Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டினப்பாலை பகுதி-1
முதல் பக்கம் » பட்டினப்பாலை
பட்டினப்பாலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
03:09

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா  5

மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்  
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி   10

நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கட்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழல் துயில்வதியும்   15

கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
அனகர் வியன்முற்றத்துச்   20

சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்  25

விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு  
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி  30

பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்
பொழிற் புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன்   35

உருகெழுதிறல் உயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
இருகாமத் திணையேரிப்
புலிப்பொறிப் போர்க்கதவின்   40

திருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி   45

ஏறுபொரச் சேறாகித்
தேரொடத் துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டுந்   50

தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்  55

மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்
முதுமரத்த முரண் களரி   
வரிமணல் அகந்திட்டை   60

இருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்
வறளடும்பின் மலர்மலைந்தும்   65

புனலாம்பற் பூச்சூடியும்
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப்  70

பெருங்சினத்தாற் புறக்கொடாஅது
இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
பறழ்ப்பன்றிப் பல்கோழி   75

உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்  
கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய   80

குறுங்கூரைக் குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலையுணங்கு மணல்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்  85

சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர   90

பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானல்
மாமலை யணைந்த கொண்மூப் போலவும்  95

தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும்
மலியோத் தொலிகூடல்
தீதுநீங்கக் கடலாடியும்
மாசுபோகப் புனல்படிந்தும்   100

அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல்விளை யாடிப்  
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்  105

துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்  110

நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
பாட லோர்த்தும் நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்தும்
கண்ணடைஇய கடைக்கங்குலான்  115

மாஅகாவிரி மணங்கூட்டும்
தூஉவெக்கர்த் துயில் மடிந்து  
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியந்தெருவின்
நல்லிறைவன் பொருள்காக்கும்.   120

தொல்லிசைத் தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது   125

வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும   130

அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி   135

மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற  140

ஏழகத் தகரோ டுகளு முன்றிற்  
குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயும் உயர்மாடத்துச்   145

சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குல்
தூசிடைத் துகிர்மேனி
மயிலியல் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர   150

வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்  155

குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து  
மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழ கொடியும  160

வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப்   165

பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்   170

உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும்   175

மீந்தடிந்து விடக்கறுத்து
ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவுநொடைக் கொடியோடு   180

பிறபிறவு நனிவிரைஇப்
பல்வே றுருவிற் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்  
செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்   185

காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும்.  190

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்  
நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிதுதுஞ்சிக்   195

கிளை கலித்துப் பகைபேணாது
வலைஞர்முன்றில் மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை மாவீண்டவும்
கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்  200

நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்   205

நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாத  210

பல்பண்டம் பகர்ந்துவீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்  
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு  215

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்  
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் 220

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்  225

செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழினெய்திப்  
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள்  230

உகிருடை யடிய ஓங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப்  235

பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை எடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீட  240

மாவிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவிய மயங்கி நீரற்று
அறுகோட் டிரலையொடு மான்பிணை உகளவும்  245

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப  250

பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவும்
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக்  255

சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும  260

கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில்
ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக்  265

கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப்
பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற  270

மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தன்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லரு வாளர் தொழில் கேட்ப  275

வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்
மாத்தனை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப  280

புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்  
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்  285

கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇ
பொருவேமெனப் பெயர்கொடுத்து
ஒருவேனெப் புறக்கொடாத   290

திருநிலைஇய பெருமன் னெயில்
மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும்  295

முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்   300

கோலினுந் தண்ணிய தடமென் தோள.  

உரை

திணை: பாலை. 
துறை: வேற்றுநாட் டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கியது.

1-வசையில்புகழ், என்பது தொடங்கி, 28-சோணாட்டு, என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், காவிரியாற்றின் சிறப்பும், சோழநாட்டு மருதநிலவளனும், பாக்கமும், பிறவும் கூறப்படும்.

மலைத்தலைய கடற் காவிரி

1-7 : வசையில்புகழ் ................. பொன்கொழிக்கும்

பொருள் : வசையில் புகழ் வயங்கு வெண்மீன் - குற்றமற்ற புகழையுடைய விளங்குகின்ற வெள்ளியாகிய மீன், திசை திரிந்து தெற்கு ஏகினும் - தான் நிற்றற்குரிய வடதிசைக்கண் நில்லாமல் தென்றிசைக்கண்ணே போகினும், தற்பாடிய தளியுணவின் புள் தேம்பப் புயல்மாறி - தன்னைப் பாடிய தண்துளியையே உணவாகவுடைய வானம்பாடி வருந்தாநிற்ப மழை பெய்தலைத் தவிர்ந்து, வான் பொய்ப்பினும் தான்பொய்யா - முகில் பொய்த்து வற்கடமாயினும் தான் பொய்யாமல் நீர்ப்பெருக்கெடுத்து ஒழுகும், மலைத்தலைய கடல் காவிரி - குடகமலையிடத்தே தலையினையுடைய கடலிடத்தே புகுகின்ற காவிரியாறு, புனல் பரந்து பொன் கொழிக்கும் - நீர் பரந்து கரையிலே பொன்னைச் சேர்க்கும்;

கருத்துரை : குற்றமில்லாத புகழையுடைய விளங்குகின்ற வெள்ளிக்கோள் தான் நிற்றற்குரிய வடதிசைக்கணில்லாமல், தென்றிசைக் கண்ணே போகினும், தன்னைப்பாடுகின்ற மழைத்துளியையே உணவாகவுடைய வானம்பாடி துளிபெறாதே வருந்தும்படி, மழைபெய்தலைத் தவிர்ந்து முகில் பொய்ப்பினும், தான் நீர்பரந்து உலகோம்பலைத் தவிராததும், குடகமலையின்கண் தோன்றிக் கடலிலே புகுவதுமாகிய காவிரிப் பேரியாறு புனற் பெருக்கெடுத்துத் தன் கரைகளிலே பொன்னை ஒதுக்குகின்ற என்பதாம். பொன் கொழிக்கும் சோணாடு என இயைத்துக் கொள்க.

அகலவுரை : வசையில் புகழ் என்றதனைப் பிரித்துக் காவிரிக்கு அடையாக்கிக் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் வெண்மீன் திசை திரிந்து தெற்கேகி மழைவறக்கச் செய்தலின் வசையுடைத்தென்றும், அது தெற்கேகினும் தான்பொய்யாது புனல் பரந்து உலகோம்பலின் வசையில் புகழ் காவிரிக்கே நன்கு பொருந்தும் என்றும் நச்சினார்க்கினியர் கருதினர் போலும். எனினும், ஆசிரியர் உருத்திரங்கண்ணனார்க்கு அது கருத்தாயின் அவ்வடைமொழியை வெண்மீனோடியையச் செய்யுள் செய்யாது வசையில்புகழ் மலைத்தலைய கடற்காவிரி என்றே காவிரியோ டியையப் புனைந்திருப்பரன்றே! அங்ஙனம் செய்யுள் செய்யாமையின் அவர்க்கு அது கருத்தன்றென்க. இனி வெள்ளிக்கோள்தானும், உலகில் அரசர்கள் கோல்கோடியவழித் திரிந்து தெற்கேகுத லல்லது தானே சேர்தல் இன்மையானும், தான் திசைதிரிந்தேகு மாற்றால் மன்னர்களின் செங்கோன்மை, கொடுங்கோன்மைகளை உலகிற்கு அறிவித்தலானும் தன்னளவிற்றான் மழைக்கோளே ஆதலானும் வசையில்லாப் புகழ் உடையதே என்க.

வானத்தே தோன்றும் மீன்களில் வெள்ளி பரியதாய் ஒளிமிக்குத் தோன்றலின், வயங்கு வெண்மீன் என்றார். மின்னுதலால் உடுக்களைத் தமிழர் மீன் என்று வழங்கினர் என்க. விண்மீன்களுள் வெள்ளி முதலியன கோள்கள் எனப்படினும், மீன் என்னும் காரணப்பெயர் அவற்றிற்கும் பொருந்துதலின் அவற்றையும் மீன் என வழங்கும் வழக்கமுண்மையை நாண்மீன் விராய கோண்மீன் போல (68) என இவ்வாசிரியரே பிறாண்டும் ஓதுதலான் அறிக. இனி வெள்ளி திசை திரிந்து தேற்கேகின் உலகில் மழை பொய்த்து வற்கடம் உண்டாகும் என்னும் கொள்கையுடையர் நம் பண்டைத் தமிழ் மக்கள் என்பதனை,

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட  (புறம் 35:7-8)

என்றும்,

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
..... .......... ........... ....... .......... ............. .........
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை  (சிலப்-10:102-8)

என்றும்,

கோணிலை திரிந்து கோடை நீடினும்
தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை  (மணி-பதிகம்-24-5)

என்றும்,

பிறசான்றோர் கூறுமாற்றானும் அறிக. தற்பாடிய - தன்னைப் (முகிலைப்) பாடிய. புள் - வானம்பாடி. துன்னைத் தளிதரல் வேண்டிப் பாடாநிற்பவும் அதற்கிரங்கி ஒரு துளியேனும் துளிக்காத கொடுமை யுடையதாய் முகில் பொய்த்த காலத்தும் என முகிலின் கொடுமையை எடுத்தோதியவாறு. வானம்பாடி நிலத்திற்பட்ட நீருண்ணாதென்றும், முகில் துளிக்கும் துளியை வானிடை நின்று வாயிலேற்றுண்டு உயிர் வாழும் என்றும் கூறுப. அதனால் அத் துளிவேண்டிப் பாடிற்றென்பார் தளியுணவிற்புள் என்றார். தளி-மழைத்துளி. தேம்புதல்-துளி கிடைக்கப் பெறாது வருந்துதல். புயல்-மழை வான்; முகிலுக்கு ஆகுபெயர். தான் - ஈண்டுக் காவிரி. காவிரி பொய்யாமையை முன்னர்க் காட்டிய பிறர் கூற்றினும் காண்க. பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாடு என்பர் சேக்கிழாரடிகள்.

இனி, உலகில் அரசர் பலராக வெள்ளிக்கோள் ஒன்றே யாதலால், அவ்வரசர்களுட் பலர் செங்கோன்மை பிறழ்ந்தவழி வெள்ளிக்கோள் மிகைநாடி மிக்க கொண்டு தெற்கேகும் என்றும், சோழமன்னர் எக்காலத்தும் செங்கோன்மை பிறழ்தல் இலராகலின் அவர் நாட்டின் யாறு பெருகல் வேண்டி முகில் குடக மலையிற் பொய்யாது மழைபெய்யும் என்றும், அதனால் தண்டமிழ்ப்பாவையாகிய காவிரி பொய்யாது புனல் ஒழுகும் என்றும், எனவே கோள்நிலை திரியினும் கோனிலை திரியாது நின்று மழைதரும் சிறப்புடையோர் சோழமன்னர் என்றும், அவரது செங்கோன்மைச் சிறப்பைக் குறிப்பானே இதன்கண் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் நுண்ணிதின் ஓதியவாறுணர்க. இங்ஙனம் கொள்ளாக்கால் மழையின்றியும் யாறு பெருகிற்றெனக் காரணமின்றிக் காரியம் நிகழ்ந்ததென்னும் குற்றமாம் என்க. உலகில் பல அரசர் நிலைதிரிதல் நோக்கி வெள்ளி தெற்கேகினும் மழை பொய்ப்பினும் சோழர் திரியாமனிற்றலின் குடகில் மழைபெய்து காவிரி பொய்யாதொழுகும் என்றவாறாம். எனவே, மழைக்குக் கோள்களினும் அரசரே சிறந்த காரணராதல் அறிக. காவிரி பொய்யாமைக்குச் சோழர் செங்கோன்மையே காரணமாதலை,

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லா நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி  (கானல்வரி-25)

என்றற் றொடக்கத்துச் சிலப்பதிகாரச் செய்யுள்களானும் உணர்க. இனி, வானம்பாடி இங்ஙனம் பாடுமென்பதைத் துளிநசை வேட்கையின் மிசைபாடும் புள், (46) எனக் கலியினும், வானம் வாழ்த்தி பாடவும் அருளா துறைதுறந்து எழிலி நீங்கலின், (67) என அகத்தினும் வருதலும், இவ்வகப்பாட்டுள் வானம் வாழ்த்தி என்றே இப்பறவையின் பெயர் கூறப்படுதலும் கண்டுணர்க. மலைத்தலைய காவிரி, கடற்காவிரி எனக் காவிரியை இரண்டனோடும் கூட்டுக. மலையிலே தோன்றிக் கடல்புகாது இடையே பிற யாற்றோடு கலத்தலும், நீலநதி போன்று வறந்தொழிதலும் இல்லாத உயிர்ப்பேரியாறென்பார், மலைத்தலைய கடற்காவிரி என்றார். கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் (கம்ப-ஆற்றுப்-19) என்றார் கம்பநாடரும். மலைத்தலைத் தொடுத்த மல்லற் பேரியாறு (3.24:15) என்பது, பெருங்கதை.

இனி, பேரியாறுகள் குறிஞ்சி நிலத்தேயுள்ள பொற்றுகளைவரன்றிக் கொணர்தல் உண்மையின், பொன்கொழிக்கும் என்றார்.

மணியும் பொன்னும் மயிற்றழைப் பீலியும்........ இன்னகொண்டேகலான், வணிக மாக்களை ஒத்ததவ் வாரியே (கம்ப-ஆற்றுப்-7) எனக் கம்பநாடரும் கூறுதல் காண்க. இங்ஙனமாகவும், பொன் கொழிக்கும் விளைவு எனக் கூட்டிப் பொன்கொழித்தற்குக் காரணமான விளைவு என்றார் மகாவித்துவான் ரா.ராகவையங்கார் அவர்கள். விளைவு பொன்கொழித்தற்குக் காரணமாகலாம்; அங்ஙனம் கூறுங்கால் பொன்கொழித்தற்குக் காவிரி கருத்தாவாகாமையை அவர் நோக்கிற்றிலர்.

மருத நிலவளம்

8-19 : விளைவறா .............. இஞ்சி

பொருள் : விளைவுஅறா வியன் கழனி - விளைதற் றொழில் மாறாத அகன்ற கழனிகளிடத்தே, கார்க்கரும்பின் கமழ் ஆலைத் தீத்தெறுவின் கவின்வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச்சாம்பும் புலத்து ஆங்கண் - பசிய கரும்பின் மணக்கின்ற பாகை அடுகின்ற கொட்டிலில் நெருப்பிற் புகை சுடுகையினாலே அழகு கெட்டு நீரையுடைத்தாகிய செய்யின்கண் நின்ற நீண்ட நெய்தற்பூ வாடும் நிலமாகிய அவ்விடங்களிலே, காய்ச் செந்நெல் கதிர் அருந்தும் மோட்டு எருமை முழுக்குழவி கூட்டு நிழல் துயில் வதியும்- காய்த்த செந்நெல்லின் கதிரைத்தின்ற வயிற்றையுடைய எருமை யீன்ற முதிர்ந்த கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே உறக்கத்தைச் செய்யும், கோள் தெங்கின்-குலைகளையுடைய தெங்கினையும், குலைவாழை-குலைகளையுடைய வாழையினையும், காய்க் கமுகின்-காயையுடைய கமுகினையும், கமழ்மஞ்சள் - மணங்கமழ்கின்ற மஞ்சளினையும், இனமாவின் - இனமான மாமரங்களினையும், இணர்ப்பெண்ணை - குலைகளையுடைய பனையினையும், முதல் சேம்பின்-கிழங்கினையுடைய சேம்பினையும், முளை இஞ்சி-முளையினையுடைய இஞ்சியினையும் உடைய;

கருத்துரை : விளைதற் றொழில் மாறாத அகன்ற கழனிகளிடத்தே பசிய கரும்பினது மணங்கமழ்கின்ற பாகினை அடுகின்ற கொட்டிலின் கண் எழும் புகை சுடுதலானே, அழகுகெட்டு நீர்நிறைந்த வயலின்கண் நின்ற நெடிய நெய்தற்பூ வாடும் நிலத்தையுடையனவும், அந்நிலங்களிலே விளைந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற வயிற்றையுடைய எருமைகள் ஈன்ற முதிய கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே உறங்கப்பெற்றனவும், குலைகளையுடைய தெங்கு வாழை கமுகு மணநாறும் மஞ்சள் மாமரம் பனை சேம்பு இஞ்சி முதலியவற்றையுடையனவும், என்பதாம். உடையனவும் ஆகிய குறும்பல்லூர்ச் சோணாடு என இயையும்.

