் சாலைகளையும், தவப் பள்ளிகளிலே தாபதர்கள் விளங்கிய சடையினராய்த் தீயோம்பலையும், தழைத்துத் தாழ்ந்த பூம்பொழில்களையும், சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் இணையேரிகளையும், இன்னோரன்ன எண்ணிறந்த காட்சிகளையெல்லாம் இப் பட்டினப்பாலையைப் பயில்வோர் அகத்தே கண்டின்புறுதல் ஒருதலை என்க.
பெறற்கருந் தொல்சீர்த் துறக்கமேய்க்கும் பொய்யாமரபின் பூமலி பெருந்துறை........ முட்டாச் சிறப்பின் பட்டினப் பாலையைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பண்ணுறப் புனைந்து சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கே சூட்டினர் என்ப இதன் பழைய உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் முதல் நேற்றிருந்த ஆசிரியர் மறைமலையடிகள் வரையுள்ள புலவர் பெருமக்கள். இனி இப் பட்டினப்பாலை முதலியவற்றை ஆராய்ந்த மகாவித்துவான். ரா. இராகவையங்கரர் அவர்கள் தமது நுண்ணிய ஆராய்ச்சிவன்மையால் பட்டினப் பாலை கொண்டோன் கரிகாலன் அல்லன், திருமாவளவன் என்னும் மற்றொரு மன்னவனே என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். கரிகாலனாக திருமாவளவனே ஆக, இப் பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவனாகிய முடியுடைச் சோழ வேந்தன் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் நல்கினான் என்னும் செய்தி கேட்டு, வாழ்க தமிழ் வளர்த்த மன்னன்! வாழ்க தமிழ் பாடிய புலவன்! வாழ்க தமிழ் வழங்குந் தண்டமிழ் நாடு! என யாமும் போற்றுகின்றோம்.
ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் இப் பட்டினப்பாலையில் முன்னர்க் காவிரிப் பேரியாற்றின் பெருஞ்சிறப்பை ஒருசில அடிகளாலே நன்கு விளக்கிப் பின்னர்க் காவிரிப்புனல் பரந்தோம்பும் சோழநாட்டின் சிறப்பியல்களை நன்கு தேர்ந்தெடுத்து மணிகோத்தாற் போன்று அழகுறச் செய்யுள் செய்கின்றார். பின்னர்ச் சோணாட்டின் தலைநகராகிய பட்டினத்தின் சிறப்பைப் பரக்கவோதிப் பயில்வோருளத்தே அதனை நன்கு உருப்படுத்திவிடுகின்றார். இடையே பாலையொழுக்கத்தைச் சிறிது கூறி முடிவினைப் பயில்வோர் அவாவும்வகை செய்கின்றார். அதற்கு மேலே இடைப்பிறவரலாகப் பாட்டுடைத்தலைவன் தெறல் அளி முதலிய சிறப்புக்களைக் கிளவித்தலைவன் கூற்றில் வைத்து மிக அழகாகச் செய்யுள் புனைகின்றார். இறுதியில், பொருள் தேடச்செல்லும் காட்டின் கொடுமைக்குத் திருமாவளவன் வேலினையும் தலைவியின் தோள்கட்கு அவன் செங்கோலினையும் உவமையாக எடுத்துக் கூறாமாற்றால், பாட்டுடைத்தலைவனை நன்கு உயர்த்தோதியும், அவ்வாற்றானே அகத்திணைப் பொருளையும் நன்கு உயர்த்தோதியும் முடிக்கும் செய்கைத்திறம் மிக மிக இனிமை பயப்பதாக அமைந்துள்ளது.
இப்பட்டினப்பாலை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தின் இயல்பினை நன்கு தெரித்தோதும் தலைசிறந்ததொரு வரலாற்று நூலும் ஆகும் எனல் மிகையன்று. இவ்வாசிரியர் பாடியனவாகப் பத்துப்பாட்டுள், இப்பட்டினப்பாலையும், பெரும்பாணாற்றுப்படையும், குறுந்தொகையில் 352ஆம் செய்யுளும், அகநானூற்றில் 167ஆம் செய்யுளும் ஆகிய நான்கு செய்யுள்கள் உள்ளன. இவர் காலத்துப் புரவலர் தொண்டைமானிளந்திரையனும், கரிகாலனும் ஆவர். நல்லிசைப் புலவர்கள் கருங்குழலாதனார், வெண்ணிக் குயத்தியார், முடத்தாமக் கண்ணியார், கருங்குளவாதனார் முதலியோர் ஆவர்.
பாட்டுடைத் தலைவன் வரலாறு
திருமாவளவன்
பத்துப்பாட்டினுள் ஒன்பதாம் பாட்டாகத் திகழும் இப் பட்டினப்பாலை என்னும் இவ்வருமைத் திருப்பாடல் கொண்டோன் கரிகாற் பெருவளத்தான் என்னும் புகழ்மிக்க சோழ மன்னனே ஆவான் என்பது சான்றோர் பலரும் கொண்டிருந்த கொள்கையாம். பட்டினப்பாலையின்கண், இச் சோழமன்னன் திருமாவளவன் என்னும் பெயர் ஆசிரியர் இளங்கோவடிகளானும், வேறுசில சான்றோராலும் கரிகாலன் பெயராகவே கொள்ளப்பட்டது. பத்துப்பாட்டின் உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரும் திருமாவளவன் கரிகாலன் என்றே கொண்டனர். சிலப்பதிகார ஏட்டுப்படிகளுள் ஒன்றில் மட்டும் காணப்பட்டனவும், அக்காரணத்தால் பாடத்தோடு சேர்த்துப் பதிக்கப்படாது விலக்கப்பட்டனவுமாகிய,
திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை
ஒருதனி யாண்ட செருவடு திண்டோள்
கரிகாற் பெரும்பெயர்த் திருமா வளவனைப்
பாலை பாடிய பரிசிலன் றொடுத்த
மாலைத் தாகிய வளங்கெழு செல்வத்
தாறைந் திரட்டியும் ஆயிரங் குடிகளும்
வீறுசான் ஞாலத்து வியலணி யாகி
உயர்ந்தோ ருலகிற் பயந்தரு தானமும்
இல்லது மிரப்பு நல்லோர் குழுவும்
தெய்வத் தானமுந் திருந்திய பூமியும்
ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும்
விண்ணவர் உலகினில் நண்ணிடு நகரமொ
டெண்ணுவரம் பறியா விசையொடு சிறந்த
எனவரும், இச் செய்யுளடிகள் ஆசிரியர் இளங்கோவடிகளாற் செய்யப்பட்டன அல்ல எனக் கருதிய விடத்தும், இவ்வினிய அடிகளை யாத்த சான்றோர் திருமாவளவன் என்னும் பெயர் கரிகாலன் பெயரே என்றும், கரிகாலனே பட்டினப்பாலை கொண்டோன் என்றும் கருதியமை புலனாம்.