அகலவுரை : காவிரி பொய்யாது புனல் தருதலால், கழனிகளும் விளைவறாதன ஆயின என்க. கோடையினும் விளைதல்பற்றி விளைவறாவியன் கழனி, என்றார். வியல்-அகலம்; வியலென் கிளவி யகலப் பொருட்டே, (உரி-66) என்பர் தொல்காப்பியர். செல்வர்களின் வயல்கள் என்பது தோன்ற வியன் கழனி என்றார். வியன் கழனிகளை யுடையனவும் ஆகிய குறும்பல்லூர் எனக் கூட்டுக. பின்வரும் இன்னோரன்ன அடைகளையும் தனித்தனிக் குறும்பல்லூர் என்பதோடு கூட்டி முடிவு காண்க.

இனி, அக் குறும்பல்லூர்களில் விளையும் உணவுப்பொருள் கூறுவான் தொடங்கிக் கரும்பின் ஆலைத்தீ நீருள் நெய்தலையும் வாட்டும் என்னுமாற்றால் அதன் மிகுதி கூறினார். நன்கு கொழுத்த கரும்பு சிறிது கருநிறங்கலந்து தோன்றுமாகலின் கார்க்கரும்பு என்றார். இனிச் செங்கரும்பு என்றார் போன்று கார்க்கரும்பு அதன் வகையினுள் ஒன்று எனினுமாம். பசிய கரும்பென்பர் நச்சினார்க்கினியர். கார் (முகில்) போன்று, நீர் மிகப்பொழியும் கரும்பென்றாருமுளர். பாகு அடுங்காற் சேய்மைக் கண்ணும் சென்று மணத்தலுண்மையின் கமழ் ஆலை என்றார். ஆலை-ஈண்டுக் கொட்டிற்கு ஆகுபெயர். தீ-பாகடு நெருப்பு. தெறுவு-தெறல்; ஈண்டுச் சுடுதன் மேற்று. கவின் - அழகு. நீரின் நின்றேயும் வெந்ததென்பார் நீர்ச்செறுவின் நீணெய்தல் என்றார். செறு-வயல். புலம்-நிலம். ஆங்கண்-அவ்விடத்தே. காய்ச் செந்நெல்-காய்த்த செந்நெல். காய்த்த-காய்ச்ச என மருவி ஈறுகெட்டதென்க. இனிக் காயையுடைய கதிர் எனினுமாம். அருந்தும் - மேய்கின்ற. மோடு-வயிறு. எருமை மருதநிலக் கருப்பொருளாதல் பற்றி விதந்தோதினார். முழுக்குழவி என்றது முதிர்ந்த கன்று என்றவாறு.

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை  (தொல்-மர-19)

ஆவும் எருமையும் அவைசொலப் படுமே,  (þ-20)

என்பதோத்தாகலான் எருமைக் கன்றினைக் குழவி என்றார். இந்நூற்பாவிற்குப் பேராசிரியர் இப் பட்டினப்பாலையடியையே எடுத்துக்காட்டினமையும் உணர்க. கூடு-ஈண்டு நெற்கூடென்க. எருமை பால் கட்டின செந்நெற் கதிரை மேயின் பால் மிக்குச் சுரக்கும் என்ப. எனவே, தாய் எருமை நன்கு செந்நெற் கதிரைத் தின்று பருத்த வயிறுடையதென்பார் மோட்டெருமை என விதந்து கூறினார். எருமைகள் தம் கன்று பிறிதோர் இரைதேடாதவாறு நிரம்பப் பால்சுரத்தலின் முதிர்ந்த கன்றுகளும் பசியின்றி உறங்குவனவாயின என்க. இங்ஙனம் கூறியது அந்நாட்டின் நிலவளம் கூறியபடியாம். உயிர்கள் இரைதேடி அலமருதலின்றி எளிதிற் பெற்று வேண்டிய விடத்தே துயிலுதலே வளமுடைய நாடாதற்கு அறிகுறியாம் என்னும் கருத்தினால் அன்றோ கம்பநாடரும் கோசல நாட்டின்கண்,

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும்தோகை  (பால:நாட்டுப்:6)

என ஓதுவாராயினர் என்க. இன்னும்,

கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
விளையா விளங்கணாற மெல்குபு பெயராக்
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்  (42-6)

எனச் சிறுபாணாற்றுப்படையினும்,

தடமருப் பெருமை தாமரை முனையின்
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்  (91:15-6)

என அகநானூற்றினும் சான்றோர் கூறுதலுமுணர்க. கூட்டு நிழற் றுயில் வதியும் குறும்பல்லூர் எனக் கூட்டுக. இனி உணவிற் சிறந்த கரும்பும் செந்நெலும் கூறி உழவர்க்குச் சிறந்த எருமையும் கூறி அம் மருதத்தே உள்ள பயன்படு மரங்கள் கூறுவார், தெங்கு வாழை கமுகு மா பனை முதலியவும் கூறி வயல் வரம்புகளிலே உண்டாகும் மஞ்சள் சேம்பு இஞ்சி முதலியனவும் கூறுதல் காண்க. மஞ்சளை இனம் பற்றிச் சேம்பு இஞ்சிகளோடே சேர எண்ணாது செய்யுளாகலிற் பிறழ எண்ணினார் என்க. இவையிற்றைக் கூறுங்கால் நீர்வளமில்லா நாட்டிற் பயனின்றிவற்றி நிற்கும் மரங்கள் போலாது நன்கு செழித்துக் காய்த்துப் பயன்படுவன என்பது ஓதுவார்க்குப் புலப்படவேண்டி, கோள்தெங்கென்றும், குலைவாழை என்றும், காய்க் கமுகென்றும், இணர்ப்பெண்ணை என்றும் இனமா என்றும், கமழ்மஞ்சள் என்றும், முதற் சேம்பென்றும் முளையிஞ்சி என்றும் அவையிற்றின் பயனாகிய அடையோடு மொழிந்துள்ள அருமையை உணர்க. கோள்-குலை. இணர்-கொத்து; குலை முதல்-கிழங்கு. இனமா என்பதற்கு ஏனையவற்றிற்குப் போன்று பயனடையாக்கொண்டு கனியால் இனிமையுடைய மாமரங்கள் என, ரா.ரா. அவர்கள் கூறியுள்ளார்கள். இன்மாவின் எனப் பாடங்கோடலும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார். தெங்கு முதல், இஞ்சி வரையுள்ளவற்றையுடைய குறும்பல்லூர் என இயைத்துக்கொள்க. இவ்வாறு சோணாட்டு மருத நிலவளங்கூறியவர் இனி அந்நிலத்திடைப் பாக்கத்தின் சிறப்பும் குறும்பல்லூரும் கூறுகின்றார் என்க.

பாக்கம்

20-28 : அகனகர் ................. சோணாட்டு

பொருள் : அகல்நகர் வியன் முற்றத்து - செல்வம் அகன்ற மனையினது இடமகன்ற முற்றத்தின்கண், சுடர்நுதல் மடநோக்கின் நேர் இழை மகளிர் - ஒளியுடைய நெற்றியினையும் மடப்பம் பொருந்திய கண்ணினையும் பொருந்திய பூணினையும் உடைய மகளிர், உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனம் குழை - உலருகின்ற நெல்லைத் தின்னுங் கோழியை எறிந்த வளைந்த சுற்றினையுடைய கனவிய மகரக் குழை, பொன்கால் புதல்வர் புரவியின்று உருட்டும் முக்கால் சிறுதேர் முன் வழி விலக்கும்- பூணணிந்த தாளினையுடைய சிறார் குதிரை பூட்டாமற் கையால் உருட்டும் மூன்றுருளையையுடைய சிறுதேரினது வழிமுன்பை விலக்காநின்ற, விலங்கு பகையல்லது - வழிவிலகிச் செல்லுதற்குக் காரணமான இப் பகையே யன்றி, கலங்குபகையறியா - வேறு மனங்கலங்குதற்குக் காரணமான பகையைத் தெரியாத, கொழும் பல்குடிச் செழும் பாக்கத்து - கொழுத்த பலவாகிய குடிகளையுடைய செழிப்புடைய பாக்கங்களையும், குறும் பல்லூர் - ஒன்றற்கொன்று அண்ணிதாய்ப் பலவாகிய ஊர்களையும் உடைய, நெடுஞ் சோணாட்டு - பெரிய சோழநாட்டில்;

கருத்துரை : செல்வமிக்க வீடுகளின் அகன்ற முன்றிலிடத்தே ஒளிநுதலும், மடநோக்கும், பொருந்திய அணிகலனும் உடைய மகளிர்; உலரும் நெல்லைத் தின்னும் கோழியை வெருட்டற் கெறிந்த மகரக்குழை, பூண் அணிந்த இளஞ்சிறார்கள் குதிரை பூட்டாமற் கையால் உருட்டி வருகின்ற மூன்றுருளையுடைய சிறிய தேர்களின் வழியை விலக்கும் இப் பகைபோன்வனவன்றி, வாழ்க்கை நெறியை விலக்கும் வன்பகை ஏதுமில்லாத கொழுத்த குடிகள் நிறைந்தனவாகிய செழித்த பாக்கங்களையும், ஒன்றற் கொன்று அணித்தாயுள்ள பலவாகிய ஊர்களையுமுடைய பெரிய சோழ நாட்டில்; என்பதாம்.

அகலவுரை : அகல் நகர் - செல்வம் அகன்ற வீடென்க. வியல் முற்றம்-பரந்த முற்றம். செல்வமிக்க வீடுகள் ஆதலின் வியல் முற்றம் வேண்டிற்று. சுடர் நுதல் என்றது, அம் மகளிரின் புற அழகையும், மடநோக்கம் என்பது கள்ளம் அறியா உள்ளத்தையும், நேரிழை என்பது ஒப்பனை எழிலையும் காட்டின. மடம்-கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்னும் ஒரு பெண்மைக் குணம். இப்பண்பு கண்ணில் மெய்ப்பாடாய்த் தோன்றலின் மடக்கண் என்றார். உணங்கு உணா-வெயிலில் உலர்த்தப்பட்ட நெல்; உணா-உணவு; ஈண்டு நெல்லின் மேனின்றது. கவர்தல்-தின்னுதல்.

முற்றத்தே உலரவைத்த நெல்லைத் தின்னவரும் கோழியை மகளிர் மகரக்குழையா லெறிவர் என்றது, அவர்தம் செல்வச் சிறப்பைக் குறிப்பானோதிய வாறென்க. நன்னூல், 40ஆம் சூத்திரத்துறையின்கண் மயிலைநாதரும், குழைகொண்டு கோழி எறியும் வாழ்க்கையர் என்ற வழி, கோழி எறிவாரென்று உணரற் பாலதன்று; ஒன்றானும் முட்டில் செல்வத்தார் என்றவாறு எனக் கூறினமையும் காண்க. கொடுங்காற் கனங்குழை-வளைந்த சுற்றுக்களையுடைய கனத்த குழை என்க. கனம் என்பதற்குப் பொன் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். பொன் காற்புதல்வர்-காலிலே பொற்பூண் அணியப்பட்ட சிறார் என்க. இதுவும் அவர் செல்வச் சிறப்பிற்குக் குறிப்பேதுவாதல் காண்க. முக்கால்-மூன்று உருளை. சிறார் உருட்டும் சிறுதேர் மூன்றுருளையுடைத்தாதலை இன்றுங் காணலாம்.

தேரின் ஏறியின்புறாது ஈர்த்து இன்புறுஞ்சிறார், குதிரை பூட்டாமற்றாமே உருட்டினர் என்க. விலங்கு பகை-விலகிச் செல்லுதற்குக் காரணமான பகை. விலக்கும் விலங்கும் பகை என்க. இங்ஙனம் கூறாது நச்சினார்க்கினியர் விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாச் செழும்பாக்கத்து என்னுந் துணையும் பிரித்தெடுத்துப் போய் 72ஆம் அடிக்கண் இருஞ்செறுவின் என்னுந் தொடர்க்குப் பின்னாக இணைப்பாராயினர். கொழும்பல் குடிச்செழும்பாக்கம் என்றது பட்டினப்பாக்கம். மருவூர்ப் பார்க்கம் முதலிய ஊர்களை. குறும் பல்லூர் என்றது சோணாட்டகவையிற் கிடந்த கிராமங்களை என்க. நெடுஞ் சோணாடு என்பதன்கண் நெடுமை - ஈண்டுப் பெருமைப் பண்பு குறித்து நின்றது. சோணாடு; சோழநாடு என்பதன் மரூஉ.

இனிச் சிறார் உருட்டும் சிறுதேர் செல்லும் நெறியை மகளிர் எறிந்த மகரக்குழை மறித்துப் பகை செய்வதல்லது, ஆண்டு வாழ்வோர் வாழ்க்கை நெறிச் செலவிற் கெதிராகித் தடை செய்து மனங்கலங்கச் செய்யும் பகை சிறிதுமின்றி இனிதே வாழ்வதற்குரிய பாக்கங்களும், குறும்பல்லூர்களும் எனப் பகையின்மையை இரண்டிற்கும் கொள்க. இனி, 1. முதல், 28. வரையிற் கிடந்த இத் தொடர்ப்பொருளை, வெண்மீன் தெற்கேகினும், வான் பொய்ப்பினும், தான் பொய்யாக் காவிரி பொன் கொழிப்பதும், வியன் கழனிகளையும் உடையனவும், ஆலைத் தீத் தெறுவின் பூச்சாம்பும் புலத்தாங்கண் கதிர் அருந்தும் எருமைக் குழவி கூட்டின் நிழலில் உறங்குதலுடையனவும், தெங்கு முதலியவற்றை யுடையனவும் விலங்கு பகை யல்லது கலங்கு பகையறியாத குடிகள் உடையனவுமாகிய பாக்கங்களையும், ஊர்களையும் உடையதும் ஆகிய சோணாட்டில் என அனைத்தையும் சோணாட்டிற்கு அடைகளாக்குக.

இனி, 29. வெள்ளையுப்பின், என்பது தொடங்கி, 218 முட்டாச் சிறப்பிற் பட்டினம், என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன் கண், பட்டினப் பாலை என்னும் இப்பாட்டு நுதலிய பட்டினச் சிறப்புப்பாலை ஒழுக்கம் என்னும் இரண்டு பொருள்களில் முற்கிடந்த பட்டினச் சிறப்புப் பாரித்துரைக்கப்படும்; காவிரிப்பூம்பட்டினத்தின்கண் உள்ள படப்பைகளும், அட்டிற் சாலைகளும், பவுத்தப் பள்ளிகளும், கோட்டமும், பரதவர் இருக்கையும், புறஞ்சேரியின் இயல்பும் காவிரித் துறையின் சிறப்பும், வைகறையாம நிகழ்ச்சிகளும் உல்குகொள்வோர் நிலையும் பண்டசாலை முற்றமும், அங்காடித் தெருவும், கொடிச் சிறப்பும், தெருக்களிற் பொருள் வளமும், வேளாண் குடிச் சிறப்பும், பிறவும் இத்தொடரில் இனிதாகக் கூறப்படுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்துள்ள தோட்டங்களும், பூம்பொழில்களும், பொய்கைகளும் ஏரிகளும்.