இனி, பாஷா, கவிசேகர, மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் மேற்கூறிய முன்னையோர் முடிபெருங் கொள்கையினின்றும் மாறித் திருமாவளவன் என்னும் பெயர் கரிகாலனைக் குறிப்பதன்றென்றும், அது சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் மற்றொரு மன்னனுக்குரிய பெயர் என்றும், தம் ஆராய்ச்சி நூலுள் கூறுகின்றனர். குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான். சோழ மன்னர்களிற் சிறந்ததொரு மன்னனே ஆவன். இம் மன்னன், ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், இடைக்காடனார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், ஐயூர் முடவனார் என்னும் நல்லிசைப்புலவர் ஒன்பதின்மரானும் பாடப்பெற்றவன். இம் மன்னனைப் பாடினவாக உள்ள பாடல்கள் புறப்பாட்டிற் பதினெட்டுப் பாடல்களாகும். இவ்வொன்பதின்மர் நல்லிசைப்புலவர் பாடிய பதினெட்டுப் பாடளுள்ளும் யாண்டேனும், இம் மன்னன் திருமாவளவன் என்னும் பெயராற் குறிக்கப்பட்டானில்லை. இவருள் ஐயூர் முடவனார் பாடிய செய்யுளில் (புறம்-228) இம்மன்னன், நெடுமாவளவன் என்று கூறப்படுகின்றான். நெடுமாவளவன் என்ற பெயர்க்கண் நெடு என்னும் அடைமொழி இவன் திருமாவளவன் அல்லாத மற்றொரு மாவளவன் என்றற்கே சான்றா மல்லது, ஐயங்கார் அவர்கள் கருதுகிறபடி, நெடுநகர் திருநகர் என்றாற்போல நெடுமையும் திருவும் சிறந்த அடைகள் என்றல் பொருத்தமற்ற கூற்றாம். கிள்ளி என்னும் பெயருடைய இரண்டரசர்களை இடைதெரிந்துணர வேண்டி, நெடுங்கிள்ளி என்றும் நலங்கிள்ளி என்றும் வழங்கும் வழக்கமுண்மையும் அறிக. எனவே நெடுமாவளவன் என்னும் இப்பெயரே இவன் திருமாவளவன் அல்லன் என்பதை நன்கு விளக்குதலறிக. இனிப், பட்டினப்பாலையின்கண் இத் திருமாவளவற்குரிய சிறப்புக்களில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது,
கூருகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி (பட்டின-221-27)
எனவரும் நிகழ்ச்சியேயாகும். திருமாவளவன் இளம்பருவத்தே பகைவராற் சிறைப்பட்டமையும், தன் அறிவாலும், ஆற்றலாலும் அச் சிறையைக் கடந்து, அப் பகைவரைக் கொன்று, தனக்குரிய தாயத்தை அவன் எய்தினான் என்பதையும் இப்பகுதி கூறுகின்றது. இவ்வரலாறு திருமாவளவன் வரலாற்றில் தலைசிறந்த நிகழ்ச்சி என்பதற்கு ஐயமின்று. இங்ஙனமாகவும், புறத்தேயுள்ள பதினெட்டுப் பாடலுள்ளும், மாபெரும் புலவர் ஒன்பதின்மருள் ஒருவரேனும் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடாமை ஏன்? இஃதொன்றே இக் கிள்ளிவளவன் திருமாவளவன் அல்லன் என்பதை நன்கு விளக்குவதாம். இனிக் கரிகாற் பெருவளத்தானைப் பாடிய முடத்தாமக் கண்ணியார், தமது பொருநராற்றுப்படையுள்,
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
யெய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎந் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டம் களிறட் டாங்கு
இருபெரு வேந்தர் ஒருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
என்று இனிதே கூறிய பகுதி, முன்னர்க் காட்டிய பட்டினப்பாலைப் பகுதிக்கு ஒரு சிறிதும் முரணாது பொருந்துவதாகும். கரிகாலன் கருப்பத்திருக்கும்போதே, அவன் தந்தை இறந்தமையின் அரசியன் மரபுப்படி, தாயகம் அவனுடையதாயிற்றென்றும், அத்தாயத்தைக் கவர்தற் பொருட்டே, கரிகாலனைக் கொடுவரிக் குருளையைக் கூட்டில் அடைத்தாங்குப் பகைவர் சிறையிட்டனர் என்றும், அச் சிறையிடையே பீடுகாழ் முற்றிநுண்ணிதின் உணர நாடி நண்ணார் செறிவுடைத்திண் காப்பேறி வாள்கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தினான், என்றும் இவ்விரண்டு செய்யுட் பகுதிகளும் ஒன்றனோடு ஒன்று நன்கு பொருந்துதலோடு மேலும் பட்டினப்பாலையுள்,
பெற்றவை மகிழ்தல் செய்யான் .............. முனைகெடச் சென்று முன்சம முருக்கி என்றதனையே ஈண்டுப் பொருநராற்றுப் படையில் முலைக்கோள் விடாமாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள்வட்டம் களிறட்டாங்கு ............... வெண்ணித் தாக்கிய என இடங் குறித்து ஓதப்பட்டதென்க.