29-39 : வெள்ளையுப்பின் .................... இணையேரி

பொருள் : வெள்ளையுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி - வெள்ளிதாகிய உப்பினது விலையைச் சொல்லி விற்ற நெல்லைக் கொண்டு வந்த வலிய இடத்தையுடைய படகுகளை, பணைநிலைப் புரவியின் அணைமுதல் பிணிக்கும் கழிசூழ் படப்பை-பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகளைப் பிணிக்குமாறு போலச் சார்ந்த தறிகளிலே பிணிக்கும். கழிசூழ்ந்த தோட்டங்களையும், கலி யாணர்ப் பொழில் புறவின் பூந் தண்டலை - மனச்செருக் கெழுதற்குக் காரணமான புதுவருவாயினையுடைய தோப்புக்களுக்குப் புறம்பாகிய பூஞ்சோலைகளையும், மழை நீங்கிய மாவிசும்பின் மதிசேர்ந்த மகவெண்மீன் உருகெழு திறல் உயர்கோட்டத்து-மழை மாசு நீங்கின பெரிய வானிடத்தே திங்களைச் சேர்ந்த மகமாகிய வெள்ளிய மீனினது வடிவு பொருந்தின வலியையுடைய உயர்ந்த கரையையுடைய, முருகு அமர் பூ முரண் கிடக்கை மணம் பொருந்தின பூக்கள் நிறத்தாற் றம்முள் மாறுபட்ட பரப்பாலே, வரி அணி சுடர்வான் பொய்கை-ஓவியத்தின் அழகுடைத்தாய் விளங்குகின்ற நன்றாகிய பொய்கையினையும், இரு காமத்து இணையேரி - இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காமவின்பத்தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகளையும்;

கருத்துரை : உப்பு விற்ற நெல்லினைக் கொண்டு வந்த வலிய இடத்தையுடைய படகுகளைப் பந்தியிலே நிரல்படக் குதிரைகளைப் பிணிக்குமாறு போலத் தறிகளிலே பிணித்துள்ள கழிசூழ்ந்த தோட்டங்களையும், மனச் செருக்கிற்குக் காரணமான புதுவருவாயை யுடைய தோப்புக்களுக்குப் புறம்பேயுள்ள பூம்பொழில்களையும், மழை மாசற்ற விண்ணிடத்தே மகமீனின் இடைச் சேர்ந்த முழுமதி போன்ற வலிய கரைகளிடையே அமைந்ததும், பன்னிற மலர்களும் தம்முள் மாறுபட்டுத் தோன்றுதலாலே ஓவியத்தின் அழகினையுடைய ஒளியுடையதுமாகிய நல்ல பொய்கையினையும், இம்மை மறுமை இரண்டினும் உளதாகிய காமவின்பத்தை நல்கும் இரண்டாகிய ஏரியினையும் என்பதாம்.

அகலவுரை : உப்பிற் சிறந்தது நிறத்தால் தூய்மையான உப்பேயாகலின், அச்சிறப்புத் தோன்ற வெள்ளுப்பு என்றார். கொள்ளை - கொள்ளற்குரிய விலை. சாற்றுதல்-கூறுதல். நெல்-ஈண்டு உப்பிற்குப் பண்ட மாற்றாகக் கொண்ட நெல் என்க. பண்டைநாள், தமிழ் நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே இருந்த தென்பதனை இதனானும், நெல்லும் உப்பும் நேரே யூரீர் கொள்ளீரோ எனச் சேரிதோறும் நுவலும், (அகம் 390: 8-9) என வரும் அகப்பாட்டானும், இவ் வாசிரியரே பெரும்பாணாற்றுப் படையில்,

........................................ ஆய்மகள்
அளைவிலை உணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்  (62-5)

என்றோதுதலானும் அறிக.

வல்வாய்-வலிய இடம். பஃறி-படகு. கழியின்கண் தறிகளில் நிரலாகப் பிணித்து நிறுத்தப்பட்ட படகுகளுக்குப் பந்தியில் (இலாயம்) நிரலாகக் கட்டப்பட்ட குதிரைகள் உவமை. பணை-பந்தி (குதிரை இலாயம்). அணைமுதல்-சார்ந்த முளை; இனி அணையிடத்துத் தறி எனினுமாம். படப்பை-தோட்டம்; பக்கமுமாம். யாணர்-புதுவருவாய்; புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி, (உரி-81) என்பது தொல்காப்பியம். அறிஞரல்லாதார்க்குச் செல்வப் பெருக்குச் செருக்கிற்குக் காரணமாதல் பற்றிக் கலியாணர் என்றார். கலி-செருக்கு; அஃதாவது, யான் எனது என்னும் இருவகைச் செருக்கென்க. இதனை,

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல் - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனாய் எண்ணி விடும்  (நாலடி-346)

என்பதனானும் உணர்க. பொழில்-இளமரக்கா. பூந்தண்டலை-பூம்பொழில். புறவு - பக்கம். மழை மாசு நீங்கிய வானத்தே தோன்றும் மகமீன் பொய்கைக் கரைக்கும், அவற்றினிடைப் பட்ட முழுத்திங்கள் பொய்கைக்கும் உவமையாகக் கொள்க. இத் தொடர்க்கு, இனி உயர் கோட்டத்தை எல்லாரும் மதியைச் சேர்ந்த மகவெண்மீனைப் பார்க்கைக்கு இடமாகிய கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் என எண்ணுதலுமாம்; இனிப் பொய்கைக் கரையிலே கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் மதிசேர்ந்த மகவெண்மீன் போன்ற வென்றுமாம் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் பலபொருளும் காண்க.

திறல் உயர்கோட்டம் என்பதற்கு, வலியான் உயர்ந்த தேவாலயம் என்றும், இது காமவேள் கோட்டமாம் என்றும் கூறுவாருமுளர். நிலாக் கோட்டம் எனத் திங்கட்கும் கோயிலுண்மை சிலப்பதிகாரத்தே (9:13) கூறப்படுதலான் மதிசேர்ந்த மகவெண்மீன் உருகெழுதிறல் உயர்கோட்டம் என்றதற்கு, திங்கட் கடவுள் எய்திய மகமீன் போன்ற கோட்டம் எனக்கொள்ளலுமாம். கோட்டம்-கோயில்; கரையுமாம். முருகு-மணம். இரு காமத்திணையேரி என்றது காவிரிப்பூம் பட்டினத்துள்ள சோகுண்டம் சூரிய குண்டம் என்னும் நீர் நிலைகளை. இவற்றில் நீராடினார் இவ்வுலகத் தின்புறலும் போகபூமியிற் போய்ப் பிறத்தலும் உடையராவார் எனப்படுதலின் இம்மை மறுமை இரண்டினும் உண்டாகிய காம வின்பந்தரும் ஏரி என்பார் இருகாமத் திணையேரி என்றார். இணை-இரண்டு. இதனை,

சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்  (9:59-62)

எனவரும் சிலப்பதிகாரத்தான் அறிக. இனி, காமம் வளகாமரேரி, வணிகாமரேரி என்றும், சங்கிராம காமம் வணிக்கிராம காமம் என்றும் உரைப்ப என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். படப்பை, முதலியவற்றையுடைய பட்டினம் என்க.

அறம் நிலைஇய அட்டிற் சாலைகள்

40-50 : புலிப்பொறி ...................... மாசூட்டும்

பொருள் : புலிப் பொறிப் போர்க்கதவில் திருத் துஞ்சும் திண்காப்பில்-புலியாகிய அடையாளத்தினையும் பலகைகள் தம்மிற் சேருதலையுடைய கதவினையுமுடைய செல்வம் தங்கும் திண்ணிய மதிலினையும் உடைய, புகழ்நிலைஇய மொழிவளர அறம் நிலைஇய அகல் அட்டில்-இம்மைக்குப் புகழ் நிலைபெற்ற சொல் எங்கும் பரவாநிற்க மறுமைக்கு அறம் நிலைபெற்ற அகன்ற அட்டிலின்கண், சோறு வாக்கிய கொழுங்கஞ்சி - சோற்றை வடித்தொழுக்கிய கொழுவிய கஞ்சி, யாறுபோலப் பரந்தொழுகி - யாறுகள் போலே எங்கும் பரந்து ஒழுகி, ஏறு பொரச் சேறாகி - காளைகள் தம்மிற் பொருதலாலே பின்பு சேறாகி, தேர் ஓடத் துகள் கெழுமி - பல தேர்களும் ஓடுகையினாலே தூளியாய்ப் பொருந்தி, நீறாடிய களிறுபோல வேறுபட்ட வினையோவத்து வெண்கோயில் மாசு ஊட்டும் - புழுதியை மேலே பூசிக்கொண்ட களிறுபோல வேறுபட்ட தொழில்களையுடைய ஓவியம் வரையப்பட்ட வெள்ளிய அரண்மனையை அழுக் கூட்டும்;

கருத்துரை : புலியாகிய அடையாளத்தினையும், பலகைகள் தம்மில் நன்கு பொருந்திய கதவினையும் உடைய செல்வம் தங்கும் மதிலினையுடைத்தாகிய, இம்மைக்குப் புகழும், மறுமைக்கு ஆக்கமும் தரும் அறம் நிலைபெற்ற அகன்ற அட்டிற் சாலைகளில், சோறுவடித் தொழுக்கிய கொழுவிய கஞ்சி, தெருக்களிலே யாறுகள் போன்று ஓடாநிற்ப, அவ்விடத்தே காளைகள் தம்முட் பொருதலாலே சேறாய்ப் பின்பு, பல தேர்களும் ஓடலாலே துகளாய்ப் பரவி ஆண்டுள்ள வெள்ளிய அரண்மனைகளைப் புழுதியை மேலே பூசிக்கொண்ட களிறுபோலே அழுக்கூட்டுவதாய் என்பதாம்.

அகலவுரை : புலிப்பொறி-புலியிலச்சினை. இது சோழ மன்னர்க்குரிய இலச்சினை என்க. கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோன், என்றார் ஆசிரியர் இளங்கோவடிகளாரும். இவ்வாசிரியரே புலிபொறித்துப் புறம்போக்கி (பட்டினப்-135) எனப் பிறாண்டும் ஓதுதல் காண்க. இவ்விலச்சினை கதவுகளிற் செதுக்கப்பட்டன என்க. போர்க்கதவு-பொருத்துவாய் நன்கு இணைந்த கதவு. திரு-செல்வம்; திருமகள் எனினுமாம். துஞ்சுதல்-உறங்குதல். திருத்துஞ்சும் என்றது வேண்டி யாங்கு வழங்கியும் செலவிட்டும் அறாது மிக்குக்கிடக்கும் செல்வம் என அதன் மிகுதி குறித்தவாறு. நிதியந் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின் என்றும் நிலந்தினக்கிடந்த நிதியம் (மலைபடு -476, 575) என்றும் மலைபடு கடாத்தினும் கூறுதல் காண்க. திண் காப்பு - திண்ணிய காவலாகிய மதில்; திண்ணிய படை யென்பாருமுளர். காவிரிப்பூம் பட்டினத்துள்ள அட்டிற் சாலைகளில் அவற்றை யுடையோரால் தம் வயிறு அருத்தற்கன்றி அறஞ் செய்தல் கருதியே சோறடப்படும் என்பார் அறம் நிலைஇய அட்டில் என்றார். அறம் ஈண்டு வருந்தி வந்தோர் அரும்பசி களைதல்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி  (குறள்-226)

என்றும்,

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்  (குறள்-225)

என்றும்,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு  (குறள்-81)

என்றும்,

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே  (மணி-11: 13-6)

என்றும், மெய்ந்நூல்கள் உண்டி கொடுக்கும் இவ்வறமே தலைசிறந்ததென விதந்தோதுதலான், காவிரிப்பூம்பட்டினத்தே வாழ்வோர் மெய்ந்நெறி வாழ்க்கை மேற்கொண்ட சான்றோர் என்பதனைக் குறிப்பார் காட்டுவார் அறம் நிலைஇய அகல் அட்டில் என்றும், அவர் குறிக்கோளும் இம்மையிற் புகழும் மறுமையில் இந்திரன் முதலிய இமையவர் பதங்களும் பெறலே என்பார் புகழ் நிலைஇய மொழி வளர, அறம் நிலைஇய அட்டில் என்றும் கூறினர். எத்தனைபேர் செல்லினும் மறாது வழங்கும் அட்டில் என்பார், அகல் அட்டில் என்றும், அவ்வட்டிலில் அடும் சோற்றின் மிகுதி கூறுவார், சோறு வாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி என்றும், வெண்கோயில் மாசூட்டு தலையும் பொருட்படுத்தாது அறமே பொருள் எனக் கருதி அதனையே செய்வார் என்பார் வெண்கோயின் மாசூட்டும் என்றும் கூறிய நுணுக்கங்கள் பெரிதும் இன்பம் தருவனவாம். உலகியல் வாழ்க்கை முட்டின்றிக் கடைபோதற்கு இன்றியமையாச் சிறப்பிற்றென்பது கருதி, திருத்துஞ்சும் என முன்னர்ப் பொருட் சிறப்போதி, இனி அப்பொருளும் இவ்வறஞ் செயற்கே ஆதலின் அட்டில் கூறும் வாயிலாய் அறங் கூறினாராதலும் அறிக.

சோறு வாக்கிய -சோறு வடித்து ஒழுக்கிய. கொழுங்கஞ்சி - கொழுப்பை உண்டாக்கும் கஞ்சி. அது தானும் தன்னளவில் உயிரோம்பும் சிறப்புடைத்தென்பார் கொழுங்கஞ்சி என்றார். இதனாற் சோற்றின் உயிரோம்புதற் றன்மை கூறாமலே அமைதலறிக. யாறு போல என்றது - மிக்கு ஓடி என்றவாறு. பெருமையும் சிறுமையும் சிறப்பிற் றீராக் குறிப்பின் வரூஉ நெறிப்பாடுடைய (தொல் உவம-10) என்னும் சூத்திரத்திற்குப் பேராசிரியர், இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளுமாற்றான் வருதல் வேண்டும் என்றும், சோறு வாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி என்பதோ வெனின், யாறென்ற துணையானே பேர் யாறெனக் கொண்டு உலகு இறந்தன வாகைமைக் கன்றே ஏறுபொரச் சேறாகித் தேரோடத் துகள் கெழுமி என்பதாயிற்றென்பது, என இஃது உலகிறந்த உவமையாகாமை காட்டியவாறு காண்க. ஏறு - ஆனேறு. ஏறுபொர என்றதற்கு, ஆனேறு அவ் விடத்தைக் கோட்டாற் குத்திக் கோட்டு மண்கொள்ள என்பாருமுளர். சோறு வாக்கிய கொழுங்கஞ்சியினைப் பருகவந்த ஏறுகள் தம்மிற் பொருதன என்க. கொழுங்கஞ்சியைப் பருகலாற் செருக்கிப் பொருதன எனக் கொள்க.

யாறுபோல ஓடிய கஞ்சி, துகளாய் என்றது தேரின் மிகுதி கூறியவாறு. நீறு-புழுதி. புழுதி பூசிக்கொண்ட களிறு துகள்படிந்த மாடத்திற்குவமை. வெண்மாடம்-வெண்சுதை தீற்றப்பட்ட மாடம்.

திங்களும் கரிதென வெண்மை தீற்றிய
சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை  (கம்ப-நகரப்-27)

என்றார் பிறரும். இவைகள், பட்டினத்தின் முட்டாச்சிறப்புக்கள் என்க. வேறுபட்ட வினையோவம் என்றதற்கு, தொழில் வேறுபடுதலன்றி உருவம் வேறுபடாத சித்திரம் என்பாரும் உளர்.

எருத்துச் சாலையும், தவப்பள்ளியும்

51-58 : தண்கேணி ............... சேக்கும்

பொருள் : தண்கேணித் தகை முற்றத்துப் பகட்டெருத்தின் பலசாலை - குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலையுடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பல சாலையினையுந், தவப்பள்ளித் தாழ்காவின் - தவம் செய்வோர் உறையும் இடங்களையுடைய தழைத்துத் தாழ்ந்த பொழில்களிடத்தே, அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை முனைஇ - விளங்குகின்ற சடையினையுடைய துறவிகள் தீயின் கண்ணே வேட்டலைச் செய்யும் நெய் முதலியவற்றின் புகையை வெறுத்து, குயில் தம் மா இரும்பெடையொடு இரியல் போகி - குயில்கள் தம்முடைய கருமையும் பெருமையுமுடைய பேடைகளுடனே கெடுதலையுடையவாய் நீங்கிப் போய், பூதங்காக்கும் புகலருங் கடிநகர்த் தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் - பூதங்கள் காத்திராநின்ற புகுதற்கரிய அச்சத்தைத் தரும் காவலமைந்த நகரின்கண் கல்லைத் தின்னும் அழகிய புறவுகளுடனே ஒதுங்கு குடியாகத் தங்குதலைச் செய்யும்;

கருத்துரை : குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலையுடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் சாலைகளையுடைத்தாயதும், தவம் செய்வோர் உறையும் பள்ளிகளையுடைய தாழ்பூம் பொழிலிடத்தே விளங்கும் சடையினையுடைய தாபதர்கள் தீயிடை நெய் முதலியவற்றை யிட்டு வளர்த்தலால் எழும் புகையை வெறுத்த குயில்கள் தம் பேடைகளுடனே அவ்விடம் விட்டு நீங்கிப் பூதங்காத்தலானே தீயோர்க்குப் புகுதற்கரிய அச்சத்தை உண்டாக்கும் நகரிடத்தே ஆண்டு உறையும் புறவுகளுடனே ஒதுக்கிருத்தலை யுடையதும் என்பதாம்.

அகலவுரை : எருத்துச் சாலைகளை யுடைத்தாய், கடிநகர்க் குயில் சேக்கும் பட்டினம் என்க. கேணி-சிறுகுளம். எருத்தின் சாலை - எருத்திற்கு வைக்கோலிடும் சாலை. வைக்கோல் தின்று வயிறு நிறைந்தவுடன் எருதுகள் நீர்குடிக்க வேண்டுதலின் ஆண்டுத் தண்கேணி யுண்மையும் கூறினார். தண்கேணி என்றது, நன்னீர்நிலை என்றவாறு : மாந்தர்க்குச் சோறிடும் அறச்சாலை போன்று இவையும் அறச்சாலைகளே என்க. தகைதல்-உள்ளடக்குதல். பகட்டெருது - பெரிய எருது; பகடாகிய எருதுமாம். தவப்பள்ளி, புத்த சமயத்தினரும், அமண் சமயத்தினரும், பிற சமயத்தினருமாகிய தாபதர்கள் தங்குமிடங்கள்.

பண்டைநாட் காவிரிப்பூம்பட்டினத்தே பல்வேறு சமயப்பள்ளிகளும் இருந்தன என்பதனை, மணிமேகலை (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை) யான் அறிக. ஏனை நகரங்கள் போன்று படைகளாலும் அரண்களாலும் காக்கப்படுதலோடமையாது, பூதங்களாலும் இப் புகார் நகரம் காக்கப்படும் சிறப்பெடுத்தோதுவார் பூதங்காக்கும் புகலரும் கடிநகர் என்றார். இதனை,

தேவர் கோமான் ஏவலிற் போந்த
காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை  (சிலப்.5: 66-7)

என்றும்,

கோநகர் காத்த மாபெரும் பூதம்
இருந்துபலி உண்ணும் இடனும்  (þ-6: 8 -11)

என்றும், வரும் சிலப்பதிகாரத்தானும் அறிக.

இனி, அப் பூதந்தானும்,

தவமறைந் தொழுகும் தன்மையி லாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பி 

புடைத்துண்ணும் எனப்படுதலான், பகைவரேயன்றித் தீவினையாளரும் புகுதற்கரிய அச்சந்தரும் நகர் என்பார் புகலருங் கடிநகர் என்றார். கடி-அச்சம். இதனைக் காளிகோயில் என்றனர் நச்சினார்க்கினியர்.

முன்னர் அட்டிற்கஞ்சி யாறாக ஓடிச் சேறாகி என்னுமாற்றால் பட்டினத்தில் வாழ்வோரின் இல்லறச் சிறப்பை இனிது விளக்கியவாறே ஈண்டும் அப்பட்டினத்தின்கண் துறவறச் சிறப்பைத் தாபதர்கள் ஆவுதிப்புகையை அஞ்சிக் குயில் இரியல் போக்குமாற்றால் இனிது விளக்கினமை காண்க. தாபதர் அத்துணை மிகுதியாக வேட்டலின் அவ்வேள்விப்புகையை முகில் என்று கருதிக் குயில்கள் இரியல் போயின. எனவே நற்றவம் செய்வார்க்கிடம், தவம் செய்வார்க்கும் அஃதிடம், (சிந்தா-77) என்றாராயிற்று. தாபதர்கள் ஊரடையார் ஆகலின், அவர்கள் பள்ளி தாழ்காவினகத்தன என்றார். சூழ் சடைதாங்கிச் சுடரோம்புதல் அவர் செயலாகலான், அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் என்றார். தாபதர்கள் இத்தகையோர் ஆதலை, நீஇராடல், நிலக்கிடைகோடல், தோலுடுத்தல், தொல்லெரி ஓம்பல், உறுசடை புனைதல், காட்டிலுணவு, கடவுட் பூசை, ஏற்ற தவத்தின் இயல்பென மொழிப (தொல்-புறத்-சூ.20. உரை மேற்கோள்) என்னும் பழம் பாட்டானும் உணர்க. ஆவுதி-தீயிலிடும் அவிப்பொருள். நெய் முதலியன இடுதலின் நறும்புகை என்றார். துச்சில்-ஒதுக்குக் குடியிருப்பு. இதனை, துச்சில் இருந்த வுயிர்க் கென்னும் குறளினும் காண்க. குயில் தான் வாழ்தற்குரிய காவின் நீங்கிப் புறவுவாழ் மாடத்தின்கண் உறைதலின் அதனைத் துச்சில் என்ற நயமுணர்க. புறவுகள் மாடத்தே உறையும் இயல்புடையன என்பதை,

மனையுறை புறவின் செங்காற் சேவல்
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப  (45-8)

என்னும் நெடுநல்வாடையானும்,

மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடக்கு  (167)

என்னும் அகப்பாட்டானும் அறிக.

தூது - சிறுகல். புறவு-புறா.

முதுமரத்த முரண் களரி

59-74 : முதுமரத்த .................... போந்தை

பொருள் : முதுமரத்த முரண்களரி - பழைய மரத்தை யுடையவாகிய பொருதற்கமைத்த போர்க்களமாகிய, வரிமணல் அகல்திட்டை - அறலினையுடைத்தாகிய மணலினையுடைய அகன்ற மேடுகளிலே, இருங்கிளை இனன் ஒக்கல் கருந்தொழில் கலிமாக்கள் - பெரிய கிளைஞரும் ஓரினச் சுற்றத்தாருமாகிய வலிய தொழிலையுடைய செருக்கின மறவர்களுள், கடல் இறவின் சூடுதின்றும் - ஒருசாரார் கடலின்கண் உள்ள இறாமீனின் இனிய தசை சுடப்பட்டதனைத் தின்றும், வயலாமைப் புழுக்குண்டும் - மற்றொருசாரார் வயலின்கண் உள்ள ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும், வறள் அடும்பின் மலர் மலைந்தும் - ஒரு சாரார் மணலிலே படர்ந்த அடப்பம் பூவைத் தலையிலே சூடியும், புனலாம்பற் பூச்சூடியும்-மற்றொருசாரார் நீரினின்ற ஆம்பற் பூவைப் பறித்துச் சூடியும், நீல்நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் நாண்மீன் விராய கோண்மீன்போல - நீலநிறத்தையுடைய வானிடத்தே வலமாக எழுந்துதிரியும் நாள்களாகிய மீன்களோடே கலந்த கோள்களாகிய மீன்கள்போலே மாக்களும் அவர் தலைவருமாகக் கலந்து, மலர்தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ-அகன்ற இடத்தையுடைய அம்பலங்களிலே பலரும் ஒன்றுகூடி, கையினுங்கலத்தினும் மெய்யுறத் தீண்டி - கையாலும் படைக்கலங்களாலும் உடலிலே படப் புடைத்து, பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅது - ஆண்டுப் பிறந்த பெரிய சினத்தாலே ஒருவர்க்கொருவர் புறங்கொடாமையாலே, இருஞ்செருவின் இகன் மொய்ம்பினோர் - பெரிய போர்த்தொழிலின்கண் மாறுபாடுற்ற வலியினையுடையோர் வேறோராற்றாற்றம் வலியினை அளக்கக் கருதி, கவண் எறியும் கல் வெரீஇ - கவணால் எறியாநின்ற கல்லிற்கு அஞ்சி, புள் இரியும் புகர்ப்போந்தை - பறவைகள் நீங்குதற்குக் காரணமான புள்ளிகளையுடைய பனைகளையுடைய;

கருத்துரை : அகவையான் முதிர்ந்த மரங்களையுடையனவும், போர் செய்தற்கென அமைக்கப்பட்டனவும் ஆகிய அறலினையுடைய மணற்றிடர்களிலே, பெரிய கிளைஞரும் ஓரினச் சுற்றத்தாருமாகிய வன்றொழிலையுடைய செருக்கின மறவர்களுள், ஒருசாரார், கடலின்கட்டோன்றிய இறால் மீனின் சூட்டிறைச்சியைத் தின்றும் மற்றொருசாரார், வயலின்கண் உள்ள ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும், ஒருசாரார் மணலிலே படர்ந்த அடப்பம் பூவைத் தலையிலே சூடியும், மற்றொருசாரார், நீரில் நின்ற ஆம்பற்பூவைப் பறித்துச் சூடியும், நீலநிறமுடைய விண்ணிடத்தே வலமாக எழுந்து திரியும் நாண்மீன்களும் கோண்மீன்களும் போன்று பலரும் அகன்ற அம்பலங்களிலே ஒருங்கே கூடிக் கையானும், கருவிகளானும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பெருஞ்சினத்தாலே போர் செய்தும் ஒருவர்க்கொருவர் தோலாமையானே, மீண்டும் தம் வலியினை அளத்தற் பொருட்டுப் பனைமரங்களிலே இலக்குவைத்துக் கவண்கற்களை எறியா நிற்ப, அக்கற்களுக்கு அஞ்சி ஆண்டுறையும் பறவைகள் அவ்விடத்தைவிட்டு நீங்காநின்ற புள்ளிகளையுடைய பனைகளையுடையதும், (ஆகிய பட்டினம்) என்பதாம்.

அகலவுரை : முதுமரம் - ஆண்டுபல நின்று முதிர்ந்த மரம். முரண் களரி - மறவர்கள் தம்முள் வலி மிகுதிகாணும் பொருட்டுப் போரிடும் விறற்களம். இது விளையாட்டுப் போராகலின் வீழ்ந்தவர் உடல் புண்படாமைப் பொருட்டு மணற்பரப்பிலே அமைக்கப்பட்டன என்பார் வரிமணல் அகன்றிட்டை என்றார். வரி-அறல் -ஈண்டுக் காற்றியக்கத் தாலுண்டாய அறலை வரி என்றார். யாறுகளில் நீரியக்கத்தானும் அறல் உண்டாம் என்க. திட்டை, மேடாகிய திடர். ஆண்டுப் போர் செய்வார் பகைவர்கள் அல்லர் என்பார், இருங்கிளை இனனொக்கற் கலிமாக்கள் என்றார். இருங்கிளை - பெரிய தாயத்தார் என்க. ஒரு குடியினின்றும் கிளைத்தலால் தாயத்தார் கிளை எனப்பட்டார். இருமை ஈண்டு, பெருமை குறியாது அண்மை குறித்து நின்றது என்க. இருங்கிளையும் இனன் ஒக்கலும் என்க. இனன் ஒக்கல் என்றது, ஓரினத்தினராய் மாமன்மைத்துனன் என்னும் முறைமையுடைய சுற்றத்தார் என்றபடி. எனவே தாயத்தாரும் ஓரினச்சுற்றத்தாரும் ஆகிய மாக்கள் என்றபடியாம்.

இவர்கள் போர் ஆற்றுதற்கு ஏதுக் கூறுவார் கலிமாக்கள் என்றார். கலி-செருக்கு. செருக்குடைமை காரணமாகத் தம்முள் வலிமிகுதி தாழ்வு காணும் பொருட்டு இவர்கள் இம்முரண்களரியிற் கூடினர் என்க. இனி, ஈண்டுக் கூடியோர் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்னும் இருவேறு பாக்கங்களிற் குடியிருப்புடையோர் என்பதனை, அவர் உண்ணும் உணவானும், சூடும் பூவானும் விளங்க நுண்ணிதின் ஓதுதல் பெரிதும் இன்பம் நல்குதல் காண்க. இவ்விரு பாக்கங்களுள், மருவூர்ப் பாக்கம் கடன்மருங்கே நெய்தனிலத்தும், பட்டினப்பாக்கம் காவிரிக் கரையில் மருதநிலத்தும் உள்ளன. ஆகலான், மருவூர்ப்பாக்கத்து மறவர், கடலிறவின் சூடு தின்று, வறள் அடம்பின் மலர் மலைந்தனர் என்றும், பட்டினப்பாக்கத்து மறவர் வயலாமைப் புழுக்குண்டு புனலாம்பற் பூச்சூடினர் என்றும் கொள்க. கடலிறவு - கடலின்கண்ணுள்ள இறாமீன். சூடு-சுட்ட இறைச்சி. வயலின்கண் உறையும் ஆமையைப் புழுக்கிய இறைச்சியை வயலாமைப்புழுக்கென்றார். அடம்பு நீர்வறந்த நிலத்திற் படரும் இயல்புடையதாகலின், வறளடம்பு என்றார். வறள்: ஆகுபெயர்; நீர்வறந்த மணற்றிடரில் படர்ந்த என்றவாறு.