இனி, ஐயங்காரவர்கள் திருமாவளவன் சிறைப்பட்ட செய்தியைப் புறப்பாட்டில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவற்கு எப்புலவருங் கூறாமை கண்டு, இச்சிறைக்கிடந்த நிகழ்ச்சியைக் கிள்ளிவளவற்குப் பொருத்திக் காட்டல் வேண்டி ஒரு சூழ்ச்சியாற் பெரிதும் இடர்ப்படுகின்றார். அஃதாவது, மாறோக்கத்து நப்பசலையார் மலையாள சோழிய ஏனாதி திருக்கண்ணனைப் பாடிய (புறம்-174) செய்யுளில், ஒரு சோழ மன்னன் தன் பகைவர்க்கஞ்சி முள்ளூர்க்காட்டில் ஓடி ஒளிந்தானாக, அரசின்றி அல்லலுற்ற சோணாட்டிற்கு அம் மன்னனை மீண்டும் கொணர்ந்து திருக்கண்ணன் மன்னனாக்கினான் என வரும் வரலாற்றிற் கூறப்படும் மன்னன், குளமுற்றத்துத் துஞ்சிய சோழனே ஆதல்வேண்டும்; ஆகவே இம் முள்ளூர்க்காட்டிடைக் கிடந்த செய்தியே ஈண்டுத் திருமாவளவன் சிறைப்பட்ட செய்தியாம் என உரைத்துள்ளார். இதற்குக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய நப்பசலையாரே இப்பாட்டையும் பாடுதலால் இச் சோழன் திருமாவளவனேயாவன் என்பது அவர் கொள்கை. பகைவர்க்கஞ்சிக் கானம் புகுந்து திருக்கண்ணன் உதவியால் மீண்டும் அரசுகட்டிலேறிய சோழனை, ஒன்னார், செறிவுடைத்திண் காப்பேறி வாள்கழித்து உருகெழுதாயம் ஊழின் எய்தி, எனப்பாடுதல் நகைப்பிற்கு இடமாதல் கிடப்ப, நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்த ஒரு புலவர் வாழ்நாளில், பல மன்னர் அரசு கட்டில் ஏறுதல் இயல்பாகலின், இம் மன்னன் நப்பசலையார் பாடிய காரணத்தால் கிள்ளிவளவனே ஆதல் வேண்டும் என்பது ஒருதலையன்று. மேலும், பகைவராற் சிறையிடப்பட்டமையும், சிறையிடைத் தப்பித் தன் ஒன்னாரை அடர்த்தமையும், கரிகாலற்கே யாண்டும் கூறப்படுதலும் காண்க.
இதுகாறும் கூறியவாற்றால் ஐயங்கார் அவர்கள் ஆராய்ந்து கூறிய முடிவு, பின்னரும் ஆராயற்பாற்றென்பது போதரும். ஆதலின் யாம் இப்பட்டினப்பாலை கொண்ட மன்னன் கரிகாற் பெருவளத்தான் என்றே ஆசிரியர் இளங்கோவடிகளார் முதல், மறைமலையடிகளார் இறுதியாக நல்லிசைப் புலவர் பலரும் கொண்டவாறே கொள்கின்றோம். இனிக் கரிகாற் பெருவளத்தான் இப் பத்துப்பாட்டினுள், பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் இரண்டு பாடல்களுக்கும் தலைவனாவான். இம் மன்னர் பெருமான் இப் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலீந்தான் என்னும் வரலாறு இவன் புலவர்களைப் போற்றுஞ் சிறப்பை நன்கு புலப்படுத்தும். இதனை,
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்
எனவரும் கலிங்கத்துப் பரணியிற் காண்க. இவ் வேந்தர்பெருமான் காவிரியாற்றிற்குக் கரைகண்டவன் என்றும் கூறுப. இப் பட்டினப்பாலையில் இம் மன்னனுடைய தெறற் சிறப்பும் அளிச் சிறப்பும் நன்கு தெரித்தோதப்பட்டுள்ளன.
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ
என்பன இவன் சோணாட்டிற் செய்த சீர்திருத்தங்களை நன்கு விளக்குகின்றன. மேலும், இவன் வரலாற்று விரிவினை எம்மால் வரையப்பட்ட பொருநராற்றுப்படை உரை நூலின் முகப்பினுங் காண்க.
ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லார் - தேரின்
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.
அறிமுகம்
குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறாலியலாவணத்துக் காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய இப் பனுவலுக்குப் பட்டினப்பாலை எனப் பெயர் குறித்தார். பட்டினப்பாலை என்பது, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் நூல் என விரியும். இச் செய்யுளை யாத்த நல்லிசைப் புலவரின் நோக்கம் கரிகாற் பெருவளத்தானின் வெற்றியைச் சிறப்பித்து ஓதவேண்டும் என்பதேயாம். அவர் கருதியவாறு நேரே கரிகாலன் வெற்றியைப் பாடினால் அது புறத்திணை ஏழனுள் ஒன்றாகிய வாகைத் திணையின்பாற்படும். அவ் வாகைத் திணைப்பொருளே அமையப் பாடியும் இப்பாட்டினுள் நுணுகியதொரு சூழ்ச்சியால் அகத்திணை ஏழனுள் ஒன்றாகிய பாலைத்திணைப் பொருள்பட இதனை அகப்பொருட் பாடலாக யாத்து இப் பனுவலின் இன்பத்தைப் பெரிதும் மிகுவித்த செய்கைத்திறம் பெரிதும் போற்றற்பாலதாம். பாலை என்பது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் அகனைந்திணை ஒழுக்கங்களுள் ஒன்றாம். பாலை என்பதற்குப் பாடல்சான்ற புலனெறி வழக்கில், பிரிதல் என்பது பொருளாம். பிரிதலையேன்றிப் பிரிதற்குரிய நிமித்தங்களும் பாலை எனவேபடும். அகனைந்திணையுள்ளும் இப்பாலைத்திணையே காதல் உள்ளத்தின் ஆழத்தே கிடக்கும் அன்புணர்ச்சிகளின் அழகினை நன்கு தெரியக்காட்டும் தன்மையுடையதாம்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள்-71)
என்பது பொய்யில் புலவன் பொருளுரையன்றோ! அகத்தின் அன்பழகைப் புறத்தார் அறியத் தூற்றும் இத்திணை பற்றிய பாடல்களே அகத்திணையுள்ளும் ஓதுவார் உளமுருக்கும் பெற்றி வாய்ந்தனவாதல்பற்றி இத் திணைப் பாடல்களையே நல்லிசைப் புலவர் பலரும் விரும்பித் தொடுத்தமையால் நம் சங்கத் தொகை நூலுள் இப் பாலைத்திணைப் பாடல்களே பெருவரவினவாதல் காணலாம். மேலும் இப் பாலைத்திணை, புறத்திணை ஏழனுள் ஒன்றாகிய வாகைத்திணைக்கு அகத்திணையாம். இதனை, வாகை தானே பாலையது புறனே. (தொல்-புறத்-18) என்னும் தொல்காப்பிய நூற்பாவானே உணர்க. எனவே, கரிகாற் பெருவளத்தானை அவன் வாகையைச் சிறப்பித்துப் பாடவெண்ணிய ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் அதற்கினமாகிய பாலைத்திணைப்பற்றியே இப்பாடலை யாத்தமை அவர்தம் நுண்ணறிவுடைமையை நன்கு புலப்படுத்தும் என்க. இப்பட்டினப்பாலை வஞ்சியடிகள் பெருவரவினவாக ஆசிரிய அடிகளும் விரவப்பெற்ற ஓரின்னிசைப் பாடலாகும். இங்ஙனம் ஒன்றற்கொன்றியைபுடைய இருவேறு இசைகளை விரவித் தொடுத்ததனால் இப்பாட்டு ஓதுதல் மாத்திரையானே பெரிதும் உவகை பயப்பதாகின்றது. இதனை வஞ்சி நெடும்பாட்டெனவும் வழங்குப. நீண்ட இப்பட்டினப் பாலையின் உயிராக அமைந்த பாலைத்திணை தழுவிய அடிகள்,
................................... பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
வாரேன் வாழிய நெஞ்சே.................. (219-20)
திருமா வளவன்.................