வறள் அடம்பென்றதற்கு முரணாகப் புனலாம்பல் என்றதன்கட் செய்யுளின்பம் உணர்க. இருவகைப் பாக்கத்தோரும் ஒன்றுகூடித் திரிதற்கு வானின்கண் நாளும் கோளும் திரிதல் உவமை என்க. போர் புரிதற்குரியோரும், அதைக் காண்போருமாக இருதிறத்தார்க்கும் நிரலே, கோளும் நாளும் என இரண்டுவமை எடுத்துக் கூறுதலின் நுணுக்கம் அறிக. மலர்தலை மன்றம்- காண்போர் கூடி நிற்றற்குரிய அகன்ற அம்பலம்; அம்பலத்தே கூடி மணற்றிடரிலே போரிடுவர் என்க. காவிரிப் பூம்பட்டினத்தே இங்ஙனம் மறவர் கூடிப் போரிடுதலை,

மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்
பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும்
கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி  (இந்திர-76-82)

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியானும் உணர்க. இங்ஙனம் கூறாது நச்சினார்க்கினியர் இவரைப் பரதவர் பிள்ளைகள் என்பர். பிள்ளைகட்கு, கருந்தொழில், இகன் மொய்ம்பு முதலிய அடைகள் பொருந்தாமை யுணர்க. கையினும், கலத்தினும், என்றார் மற்போர் வாட்போர் முதலிய இருவகைப் போரும் ஆற்றினர் என்பது தோன்ற, புறங்கொடாமைக்குச் சினத்தை ஏதுவாக்கினர். இங்ஙனம் புறங்கொடாது போராற்றியோர், மீண்டும் இலக்கினைக் கவண்கல்லால் எறிந்து வலிமிகுதி காண்பாராய்ப் பனைமரத்துச்சியில் இலக்குவைத்து எறிதலின் ஆண்டுவாழும் பறவைகள் ஓடின என்க. இங்ஙனம் இலக்குக்கொண்டு கல்லானெறிதல் உண்மையால் ஆண்டுநிற்கும் பனைகள் கல்லேற்றின் வடுவுடையன என்பார். புகர்ப்போந்தை என்றார். புகர்ப்போந்தை யுடைய பட்டினம் என்க. புறஞ் சேரியோடு இயைப்பாருமுளர்.

புறஞ்சேரியின் தன்மை

75-77 : பறழ் ...................... விளையாட

பொருள் : பறழ்ப் பன்றி - குட்டிகளையுடைய பன்றிகளும், பல்கோழி-பலவகுப்புக் கோழிகளும், உறைக்கிணற்று புறச்சேரி - உறைக்கிணறுகளையுடைய புறச்சேரிகளிலே, மேழகத்தகரொடு சிவல் விளையாட - துருவாட்டின் கிடாய்களோடு கவுதாரிகளும் விளையாடுதலைச் செய்யாநிற்கும்;

கருத்துரை : புறச்சேரிகளிடத்தே குட்டிகளையுடைய பன்றிகளும் பல்வேறுவகைக் கோழிகளும் துருவாட்டின் கிடாய்களும் கவுதாரிகளும் விளையாடுகின்ற, (பட்டினம்) என்பதாம்.

அகலவுரை : பன்றிகளும், கோழிகளும் உணவின் பொருட்டு வளர்க்கப்படுவனவாதலின், ஓரினப்படுத்து ஒருங்குவைத்தும், தகரும் சிவலும், போர்குறித்து வளர்க்கப்படுதலின் ஓரினப்படுத்தும் ஓதினர். புறஞ்சேரியை முன்னர் இயைத்துக் கொள்க. விளையாடுதற்றொழிலைப் பன்றி முதலிய நான்கிற்கும் கொள்க. பறழ்-குட்டி.

நாயே பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலைக் குருளை என்ப,
குட்டியும் பறழும் கூற்றவண் வரையார்  (தொல்.மர-8) (þ-10)

என்பதோத்தாகலான், பன்றிக்குட்டியைப்பறழ் என்றார். பறழ்ப்பன்றி - பறழையுடைய பன்றி என இரண்டனுருபும் பயனும் விரித்தோதுக. இனி, பறழாகிய பன்றி எனினுமாம். சேரிப்புறம் என்பது - புறஞ்சேரி என்று முன்பின்னாக மாறி நின்றது. இது மருவூர்ப்பாக்கத்துப் புறஞ்சேரி என்க. கடற்கரையாகலின், ஆண்டு ஊற்றுநீர் வேண்டிற்று. உறைக்கிணறு - உறைசெருகிய கேணி. உறை - மண்ணால் வனைந்து சுடப்பட்ட வளைந்த விளிம்புகள். இவ் வுறைக் கிணறுகள் இன்றும் இத்தமிழகத்தே உள்ளன. தகரும், சிவலும் போர்புரியும் இயல்பின என்பதைத் தகர் வென்றி, சிவல் வென்றி என்னும் புறத்துறைகளானே அறிக. (புறப்பொ.வெ.மா. 349:352)
(78 இல்-இருந்து 105 வரை)

பரதவர் இருக்கை

78-83 : கிடுகு ................ முன்றில்

பொருள் : கிடுகு நிரைத்து எஃகூன்றி - தோற்பரிசையை நிரல்பட வைத்து வேலை ஊன்றிச் செய்த, நடுகல்லின் அரண்போல - மறவர்க்கு நடுகின்ற கல்லிற்கிட்ட அரண் போன்று, நெடுந்தூண்டிலிற் காழ் சேர்த்திய குறுங்கூரைக் குடிநாப்பண் - நெடிய தூண்டிற்கோலைச் சார்த்திய குறுகிய கூரையினையுடைய குடியிருப்பின் நடுவில், நிலவடைந்த இருள்போல வலையுணங்கும் மணல் முன்றில் - நிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போன்று வலை கிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தையுடைய மனையிடத்தே;

கருத்துரை : போரிற் புறங்கொடாது விழுப்புண் பட்டிறந்த வீரர்க்கு நடும் கல்லுக்கு வேலையூன்றிக் கிடுகைக் கட்டிச் செய்த அரணைப் போன்று, நெடிய தூண்டிற்கோல் சாத்திய கூரையினையுடைய குடியிருப்பின், நிலவினைச் சேர்ந்த இருள்போலே வலைகிடந்து உலரும் மணலையுடைய முன்பினையுடைய மனையின்கண்ணே என்பதாம்.

அகலவுரை : போரின்கண் இறந்த மறவர்க்குக் கல்நட்டுப் பலியிடும்பொழுது, அக் கல்லைச்சூழ வேல்களை நிரல்பட நட்டு உட்புறமாகக் கிடுகுகளை வேய்ந்து அரண் செய்யும் வழக்கத்தை இவ் வுவமையான் அறியலாம். வேலின் உட்புறத்தே கிடுகு வேயப்படுதலான் தூண்டிற் கோலை வேல் போன்றதென்றும், அக் கோலின் கீழ்க் கூரையைக் கிடுகு என்றும் உவமை கூறினர் என்று அறிக. நிலவும், இருளும் நிரலே மணலுக்கும், வலைக்கும் உவமைகள், எஃகம் பலகையொடு நிரைஇ எனவும் (பெரும்பாண்-119 - 20) பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து (முல்லை-41) எனவும் வருவனவற்றால் மறவர்கள் படைகளால் அரணியற்றுதலை அறியலாம். முன்றில் - ஈண்டு முற்றத்தை யுடைய இல் என இரண்டனுருபு விரித்தோதுக. முன்று - முன்பு; முற்றம்.

வருணன் வழிபாடும், பரதவர் செயலும்

84-93 : வீழ்த்தாழை ............... உண்டாடியும்

பொருள் : வீழ்த்தாழை தாள் தாழ்ந்த வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர் - விழுதையுடைய தாழையின் அடியிடத்தே நின்ற வெண்டாளியினது தண்ணிய பூவாற் செய்த மாலையினையுடையராய், சினைச் சுறவின் கோடு நட்டு - சினையையுடைய சுறாமீனின் கொம்பை நட்டு அதனிடமாக, மனைச் சேர்த்திய வல்அணங்கினால் - தம் மனையிடத்தே சேர்த்த வலிய தெய்வங் காரணமாக, மடல் தாழை மலர் மலைந்தும் - மடலையுடைய தாழையின் மலரினைச் சூடியும், பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் - சருச்சரையினையுடைய பனையிற் கள்ளைப் பருகியும், புன்தலை இரும் பரதவர் பைந்தழை மாமகளிரொடு - புற்கென்ற தலையினையுடைய பெரிய பரதவர் பசிய தழையினை உடுத்த மாமை நிறமுடைய தம் பெண்டிரோடே கூடி, பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது உவவு மடிந்து உண்டு ஆடியும் - பரந்த கருமையையுடைய குளிர்ந்த கடல்மீது மீன் பிடித்தற்குப் போகாமல் உவவு நாளாகிய நிறைத் திங்கணாளிலே தவிர்ந்து தாம் விரும்பு முணவை யுண்டும் விளையாடுதலைச் செய்தும்;

கருத்துரை : தாழையின் அடியிலே நின்ற வெண்டாளியின் குளிர்ந்த மலராற் புனைந்த மாலையினையுடையராய்ச் சினையுடைய சுறாமீனின் கொம்பை நட்டு, அதனிடமாகத் தம் மனையின்கட் சேர்த்தப்பட்ட வலிய தெய்வமாகிய வருணனுக்கு வழிபாடு செய்து, அத் தெய்வத்திற் கிட்ட தாழை மலரைச் சூடியும், படைத்த பனையின் கள்ளைப் பருகியும், பரந்த கரிய குளிர்ந்த கடலிடத்தே வேட்டம் போதலைத் தவிர்ந்து உவா நாளிலே தாம் விரும்பும் உணவை உண்டும் தம் மனம் போனவாறு விளையாடியும் என்பதாம்.

அகலவுரை : வீழில் தாழையாகிய தெங்கின் விலக்குதற்கு வீழ்த்தாழை என்றார். வீழ்-விழுது, தாழைத்தாள் - தாழையின் அடியிடம். தெங்கினை வீழில் தாழை என்பதுண்டு என்பதனை இவ்வாசிரியரே பெரும்பாணாற்றுப்படையில் வீழில் தாழைக் குழவித் தீநீர் (57) என ஓதுதலான் அறிக. தாழ்ந்த - நின்ற என்னும் பொருட்டு. வெண் கூதாளம் - வெண்டகாளி என்னும் ஒருவகைச் செடி. சினைச் சுறவு - கருக்கொண்ட சுறாமீன். இம்மீன் முகத்திலே நீண்ட கொம்புடையதாம். நெய்தனில மாக்கள் வலை வளம் பெருகும் பொருட்டு அந்நிலத் தெய்வமாகிய வருணனைச் சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்து வழிபாடியற்றல் மரபென்க. இதனை,

புறவுக் கோட்டம் செயும்வனப்பின் பூவைமொழியார் விழிதான்வாழ்
இறவுக் கோட்டுக் கடல்பணிக்கும் எழிலா லவர்நாட்டின் ரிறைஞ்சும்
சுறவுக் கோட்டுட் கடலரசன் றோன்றி வரங்கள் இனிதருளும்
நறவுக் கோட்டு மலர்ப்புன்னை ஞாழற் பொதும்பர் எவ்விடனும்  (ஆனைக்காப்-நாட்-96)

எனவும்,

விருப்பின் மீன்கவர் வினைஞர் கோட்சுறா
மருப்பி னாடலும் வருதன் மாண்புணர்ந்(து)
ஒருப்பட் டீர்ம்புன லும்பற் போற்றித்தம்
கருத்து வாய்ப்பது கருங்க டற்புறம்  (தணிகைப் - திருநாட்டு - 136)

எனவும்,

சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்  (பெரியபுரா-திருக்குறிப்பு-7)

எனவும் பிற சான்றோர் கூறுமாற்றானும் அறிக. நிலம் காற்பகுதியாக, நீர் முக்காற்பகுதியாகிய கடலுக்குத் தெய்வம் ஆகலின் வருணனை வல்லணங்கு என்றார், பேரரசினை வல்லரசென்றாற் போன்று, தாழைமலரும், பனங்கள்ளும், அவ்வருணனுக்குச் சூட்டியும், படைத்தும் பின்னர்ச் சூட்டினராகலின் அணங்கினான், என ஏதுவாக்கினார். புன்றலை - எண்ணெய் வார்த்துப் பேணப்படாத தலை. திரளாகிய பரதவர் என்பார் இரும் பரதவர் என்றார். இனிக் கரிய நிறமுடைய பரதவர் எனினுமாம். பைந்தழை மாமகளிர் என்றது வருணனை வழிபடும் திருநாளாகலின் பசிய தழையாலாகிய ஆடையை உடுத்துள்ள பரத்தியர் என்றவாறு. மா - கருமை நிறம். கரிய நிறமுடைய பரத்தியர் என்க. இரும் பரதவர் என்றதற்கேற்ப மாமகளிர் என்ற நயம் உணர்க.

பிணர் -சருச்சரை, பெண்ணை - பனை. பிழி-கள். மாந்தி-உண்டு. பாயிரம் பனிக்கடல் என்றது பரப்புடைமையும் கருமையும் குளிர்ச்சியுடைமையுமாகிய கடலின் பண்புகளைச் சேரக் கூறியதாதல் காண்க. வேட்டம்-ஈண்டு மீன் வேட்டை. உவவு - நிறைமதிநாள். இதனால் வருணனை நிறைமதிநாளில் வழிபடுதல் உண்மை அறிக. வேட்டம் செல்லாமைக்கு ஏதுக் கூறியவாறும் காண்க. மடிதல்-தொழில் செய்யாதிருத்தல். தம் மனம் விரும்பிய உணவை யுண்டும், மனம் விரும்பியவாறு ஆடியும் என்பார், உண்டாடியும் என்றார். உண்டாடியும் என்றதற்கு நெற்கள்ளையுண்டு விளையாடியும் என்பர், நச்சினார்க்கினியர்.

கடலாட்டும், காவிரியாட்டும்

94-105 : புலவுமணல் .................... பெருந்துறை

பொருள் : புலவு மணல் பூங்கானல் - புலானாற்றத்தை யுடைய மணலையும் பூக்களையும் உடைய கடற்கரையிடத்தே, மாமலை அணைந்த கொண்மூப்போலவும் -கரிய மலையைச் சேர்ந்த முகில்போலவும், தாய்முலை தழுவிய குழவிபோலவும் -தாயின் முலையைத் தழுவிய பிள்ளைபோலவும், தேறுநீர்ப் புணரியொடு ஆறு தலைமணக்கும் மலியோதத்து ஒலிகூடல் - தெளிந்த கடற்றிரையோடே காவிரிப்புனல் கலக்கின்ற மிக்க ஓதத்தின் ஒலியை யுடைய புகார்முகத்தே, தீது நீங்கக் கடல் ஆடியும் - தீவினை போகும்படி கடலிலே ஆடியும், மாசுபோகப் புனல் படிந்தும் - உப்புப் போகப் பின்னர் நீரிலே குளித்தும், அலவன் ஆட்டியும் - நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், உரவுத்திரை உழக்கியும் - பரக்கின்ற அலையிலே விளையாடியும், பாவை சூழ்ந்தும் - பாவைகளைப் பண்ணியும், பல்பொறி மருண்டும் - ஐம்பொறிகளான் நுகரும் பொருள்களை நுகர்ந்தும், அகலாக் காதலொடு பகல் விளையாடி - நீங்காத விருப்பத்துடனே பகற்பொழுதெல்லாம் விளையாடுகையாலே, பெறற்கருந் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் - பெறுதற்கரிய பழைய தலைமையினையுடைய சுவர்க்கத்தை ஒக்கும், பொய்யா மரபில் பூமலி பெருந்துறை - பொய்த்தலில்லாத முறைமையினையுடைய பூக்கள் மலிந்த பெரிய காவிரித்துறையினையும் உடைய;

கருத்துரை : புலானாற்றத்தையுடைய மணற்பரப்பினையுடைய பூக்கள் மலிந்த கடற்கரை மருங்கே, தெளிந்த நீரையுடைய கடலிலே காவிரி கலக்கும் புகார்முகத்தே, கரிய மலையை அணைந்த முகிற்றிரள் போன்றும், தாயின் முலையைத் தழுவிய பிள்ளை போன்றும், நிரலே, மிக்க ஓதத்தின் ஒலியுடைய கடலிலே தீவினைபோக நீராடியும், கடலாடியதனால் உண்டாய உப்பு நீங்கக் காவிரிப் புனலிலே குளித்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், அலையிலே விளையாடியும், பாவைகள் செய்தும், ஐம்பொறிகளும் நுகர்தற்குரிய பொருள்களை நுகர்ந்தும், நீங்காத விருப்பத்தோடே பகற்பொழுதிலே விளையாடி இன்புறுதற்கிடமாகலான், பெறுதற்கரிய பழைய தலைமையினையுடைய சுவர்க்க நாட்டையே ஒப்பாகின்ற, பொய்த்தலில்லாத முறைமையினையுடைய பூக்கள் மலிந்த காவிரிப் பேரியாற்றின் துறையினையுடைய (பட்டினம்) என்பதாம்.

அகலவுரை : புலவு - புலானாற்றம். பூங்கானல் - பூக்களையுடைய கடற்கரை. மாமலை - கரிய மலை. கொண்மூ-முகில். மலையை அணைந்த முகிற்றிரள் கடலாடும் மக்கட் குழுவிற்கும், தாய் முலை தழுவிய சேய் காவிரியாற்றில் ஆர்வத்தோடு படியும் மக்கட் குழுவிற்கும் நிரை நிரையாக உவமையாம். கடலிடத்தே படியும் மக்கட் கூட்டத்திற்கு முகில் மெய்யுவமம் ஆகவும் காவிரியிற் படியும் மக்கட் கூட்டத்திற்குக் குழவி பயவுவமமாகவும் கொள்க. என்னை? காவிரியைத் தாயாகவும் மக்களைக் குழவியாகவும் கொள்ளுதலை,

வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி  (சிலப்.கானல்: 27)

என்றும்,

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் (சிலப்.நாடு. 148) என்றும் ஆசிரியர் இளங்கோவடிகளார் கூறுதலானறிக.

சரயு அன்னது தாய்முலை அன்னது  (கம்ப.ஆற்-12)

எனக் கம்பநாடரும், யாற்றினைத் தாயாகவும், மக்களை அதன் குழவியாகவும் உவமித்தல் காண்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர், இவ்வுவமைகளைக் கடலோடு காவிரி கலத்தற்கே கொண்டு, கொண்மூ என்றதற்குச் செக்கர் மேகம் என வலிந்து பொருள் கூறி, கரிய உயர்ந்த திரைமீதே சிவந்த யாற்றுநீர் பரந்ததற்கு உவமை என்றும், தாய் முலை தழுவிய சேய் என்றதற்கு இது ஒன்றுபடுதற்கு உவமை என்றும் கூறியுள்ளார். தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும் கூடலில் மலையணைந்த கொண்மூப்போலத் தீது நீங்கக் கடலாடியும், தாய்முலை தழுவிய குழவி போல மாசுபோகக் காவிரிப் புனலாடியும் என்றவாறு. தேறுநீர் - தெளிந்த நீர். புணரி -கடல். தலைமணத்தல்-கூடுதல். மலியோதம் - மிக்க கடற்பெருக்கு. கூடல் - கலக்குமிடம். கடலாடுதல் தங்கள் தீவினை கழிதற் பொருட்டன்றி ஆர்வத்தாலன்று. புனல்படிதல் அப்புனலின்கண் ஆர்வமிக்குடைமையால் ஆகலின் இரண்டு உவமை எடுத்தோதினர் என்க. மாசு -கடற்கண் ஆடியதனால் ஏற்பட்ட உப்பாகிய அழுக்கு.

அலவனாட்டல் - நண்டுகளைப் பிடித்து ஆட்டுதல். இது நெய்தனிலச் சிறார்களின் செயலாகக் கொள்க. பொன்வரி யலவன் ஆட்டிய ஞான்றே (குறுந்-303:7) என்றும், ஓரை மகளிர் ஓராங் காட்ட வாய்ந்த அலவன், (குறுந்-36:5-9) என்றும், கோதையள், திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி, (அகம்: 280:2.3) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. பாவை சூழ்தல் - பாவை செய்தல், பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் (குறுந். 276-1) என்றார் பிறரும். பல்பொறி - செவி வாய் கண் மூக்கு மெய் என்னும் ஐம்பொறி. எனவே கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பமும் நுகர்ந்து என்றவாறு. அப்புலன்கள் தம் சுவைகாட்டி மருட்டு வனவாதலால் அவற்றில் மருண்டு என்றார். அகலாக் காதல் என்றது அக் காவிரித்துறை தரும் இன்பத்தைச் சிறப்பித்தவாறு. இங்ஙனம் ஐம்பொறியும் ஆரநுகரும் இன்பமுடைமையின் காவிரித்துறையைப் பெறற் கருந்துறக்கம் ஏய்க்கும் என்றார். ஏய்க்கும்-ஒக்கும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவ்வுவமையை வாளா பிரித்துப் பின்னர் வரும் நெடுங்கால் மாடத்திற்கு உவமையாக்கினர். நீர்ப்பரத்தல் பொய்யாததும் பூக்கள் மிக்கதும் பெரியதும் ஆகிய காவிரித்துறை என்க. இத்தகைய துறையையுடைய பட்டினம் என முடிக்க.

காவிரிப்பூம்பட்டினத்தில் இராக்காலத்து இனிய நிகழ்ச்சிகள்

106-115 : துணைப்புணர்ந்த .................. கங்குலான்

பொருள் : துணைப்புணர்ந்த மடமங்கையர் - தங்கணவரைக் கூடின மடப்பத்தையுடைய மகளிர், அப்புணர்ச்சிக்குப் பின்னாக, பட்டு நீக்கித் துகில் உடுத்தும் - தாம் முன்னர்க் களைந்து போகட்ட பட்டாடையைத் தவிர்த்துத் தங்கணவர்க்குரிய துகிலையுடுத்தும், மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும் - தாம் பருகற்குரிய மட்டினைத் தவிர்த்துத் தங்கணவர் பருகற்குரிய மதுவினைப் பருகியும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - இங்ஙனமே கணவர் சூடுதற்குரிய கண்ணியை மகளிர் சூட்டிக்கொள்ளவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் -மகளிர் அணியவும் மரபிற்றாய மாலையை மைந்தர்கள் அணிந்துகொள்ளவும், நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக் கொடுந்திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும் - நெடிய தூண்களையுடைய மாடங்களிலே அவிந்தன போக ஒளியுடையனவாய் எஞ்சிய விளக்குகளைப் பார்த்து வளைந்த படகுகளையுடைய மீன்பிடிப்போர் அவையிற்றில் நிறமிக்க ஒளி விளக்குகளை எண்ணா நிற்பவும், பாடல் ஓர்த்தும் - ஒருசார் மக்கள் இசைப்பாடல்களைச் செவிமடுத்தும், நாடகம் நயந்தும் - கூத்தாட்டுக்களை விழைந்து கண்டும், வெண்ணிலவின் பயன் துய்த்தும் -வெள்ளிய நிலாவான் உண்டாய காட்சியின்பத்தை நுகர்ந்தும், கண் அடைஇய கடைக்கங்குலான் - அயர்த்துக் கண்துயில் கொள்ளற்குக் காரணமான இரவின் கடையாமத்தே;

கருத்துரை : தங்கணவரைக் கூடின மடப்பத்தையுடைய மகளிர் அப்புணர்ச்சிக்குப் பின்னர்த் தாம் முன்னர்க் களைந்து போகட்ட பட்டை உடாதே தங்கணவரின் துகிலை உடாநிற்பவும், தாம் பருகற்குரிய மட்டினைப் பருகாதே தங்கணவர் பருகற்குரிய மதுவினைப் பருகிக் களி மிகுதியால் மகிழவும், இங்ஙனமே அனந்தர் மயக்கத்தாலே மைந்தர் சூடுதற்குரிய கண்ணியை மகளிர் சூடவும் மகளிர் கோதையை மைந்தர் அணியவும், கடலிலே உவவுமடியாது வேட்டஞ் சென்ற மீன் பிடிப்போர் பட்டினத்து மாடங்களிலே அவிந்தன போக, எஞ்சிய ஒளிவிளக்குகளை எண்ணவும், ஒருசார் மக்கள், இசைப்பாடல்களைக் கேட்டின்புறவும், ஒருசார் நாடக வின்பம் நயந்து காணவும், ஒருசிலர் நிலவின்கண் உலகிற்றோன்றும் இயற்கை யின்பத்தே தோய்ந்து மகிழவும், இங்ஙனம் பல்வேறாக இன்புற்றார் அனைவரும் அவற்றை மறந்து கண்துயில் கோடற்குக் காரணமான இரவின் கடையாமத்தே என்பதாம்.

அகலவுரை : இரவின் இடையாம நிகழ்ச்சிகள் என்பது தோன்ற துணைப்புணர்ந்த என இறந்தகாலத்தாலோதினார். இடையாம மாகலின் அனந்தர் மயக்கத்தால் இங்ஙனம் முறை பிறழ்ந்தனர் என்றவாறு. பட்டு நீக்கித் துகிலுடுத்து மட்டு நீக்கி மதுமகிழ்ந்து என்றதற்கு பட்டுடுத்தவற்றை நீக்கிப் புணர்ச்சிக் காலத்துக்கு நொய்யவாகிய வெள்ளியவற்றை உடுத்தும், கள்ளுண்டலைக் கைவிட்டுக் காமபானத்தை உண்டு மகிழ்ந்தும் என்றும் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர்; இரவிற்கோர் கோலம் கொடியிடையார் தாங்கொள்ள என்னும் கருத்தில் இங்ஙனம் கூறலும் இனிதே எனினும், ஆசிரியர் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில்,

சென்ற ஞாயிறு நண்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியம் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்
காத லின்றுணை புணர்மார் ..........
.......................................................
மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப  (546-554)

என அக்கருத்தே தோன்றக் கூறுமாறு போன்று ஈண்டுக் கூறப்படாமையும், இரவின் கடையாமத்திற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே கூறப்படுதலானும், துணைப்புணர்ந்த மடமங்கையர் என இறந்த காலத்தாற் கூறிப் புணர்ச்சிக்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே இவைகள் என்பது பெறவைத்தமையானும், ஆசிரியர் உருத்திரங் கண்ணனார்க்கு அது கருத்தன் றென்க. இனி, உவாநாளினும் மடிந்திராதே வேட்டம்போன பரதவர் என்பார் கொடுந்திமிற் பரதவர் என்றார் எனினுமாம். பட்டினத்தே சில விளக்குகளே இரவு கடைபோக எரிவனவாகப் பலவும் படிப்படியாய் அவிந்துபோம். ஆகலின் இந் நிகழ்ச்சியினைக் கொண்டு இரவிற்பொழுதறிதல் பரதவர் வழக்கம்போலும். இன்பவாழ்வு தலைப்பட்ட மாந்தர் இரவுப்பொழுதைக் கழிக்கின்ற முறை கூறுவார், இயலிசை நாடகம் என்ற முத்திறத்துக் கலைஞர்களில், ஈண்டுப் பாடலோர்ப்போர் இசைத்தமிழ்ப் புலவரும், இசை நுகரும் உணர்ச்சியுடையோரும் என்றும், நாடக நயப்போர் நாடகப் புலவரும் அதனை நயப்போரும் என்றும், நிலவுப் பயன்கொள்வோர் இயற்றமிழ்ப் புலவரும் அதனை நயப்போரும் என்றும் கொள்க. நிலவுப் பயன் என்றது நிலாவின் காட்சியின்பம். அஃதாவது நிலாவொளி பரந்து,

ஆறெலாம் கங்கையே ஆய ஆழிதாம்
கூறுபாற் கடலையே ஒத்த குன்றெலாம்
ஈறிலான் கைலையே இயைந்த என்னினி
வேறுயாம் உரைப்பது நிலவின் வீக்கமே  (கம்ப-உண்-3)

என்னுமாறு,

எள்ளருந் திசைக ளோடியாரும் யாவையும்
கொள்ளை வெண்ணிலவினாற் கோலங் கோடலால்  (þ-4)

உணர்ச்சியுடையார்க்குண்டம் காட்சியின்பம் என்க. இவ்வின்பம் புலமையுள்ளும் பெற்றோர்க்கே உரியது. ஆகலின், அவரை இயற்றமிழ்ப் புலவர் என்றாம். இனி இக்கருத்தையே பன்முறையும் கண்டின்புற்ற கம்பநாடரும் தங் காவியத்தேயும்,

உண்ணா அமுதன்ன கலைப்பொருள் உள்ளத் துண்டும்
பெண்ணா ரமுதம் அனையார் மனத்தூடல் பேர்த்தும்
பண்ணான பாடல் செவிமாந்திப் பயன்கொளாடல்
கண்ணா லினிது துய்க்கவும் கங்குல் கழிந்த தன்றே  (கம்ப-வரைக்-77)

என இனிதின் ஓதுதல் காண்க. கண் அடைஇய-கண் அடைத்த; துயில்கொண்ட என்றவாறு. கடைக்கங்குல் - இரவின் கடையாமம். இவ்வின்பங்கள் நுகர்ந்தோர் அனைவரும் கண் அடைஇயதற்குக் காரணமான கடைக்கங்குல் என்க.

உல்கு செய்வோர் தன்மை

116-125 : மாஅகாவிரி ........... குறைபடாது

பொருள் : மாஅ காவிரி மணங் கூட்டும் தூஉ எக்கர்த் துயில் மடிந்து - பெரிய காவிரியாறு பூமணங்களைக் கொணர்ந்து கூட்டுதலுடைய தூய இடுமணலிலே துயில்கொண்டு கிடந்து, வால் இணர்மடல் தாழை வேலாழி வியன் தெருவில் - வெள்ளிய பூங்கொத்தையும் மடலையும் உடைய தாழையினையுடைய கடற்கரையின்கண் உள்ள அகன்ற தெருவிடத்தே, நல் இறைவன் பொருள் காக்கும் தொல்லிசைத் தொழில் மாக்கள் - நல்ல அரசனுடைய பொருளைப் பிறர் கொள்ளாமற் காத்தல் வல்ல பழைய புகழினையுடைய சுங்கங் கொள்வோர், காய்சினத்த கதிர்ச் செல்வன் தேர்பூண்ட மாஅபோல - சுடுகின்ற சினத்தை யுடைய கதிர்களையுடைய ஞாயிற்றினது தேர்பூண்ட குதிரைகளைப் போன்று, வைகல்தொறும் அசைவின்றி - நாடோறும் மடிந்திராமல், உல்கு செய - சுங்கங்கொள்ளா நிற்பவும், குறைபடாது - குறையாமல்;

கருத்துரை : பெரிய காவிரியாறு மலர்மணத்தைக் கொணர்ந்து கூட்டாநின்ற எக்கர் மணலிலே (கடைக்கங்குலில் மட்டும் சிறிது) துயில் கொண்டு கிடந்து (எஞ்சிய பொழுதெல்லாம்) வெள்ளிய பூங்கொத்துக்களையும் மடலையும் உடைய தாழைகள் நிறைந்த கடற்கரைத் தெருவின்கண், நல்ல அரசனுடைய பொருளைப் பிறர் கொள்ளாதே காவல் செய்தலையுடைய, பழைய புகழுடைய சுங்கங் கொள்ளும் தொழில் செய்வோர், ஞாயிற்றின் தேர்பூண்ட குதிரைகள் போன்று ஒரு சிறிதும் மடிந்திராதே நாடோறும் சுங்கங்கொள்ளா நிற்பவும் குறையாமல் என்பதாம்.

அகலவுரை : இராப்பொழுதில் தாமறியாதே பொருள்கட்குச் சுங்கமிறுக்காது களவிற் கொண்டுபோய் விடாதபடி நல்லிறைவன் பொருளைக் காக்கும் தொழில்மாக்கள் என்க. ஈண்டு நல்லிறைவன் பொருள் என்றது உல்குபொருளை; என்னை?