வேலினும் வெய்ய கானம்அவன்
கோலினும் தண்ணிய தடமென் றோளே
என்னும் இவைகளேயாம். இவை இன்மையதிளிவும் உடைமைய துயர்ச்சியும் எடுத்துக்காட்டி,
கேள்கே டூன்றவும் கிளைஞ ராரவும்
கேளல் கேளிர் கெழீஇனர் ஒழுகவும்
ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து
பொருள்வயிற் செல்ல வலித்த நெஞ்சை நோக்கித் தலைமகன் கூறியதாக அமைந்தனவாம். இவ்வடிகளே பட்டினப்பாலையின் முதல் ஆவன.
இனி, அங்ஙனம் பொருட்சிறப்பை எடுத்துக்காட்டிய நெஞ்சை நோக்கி ஏ நெஞ்சே! பொருளின் சிறப்பை யானும் அறிகுவல்; அறியாதேன் அல்லன் கண்டாய் ! அப்பொருள்களிற் றலைசிறந்ததாகக் கருதப்படும் காவிரிப்பூம்பட்டினமே என் கைவரப் பெறினும், அதுவும் பொருளாக மாட்டாது. அதனினும் சாலச் சிறந்த பொருள் இப்போதே என் கையகத்துள்ளது! நீ கருதும் பொருளைப் பெறவேண்டுமாயின் இப்பொருளை யான் நீத்தன்றோ வருதல் வேண்டும்! யான் இதனைக் கைநெகிழ விடின் இதன் அழகு இப்போதே கெடுங்கண்டாய்!
அதுதான் யாதோ எனில்? என் அருமைக் காதலியின் தடமென்றாளே; மேலும் நீ விழையும் பொருள் பெறக்கருதி யாம் செல்லக்கடவ காடு திருமாவளவன் வேலினும் வெப்பமிக்கன. மற்று யாம் பெற்றுள்ள இவள் தடமென்றோள்களோ, அம்மன்னன் செங்கோலினும் தட்பமிக்கன காண்; ஆதலால் யான் இவளைப் பிரிந்து நின்னோடே வருவேனல்லேன்; நீ வாழ்க என்பது இவ்வடிகளின் கருத்தாம். இனி இங்ஙனமாகத் தம் செய்யுட்கு அடிகோலிக் கொண்ட புலவர் பெருமான், நீ கருதிய பொருள் கிடக்கப் பட்டினமே பெறுவதாயினும் என்பான் அப் பட்டினத்தின் சிறப்பை அழகுற விரித்தோதும் பகுதியே பட்டினப் பாலையின் முற்பகுதியாகிய 218 அடிகளும் என்க. இச் சூழ்ச்சியால் உருத்திரங்கண்ணனார் பட்டினத்தைத் தாம் வேண்டியவாறு தலைவன் கூற்றில் வைத்து இனிதே பாடுகின்றார்.
இனி, தன் காதலியின் பிரிதற்கரிய தடமென்றோள் எத்தகைய தென்றும், தான் செல்ல வேண்டிய கானம் எத்தகையதென்றும் இரண்டனையும் இரண்டு உவமைகளான் விளக்குவானாய்த் திருமாவளவன் தெறலுக்கும் அளிக்கும் அறிகுறிகளான வேலினையும் கோலினையுமே உவமைகொண்டு அவற்றையுடைய திருமாவளவனுடைய தெறற்சிறப்பையும் அளிச்சிறப்பையும் நன்கு அழகுற இனிதே ஓதுவன எஞ்சிய அடிகள். எனவே பட்டினம் என்னும் சொற்கு அடையாகி வந்தது முற்பகுதி. திருமாவளவன் என்னும் சொற்கு அடையாகி வந்தது பிற்பகுதி. இவ் விரண்டு பகுதிகளும் தலைமகளின் சிறப்பைக் காட்ட மாறுபடவந்த உவமத் தோற்றத்தின்கட்படும். ஒரு நோக்காற் காணுங்கால் இப்பட்டினப் பாலையில் பாலை ஒழுக்கமே தலைமை பெற்றதுபோற் றோன்றும்; மற்றொரு நோக்கால் நோக்குழி, திருமாவளவனின் வாகையே வளமுற்றுத் தலைமைபெறும். இங்ஙனமாகச் செய்யுள் யாத்தல் பண்டைக்கால நல்லிசைப் புலவர்க்கே கைவந்த வித்தை போலும்!