உறுபொருளும் உல்குபொருளும் தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்  (குறள்-756)

என்றோதுபவாகலான். கடையாமத்தேயும், இவர்கள் துயில் இன்பங் கருதி இல்லங்கட்குச் செல்லாமல் ஆண்டே துயில்வர், என அவர் காவற் சிறப்பை விதந்தோதியவாறு காண்க. முன் யாமங்களிலே துயின்றோரைக் காவலாக வைத்து இவர் அக் கடையாமத்துத் துயில்வர் போலும்.

வேலா-கரை. ஆழி - கடல். ஆழிவேலா எனமாறிக் கடற்கரையிற் றெருவென்க. இத் தெரு இச் சுங்கத் தொழின்மாக்கள் தெருவே போலும். காய்சினத்த கதிர்ச்செல்வன் தேர்பூண்ட மா என்ற தொடரில் மடிந்திராமைக்கு மாஉவமை என்பது வெளிப்படை. இனி, காய்சினத்த கதிர்ச்செல்வன், இவர்கள் இறைவனாகிய - கரிகாற் பெருவளத்தானுக்கு உவமையாதலும், குறிப்பாற் கொள்க. உல்கு கொடாதே போவாரைக் காய்தல் உண்மையும் காய்சினத்த என்பதனாற் கொள்க. உல்கு கோடல் கொடுங்கோன்மை யன்று; செங்கோன்மையே என்பார் நல்லிறைவன் என்றார். ஈண்டு நன்மை செங்கோன்மை குறித்தது என்க. இனித் தொல்லிசைத் தொழிலின் மாக்கள் என்றது அத்தொழிலிலே தலைமுறை தலைமுறையாகப் பயின்று வல்லவர் எனப் புகழ்பெற்ற தொழின் மாக்கள் என்றவாறு. அத் தொழிலையன்றிப் பிறிது கல்லாமையின் மாக்கள் என்றார். ஞாயிற்றின் தேர் ஏழு குதிரைகள் பூண்டீர்ப்பது என்பது கவி மரபு. உல்கு - சுங்கப்பொருள். உறுபொருளும் உல்கு பொருளும் என்னும் குறளினும் அஃது இப்பொருட்டாதலறிக. மிகையாக உல்கு விதிக்கப்படாமையின் குறைபடாது என்றார். மிகையாய உல்கு விதிக்கப்படின் பண்டம் குறைபடும் என்பது முணர்க.

பண்டசாலை முன்றில்

126-141 : வான் .......................... முன்றில்

பொருள் : வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற் பரப்பவும் மாரிபெய்யும் பருவம்போல - முகில் தான் முகந்த நீரை மலையிடத்தே பொழியவும் மலையிற் சொரிந்த நீர் கடலிலே புகாநிற்பவும் மாரிக் காலத்தே பெய்யா நின்ற செவ்விபோன்று, நீரினின்று நிலத்து ஏற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் - கடலினின்றும் நிலத்தே ஏற்றப்படுவனவும் நிலத்தினின்று கடலின்கண் (மரக்கலங்களிலே) பரப்பப் படுவனவும் ஆகிய, அளந்து அறியாப் பலபண்டம் வரம்பறி யாமை வந்து ஈண்டி - நெஞ்சாலே அளந்து அறிதற்கு அரிய பல்வேறு பண்டங்களும் எல்லையின்றி வந்து குவிந்து கிடப்ப அவையிற்றை, அருங்கடிப் பெருங்காப்பின் வல் அணங்கினோன் - கிட்டுதற் கரிய மிகப் பெரிய காவலமைந்த சுங்கச் சாவடியிலே கள்வரைப் பெரிதும் வருத்தும் தன்மையுடைய இலச்சினை பொறிப்போன், புலிபொறித்துப் புறம்போக்கி - சோழமன்னன் அடையாள இலச்சினையாகிய புலி இலச்சினையிட்டுப் புறத்தே போக்கப்படுதலானே, மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போர் ஏறி - மதித்தறியப் பட்டனவாகிய பல்வேறு பண்டங்களையும் பொதிந்தடுக்கிய மூடைகளாகிய குவியலின் மேலே ஏறி, மலையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போல - முகில்கள் உலாவும் குவடுகளையுடைய பெரிய மூங்கிலையும் பக்கமலைகளையுமுடைய மலையிடத்தே உலாவும் வருடைமானின் தோற்றம் போல, கூர் உகிர் மலிக் கொடுந்தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் - கூரிய உகிரையுடைய நாயில் வளைந்த காலையுடைய ஏறானவை ஆட்டுக்கிடாயோடே குதிக்கும் பண்டசாலையின் முற்றத்தினையும்;

கருத்துரை : முகில் தான் முகந்த நீரை மலையிலே பொழியவும் மலையிலே பொழியப்பட்ட நீர் கடலிலே பரவவும் நிகழும் மாரிக்காலத்துச் செவ்வி போன்று, கடலிலே கலங்களில் வந்த பண்டங்கள் கரையிலேற்றப் படுவனவும், நிலத்தினின்றும் வந்த பண்டங்கள் நீரின்கட் கலங்களிலே பரப்பப்படுவனவுமாகிய இருவேறு பல்வகைப் பண்டங்களும் அளத்தற்கரியவாய்ச் சுங்கச் சாவடியிலே வந்துகுவிய, அவையிற்றை வருத்துந் தன்மையுடைய இலச்சினை யிடுவோன் சோழ மன்னனுக்கு அடையாளமாகிய புலியிலச்சினையிட்டுப் புறத்தே போக்குவானாக, அப் பண்டங்களைப் பொதிந்த மூடைகளை அடுக்கிய குவியலின் மேல் மலைகளில் ஏறிக் குதிக்கும் வருடைமான்கள் போன்று, ஆட்டுக் கிடாய்களும் ஏற்றை நாய்களும் ஏறிக் குதியாநிற்கும் பண்டசாலை முற்றத்தினையும் (உடைய பட்டினம் என்க) என்பதாம்.

அகலவுரை : கார்ப் பருவத்தே கடலின் நீரை முகந்துகொண்டு வந்து முகில்கள் மலைநிலத்தே பொழிதலும், யாறுகள் மலையின்கண் நீரைக் கொணர்ந்து கடலிலே பரப்புதலும் ஒரே அமயத்து நிகழ்தல் உண்மையின், பிற நாட்டினின்றும் கடலிலே நிலங்களிற் கொணர்ந்து கரையேற்றப்படுதலையும், நானிலங்களினின்றும் கடலிலே கலத்திற் செலுத்தற் பொருட்டு வந்து அகநாட்டுப் பண்டங்கள் குவிதலையும் உடைய செவ்வியை அப்பருவத்தோடே உவமித்தார்.

வான் : முகிலுக்கு ஆகுபெயர். மலைப்பொழிதல் எனச் சிறப்புடைமை கருதிக் குறிஞ்சி ஒன்றனையே கூறினார். மாரி பெய்யும் பருவம் கார்ப்பருவம் என்க. வான் முகந்த நீர் மலைப்பொழிதல் போல, நீரினின்று நிலத்தேற்றவும், மலைப்பொழிந்த நீர் கடற்பரப்புதல் போன்று நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் என இயைத்துக் காண்க. மேலும் மேலும் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருத்தலின் அளந்து காண்டற் கரியவாயின என்க.

வரம்பறியாமை அவைகள் கிடக்கும் நிலஎல்லை அறிய வியலாதவாறு என்க. ஈண்டுதல் - குவிதல். அருங்கடிப் பெருங்காப்பு என்றது. கிட்டுதற்கரிய மிகப் பெரிய காவல் என்றவாறு. கடி, மிகுதி குறித்து நின்றதென்க. இங்ஙனமின்றி அருங்கடி திண்ணிலைக் கதவம் முதலாயின என்றும், பெருங்காப்பு, காவலர் நின்று காக்கும் காவல் என்றும் கூறுவாருமுளர். வலியுடை வல்லணங்கினோன் என்றது அரசியல் அதிகாரமாகிய பலியையும் கள்வரைப் பெரிதும் வருத்துந் தன்மை யுடையோனுமாகிய இலச்சினைக் கண்காணியை என்க. புலி, சோழர் அரசியலிலச்சினை. இதனை, கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோர்க்கு (5:98) என்றும், உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் (10: 142) என்றும், சிலப்பதிகாரத்து ஓதுதலான் உணர்க. புறம்போக்குதல் - இலச்சினை இட்ட இடத்தினின்றும் போராகக் குவிக்கும் வெளிக்கு உய்த்தல். பொதிமூடை : வினைத்தொகை. பண்புத்தொகை எனினும் இழுக்கின்று. மூடைப்போர் - மூடையின் குவியல். அக்குவியல் மிகப் பெரிதென்பார், மழையாடு சிமைய மால்வரை என உவமையை அடையான் விதந்தார். சிமையம் - மலைக்குவடு. கவான் - பக்கமலை. வரையாடு வருடை -மலையின்கண் ஆடுகின்ற வருடை என்னும் ஒருவகை மான். வரைக்கவான் வரை என, வரை, இருகாற் போந்தமையின் வரைக்கவான் என்றதன்கண் வரை மூங்கில் என்க. ஏழகம் மேழகம் என்பன ஆட்டுக்கிடாய் என்னும் ஒரு பொருளன. ஞமலி-நாய். ஏற்றை - நாயில் ஆண். உகளுதல் - தாவிக்குதித்தல்.

அங்காடித் தெரு

142-158 : குறுந்தொடை ...................... ஆவணத்து

பொருள் : குறுந்தொடை நெடும்படிக்கால் கொடுந்திண்ணை - அணுகின படிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தின சுற்றுத் திண்ணையினையும், பல் தகைப்பின் - பல கட்டுக்களையும், புழை - சிறுவாயிலையும், வாயில் - பெரிய வாயிலையும், போகு இடைகழி - நீண்ட இடைகழிகளையும் உடைய, மழைதோயும் உயர்மாடத்து - முகில் தவழும்படி உயர்ந்த மேன் மாடத்தே, சேவடி-சிவந்த அடியினையும், செறி குறங்கின் - செறிந்த துடையினையும், பாசிழை -பசிய பூணினையும், பகட் டல்குல் - பெரிய அல்குலினையும், தூசுடை - தூசாகிய உடையினையும், துகிர்மேனி - பவளம் போன்ற நிறத்தினையும், மயில் இயல் -மயிலின் இயல்போலும், இயலினையும் மான்நோக்கின் - மான்போலும் பார்வையினையும், கிளி மழலை - கிளிபோலும் மழலைமொழியினையும், மென்சாயலோர் - மெல்லிய சாயலையும் உடைய மகளிர், வளி நுழையும் வாய் பொருந்தி - தென்றல் வரும் காலதர்களைச் சேர்ந்து, ஓங்குவரை மருங்கின் நுண் தாது உறைக்கும் காந்தளந் துடுப்பின் கவிகுலையன்ன செறி தொடி முன்கை கூப்பி - உயர்ந்த மலைப்பக்கத்தே மெல்லிய தேன் துளிக்கும் செங்காந்தளினது அழகிய கண்ணிடத்தே இணைந்த குலையை ஒத்த செறிந்த தொடியினையுடைய முன்கையைக் குவிப்ப, செவ்வேள் வெறியாடு மகளிரொடு செறிய - முருகவேளுக்கு வெறியாட்டயரும் மகளிர் பாடும் இசையோடே பொருந்த, தாஅய்க் குழல் அகவ யாழ் முரல முழவு அதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து - பரந்து வங்கியம் இசைப்ப யாழ் ஒலிப்ப முழவு முழங்க முரசுமுழங்க எடுத்த திருநாள் நீங்காத அகன்ற அங்காடித் தெருவின்கண்;

கருத்துரை : அணுகின படிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தப்பட்ட சுற்றுத் திண்ணைகளையும், பல கட்டுக்களையும், சிறுவாயில்களையும், பெருவாயில்களையும், நீண்ட இடைகழிகளையும் உடைய முகில் தவழ உயர்ந்த மேனிலை மாடத்தே, சிவந்த அடியினையும் செறிந்த துடையினையும், பசிய பூணினையும், பெரிய அல்குலினையும், தூசினையும், பவழம் போலும் மேனியினையும், மயில் இயலினையும், மான் பார்வையினையும், கிளி போன்ற மழலை மொழியினையும், மென்சாயலையும் உடைய மகளிர், தென்றல் வரும் காலதர்களைச் சேர்ந்து தம் காந்தட்பூப் போலும் கைகளைக் குவித்துத் தொழாநிற்ப, முருகவேளுக்கு வெறியாட்டு எடுக்கும் மகளிர் பாடும் பாடலோடு இயையுமாறு, பரந்து குழலும் யாழும் முழவும் முரசும் ஒலிப்ப எடுத்த திருநாள் நீங்காத அகன்ற அங்காடித் தெருவின்கண் என்பதாம்.

அகலவுரை : குறுந்தொடை - ஒன்றற்கொன்று அணித்தாகத் தொடுக்கப்பட்ட படிகள். படிக்கால்-படிகள் தொடுக்கப்பட்ட சட்டங்கள். உயர்ந்த மாடங்களினும் ஏறவேண்டுதலான், நெடும்படிக்கால் கூறினார். கொடுந்திண்ணை-சுற்றுத் திண்ணை. பஃறகைப்பு - பல் தகைப்பு என்பது புணர்ச்சியில் லகரம் ஆய்தமாய்த் திரிந்து நின்றது; பல கட்டுக்கள் என்னும் பொருட்டு. ஒரு கட்டுக்கும் மற்றொரு கட்டுக்கும் இடையே சுவர் முதலியவற்றால் தடைசெய்யப்படுதல் பற்றிக் கட்டுக்கள் தகைப்பு எனப்படும். தகைத்தல் தடுத்தல் என்னும் பொருட்டென்க. புழை வாயில் - புழையும் வாயிலும் என உம்மை விரித்தோதுக. புழை - சிறிய வாயில்; வாயில் - பெரிய வாயில் என்க.

போகு இடைகழி - நீண்ட இடைகழி. (ரேழி என்பது மது) உள் வீட்டிற்கும் தெருத்தெற்றிக்கும் இடையே வழியாக அமைதலின் இடைகழி எனப்பட்டது. மழை-முகில். மழை தோயும் உயர்மாடம் என்றது அவ்வில்லங்களின் மேனிலை மாடத்தின் உயரத்தை விதந்தோதியவாறு. மாடத்துச் சாயலோர் வளிநுழையும் வாய் பொருந்திக் கைகூப்ப என இயைபு காண்க. குறுந்தொடை என்பது தொடங்கி மாடத்தின் சிறப்போதியவாறே, அம்மாடத்தே வாழும் மகளிர் சிறப்பு இனி ஓதுகின்றார் என்க. மனைக்கு விளக்கம் மடவார் ஆகலின், அம் மாடமனைக்கேற்ப மடவார் சிறப்பும் நன்கு ஓதுதல் காண்க.