இனி, தலைவியினைப் பிரிதல் அரிதென நெஞ்சிற்குக் கூறியதும், தலைவியை வற்புறுத்திப் பின்னும் பிரிதற்கே நிமித்தமாகலின், பாலையே என்பர் தொல்காப்பியர். இதனை,
செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும் (தொல்.கற்பு-44)
என்னும் நூற்பாவினால் உணர்த்தினர்.
தலைவன் கருதிய போக்கினை இடையிலே தவிர்ந்திருத்தல் பிரிந்துபோதல் ஆற்றாமைக் கன்று. தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சிமாத்திரையாகும் என்பது இந்நூற்பாவின் பொருளாம். இங்ஙனங் கூறாக்கால், செலவழுங்கல் பிரிதற்கு ஏதுவாகாது, உடனுறைவிற் கேதுவாய்ப் பாலைத் திணையாதல் இல்லையாதல் அறிக. எனவே, செலவழுங்கி ஆற்றுவிக்க அவள் ஆற்றியிருத்தல் இப்பிரிவிற்கு நிமித்தமாம் இதுவும், பாலையே யாயிற்றென்பது கருத்தென்க. இனிக் காவற் சாகாடுகைக்கும் மன்னற்குத் தெறலுடைமையும், அளியுடைமையும் இன்றியமையாப் பண்புகளாம். இது உலகின் செழிப்பிற்கு வெப்பமும் தட்பமும் இன்றியமையாதன வாயினாற்போல் என்க. இதனை,
காய்சினந் தவிராது கடலூர்பு எழுதரும்
ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
திங்கள் அனையை எம்ம னோர்க்கே (புறம்-59)
என்றும்,
நட்டவர் குடியுயர்க்குவை
செற்றவர் அரசுபெயர்க்குவை (மதுரைக்-121-2)
என்றும், சான்றோர்கள் இவ்விரு பண்புகளையும் சேரவைத்துச் சிறப்பித்தலால் உணரலாம். உலகின்கண் தீமையை அடர்த்தொழித்தலும், நன்மையை அருளிவளர்த்தலுமே அரசற்குத் தலையாய கடனாதல்பற்றி, இவ்விரு பண்புகளும் அரசனுக்கு இன்றியமையாதனவாயின என்க. இனி நல்லிசைப்புலவரான உருத்திரங்கண்ணனார் ஒப்பற்ற தலைவியின்பாற்பெறும் இன்பத்திற்குத் திருமாவளவனுடைய செங்கோலை உவமையாக எடுத்தவாற்றால் உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை (தொல்-உவமம்) என்னும் விதியால் திருமாவளவனுடைய செங்கோலின் தண்மையை நன்கு உயர்த்தோதியும், அச் செங்கோலினும் தண்ணிய என்னுமாற்றான் தலைவியின் இன்பம் ஒப்பற்றதாவதை எடுத்தோதியும் இருவழியும் சிறப்பிக்கும் நுணுக்கம் அறிந்து மகிழ்க.
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு
என்புழித் துயிலினும் உலகு தாழ்ந்ததாகாது. அதன் சிறப்பே விளங்கித் தோன்றலும் போல, இவ்வுவமையால் தலைவியின்பம் இவ்வுலக வின்பங்கள் அனைத்தினும் சிறந்த இன்பம் எனல்போதருதலும் கொள்க.