சேவடி - சிவந்த அடிகள். செறிகுறங்கு - ஒன்றனோடொன்று நெருங்கிய தொடை. இரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கு (19-20) என்றார் சிறுபாணினும். பாசிழை - பசிய பூண்கள். மணிகள் அழுத்தி இழைக்கப்படுதலின் இழையாயிற்று. பகடு - பெரிது. தூசுஉடை - தூசாகிய உடை என்க. துகிர் - பவளம். இது மேனிக்கு உருவுவமை. மயிலியல் - மயில் போலும் தோற்றம். மான் நோக்கு - மான் போன்ற பார்வை. மழலை - எழுத்து நிரம்பாத மொழி. மென்சாயல் என்றது, மனனுணர்வுக்குப் புலனாக மகளிர் பாற் கிடக்குமொரு மென்மைத் தன்மை; இதனை நெஞ்சு கொளினல்லது காட்டலாகாப் பொருள் என்பர் தொல்காப்பியனார். வளி நுழையும் வாய் - காற்று வரும் வழி : ஈண்டு வளி தென்றலைக் குறித்து நின்றது. இவ்வழியைச் சாளரம் என்ப; காலதர் எனினுமாம். வேனிற் பள்ளித் தெள்வளி தரும் நேர்வாய்க் கட்டளை, (61-2) என்றார், நெடுநல் வாடையினும், மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் என இளங்கோவடிகளாரும் ஓதுதல் காண்க. இவற்றால் பண்டைநாள் தமிழ்மக்கள் சிறந்த முறையில் இல்லங்கள் எடுத்து வாழ்ந்தமை உணர்க.

மழைதோயும் உயர் மாடத்தே சாளரந் தோறும் நின்று முருக வேளைத் தொழக் கூப்பிய மகளிர் செங்கைகட்கு ஓங்குவரை மருங்கின் நுண்டா துறைக்கும் காந்தளம் துடுப்பின் கவிகுலையை உவமை கூறியதன் சிறப்பினை உணர்ந்து மகிழ்க. மலை, மாடத்திற்கும், காந்தளஞ் செடி மகளிர்க்கும் அச் செடியின் கணுக்களிற் றோன்றிக் கவிந்த மலர் அவர் கூப்பிய செங்கைக்கும் உவமைகளாகக் கொள்க. நுண்டாது - நுண்ணிய தேன்; பூந்துகளுமாம். உறைக்கும் - துளிக்கும். மலைநிலத் தெய்வமாகிய முருக வேளுக்கு உவப்பான மலையையும், செங்காந்தளையும் உவமை கொண்டமை காண்க. செவ்வேள் வெறியாடுமகளிர், செவ்வேளுக்கு வெறியாடு மகளிர் என்க. மகளிர் செவ்வேளுக்கு வெறியாடுதலை,

.................................... ஒருசார்
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூட் டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணி  (611-14)

எனவரும் மதுரைக்காஞ்சியினும் காண்க.

குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப

என்னும் இவ்வழகிய அடி செந்தமிழ்ச் சிறப்பெழுத்தாகிய ழகர வொலி பயின்று இழுமென்னும் இன்னோசையவாய் ஓதுங்கால் பெரிதும் சுவையுடையன வாதலை உணர்ச்சி கருவியாய் உணர்க. விழவு - திருவிழா. அறாத - நீங்காத. நாடோறும் திருவிழா நிகழும் தெருவாகலான் வியல் ஆவணம் என்றார். வியல்-அகலம், வியலென் கிளவி அகலப் பொருட்டே, (உரி-66) என்பர் தொல்காப்பியர். ஆவணம் - அங்காடித் தெரு. இனி, அவ்வாவணத்தின்கண் உயர்த்திய கொடிகளின் சிறப்பினைக் கூறுகின்றார்.

பட்டினத்தில் உயர்த்திய பல்வேறு கொடிகளின் சிறப்பு

156-171 : மையறு ...................... கொடியும்

பொருள் : மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலரணி வாயிற் பலர் தொழு கொடியும் - குற்றமற்ற தலைமையினையுடைய தெய்வமாகிய கந்தழியோடு சேர்த்தெண்ணப்பட்ட மலராலே அழகு செய்யப்பட்ட திருக்கோயில் வாயில்களிலே பலராலும் தொழப்படும் முறைமைத்தாகிய கொடிகளும், வருபுனல் தந்த வெண் மணல் கான் யாற்று உருகெழு கரும்பின் ஒண்பூப்போல - வருகின்ற யாற்றுநீர் கொண்டு வந்த வெள்ளிய மணலையுடைய காட்டியாற்றின் கரையினின்ற அழகு பொருந்தின கரும்பினது ஒள்ளிய பூவை ஒப்ப, கூழ் உடை கோடு மஞ்சிகை - சோறுடைய கொழுவிய கூடைக்கும், தாழ்உடை தண் பணியத்து - தாழ விரித்த உடையிற் பரப்பிய தண்ணிய பண்ணியங்கட்கும், வாலரிசிப் பலி சிதறி - வெள்ளிய அரிசியாகிய பலியினைத் தூவி, பாகு உகுத்த பசுமெழுக்கில் காழூன்றிய கவிகிடுகின் மேல் - சந்தனக் குழம்பினைக் கொட்டி மெழுகிய பசிய மெழுக்கு நிலத்தின் மேலே வேலின் காம்பினைக் கால்களாகவூன்றிக் கவித்த கிடுகின் மேலே, ஊன்றிய துகிற் கொடியும் - நாட்டப்பட்ட துகிலாலாகிய வீரவணக்கக் கொடிகளும், பல்கேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் - பலவாகிய கேள்வியறிவோடே நூற்றுறை முற்ற ஓதிய பழைய ஆணையை உடைய நல்ல ஆசிரியர்கள், உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும் - வாது செய்யக் கருதி உயர்த்திய அஞ்சுதற்குக் காரணமான கொடிகளும்;

கருத்துரை : குற்றமற்ற தலைமையினையுடைய தெய்வத்தோடே எண்ணும் சிறப்பினையுடையவும், மலரால் அழகு செய்யப்பட்ட திருக்கோயில் வாயிலிடத்தே உயர்த்தப்பட்டனவும் பலரும் தொழுந் தன்மையுடையனவுமாகிய தெய்வக் கொடிகளும், சோறு நிறைத்த கூடைகளையும் தாழத் துணிவிரித்துப் பரப்பிய பண்டங்களையும் வெள்ளிய அரிசிப்பலிதூவி வீரத் தெய்வங்கட்குப் படைத்துச் சந்தனம் அல்லது ஆப்பி முதலிய சேற்றாலே இட்ட பசிய மெழுக்குடைய நிலத்தே வேலின் காம்பைக் காலாக நட்டுக் கிடுகுப்படையை வேய்ந்த பந்தரின் மேலே அவ்வீரவணக்கம் குறித்துயர்த்த யாற்றின் கரையில் வளர்ந்த கரும்புகளின் ஒள்ளிய பூப்போன்ற வீரக் கொடிகளும், பல்வேறு கேள்விகளையும் விரும்பிக் கேட்டலோடு நூற்றுறை முற்றக் கற்றமைந்த பழைய ஆணையினையுடைய நல்ல ஆசிரியர்கள் வாது செய் தலைக் கருதி உயர்த்திய அச்சந் தரும் கல்விக் கொடிகளும் என்பதாம்.

அகலவுரை : ஆசிரியர் தொல்காப்பியனார்,
கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே  (புறத், 88)

எனக் கொடிநிலை வாழ்த்தைக் கடவுளொடு சேர்த்தெண்ணிய சிறப்புடைமை நோக்கி, மையறு சிறப்பிற் றெய்வம் சேர்த்திய பலர் தொழு கொடியென்றார். இக் கொடியை முருகனுக்குரிய கோழிக்கொடி ஒன்றனையே குறித்த தென்பாருமுளர். காவிரிப்பூம் பட்டினத்துள்ள பல்வேறு கொடிகளையும் கூறப்புக்க ஆசிரியர் கோழிக்கொடி ஒன்றனையே கூறல் குன்றக் கூறலாம் என்க. என்னை?, அந்நகரத்தே,

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
.................................................
நால்வகைத் தேவரும் மூன்று கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்  (5: 169-178)

என ஆசிரியர் இளங்கோவடிகளார் ஓதக்காண்டலானும் கொடிச் சிறப்போதுவார் அனைத்துக் கொடியையும் ஓதுதலே மரபாகலானும் என்க. மையறு சிறப்பென்றார் யாதொரு பற்றுக்கோடுமற்ற முழுமுதற் கடவுள் என்றற்கு. ஒரே முழுமுதற் கடவுளையே பலரும் பல்வேறு கொடி யுயர்த்துத் தொழுவார் என்பார் பலர்தொழு கொடியும் என்றார். திருக்கோயில் என்பது தோன்ற மலரணிவாயில் என்றார். இனி, தெய்வத் திருக்கொடிகட்குப் பின்னாக அப்பட்டினத்தே வீர வணக்கங் குறித்துயர்த்திய கொடியைக் கூறுகின்றார். கூழ்-சோறு. சோறு நிறைந்த கூடைகளை வைத்துத் தாழத்துணி விரித்துப் பண்ணியங்களைப் பரப்பி, வாலரிசிப்பலி சிதறி, வீர வணக்கம் செய்துயர்த்திய கொடி என்றற்கே காழூன்றிய கவி கிடுகின் மேலூன்றிய துகிற்கொடி என்றார். காழ் - வேலின் காம்பு. கிடுகு-தோற்பரிசை. ஆருயிர்பேணாது மானம்பேணி விழுப்புண் பட்டிறந்த வீரர் தெய்வமேயாதலின். தெய்வஞ் சேர்த்திய கொடியோடு சேரவைத் தெண்ணினார். இனிக் கல்வி குறித்து நல்லாசிரியர் பட்டி மண்டபத்தே உயர்த்த கொடி கூறுகின்றார் என்க. இது பட்டிமண்டப மாதலையும், அம்மண்டபம் பூம்புகாரின்கண் இருந்ததென்பதனையும் ஆண்டு வாதிடுவோர் பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் ஆதலையும்,

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
இத்திறந் தத்தம் இயல்பினிற் காட்டும்
சமயக் கணக்கரும் தந்துறை போகிய
அமயக் கணக்கரும் ..................
ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்  (1:11-61)

எனவரும் மணிமேகலையானும் நன்குணர்க. கல்வி கேள்விகளில் வல்லுநர் அல்லாதார்க்கு இக்கொடி அச்சம் விளைத்தலின் உருகெழு கொடி என்றார். உரு-அச்சம். உருவுட் காகும் புரையுயர் வாகும் (உரி-4) என்பர் தொல்காப்பியர். ஒவ்வொரு சமயத்தினரும், ஒவ்வொருவகைப் பழைய ஆணையை யுடையராதலின், தொல்லாணை நல்லாசிரியர் என்றார். ஆணை ஈண்டு அவ்வச்சமய முதல்வரின் கட்டளை வடிவான மெய்ந்நூல்விதி.

இதுவுமது

172-182 : வெளில் ............................ நீழல்

பொருள் : வெளில் இளக்கும் களிறுபோல - அசையாத தறியினை அசைக்கும் களிற்றியானைகளைப் போன்று, தீம்புகார்த்திரை முன்றுறை - கண்ணுக்கு இனிதாகிய புகாரிடத்துத் திரையினையுடைய துறையின் முன்னே, தூங்கும் நாவாய் துவன்று இருக்கை - அசைகின்ற இயல்பினையுடைய மரக்கலன்கள் நிறைந்த இருக்கையின்கண், மிசைக்கூம்பின் நசைக்கொடியும் - பாய்மரத்தின் மேலாக உயர்த்தப்பட்ட வணிகராற் பெரிதும் விரும்பப்பட்ட கொடிகளும், மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலிமுன்றில் - மீனை வெட்டிப் பின்னர் இறைச்சியையும் அறுத்து அவ்விரு வேறு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தினையுடைய முற்றத்தினை உடைய, மணல் குவைஇ மலர் சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவின் - மணலைக் குவித்து மலர்களைச் சிதறிப் பலரும் புகுதற்குரிய கள்விற்கும் மனையிடத்துத் தெய்வத்திற்குக் கொடுக்கும் பலியினையுடைய கதவுகளிடத்தே, நறவு நொடைக் கொடியொடு - கள் விற்றலைக் குறித்துக் கட்டின கொடிகளும், பிற பிறவும் - ஏனைப்பண்டங்கள் விற்றலைக் குறித்துக் கட்டின பிற கொடிகளும், நனி விரைஇ - மிகச் செறிந்து, பல்வேறு உருவிற் பதாகை நீழல் - இங்ஙனம் பலவாய் வேறுபட்ட வடிவமும் வண்ணமுமுடைய கொடிகளின் நீழலின்கண்;

கருத்துரை : கண்ணுக்கு இனிதாகிய புகார்த் துறையின்கண், தறியை அசைக்கும் யானைகளைப்போன்று மரக்கலன்கள் அசைந்துநிற்கும் மரக்கலவிருப்பின்கண், அம்மரக்கலங்களின் கூம்பின்மேலே உயர்த்தப்பட்ட கொடிகளும், மீன் இறைச்சி முதலியவற்றை அறுத்துப் பொரிக்கும் ஆரவாரமுடைய முற்றத்தையும், மணலைக்குவித்து மலரைச் சிதறித் தெய்வத்தினை வணங்கும் கதவினையுமுடைய, பலரும் புகுதற்குரிய கள்விற்கும் மனையிடத்தே கள் விற்றலைக் குறித்துயர்த்திய கொடிகளும், ஏனைப்பண்டங்கள் விற்றலைக் குறித்துயர்த்திய கொடிகளும், இவ்வாறாகப் பல்வேறு வண்ணமும் வடிவம் உடைய கொடிகளின் நீழலின்கண் என்பதாம்.

அகலவுரை : வெளில் -யானைகட்டுந்தறி. இளக்குதல் - அசையும் படி செய்தல். யானை அசைந்துகொண்டே நிற்கும் இயல்பிற்றாகலின் அசைந்து நிற்கும் மரக்கலங்களுக்கு உவமை கூறினார். முன்னர் நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும் (31) எனப் படகுகள் வரிசையாய்க் கட்டப்பட்டிருத்தற்குப் பந்தியிற் கட்டப்பட்ட குதிரை வரிசையை உவமை கொண்டவர், ஈண்டுப் பெரிய மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருத்தலைத் தறியிடை அசைந்து நிற்கும் யானை வரிசையோடே ஒப்புவித்தல் அறிக. தீம்புகார் - காட்சி யின்பம் நல்கும் புகார் என்க. திரை முன்றுறை - அலையெறிதலையுடைய கடற்றுறை. துறைமுன் என்பது முன்பின்னாக மாறி நின்றது; முன்றில் என்பது போன்று. தூங்கும் நாவாய், அசைதலையுடைய நாவாய் என்க. அசைதற்குத் திரை முன்றுறை என்றது குறிப்பேதுவாதல் காண்க. நாவாய் துவன்றிருக்கை என்றது, மரக்கலங்கள், நிறுத்தி வைக்கும் இடத்தினை. இதனை,

........................ பெருநாவாய்
மழை முற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கை  (83-5)

என மதுரைக்காஞ்சியினும் கூறுதல் அறிக. துவன்று - நிறைதலையுடைய. துவன்று நிறைவாகும் (உரி-36) என்பது தொல்காப்பியம். மிசைக்கூம்பு - கூம்புமிசை என மாறுக. கூம்பு - பாய்மரம். வணிகர் அக்கொடிகளை விருப்பத்தோடே நோக்குதல் உண்மையின், நசைக்கொடி என்றார். நசை - விருப்பம். மீன் தசையினையும், இறைச்சியினையும் கள்ளுக்கு வெஞ்சனமாகப் பொரித்தனர் என்க. கள் இருக்குமிடத்தில் பேய்கள் அணுகாதபடி தெய்வம் பேணுதல் மரபு. மணலைக் குவித்து மலர் முதலியன சிதறி வணங்கும் புதவு என்க. பலர்புகு மனை என்றார் கட்குடிப்போர் பலரும் புகுதல் உண்மையின். நறவுநொடை - கள்விலை. கள் விலைக்கு விற்கப்படும் என்பதனைக் குறிக்கும் கொடி என்க. பிற - கள்ளல்லாத பிற பண்டங்கள். பிறவும் - அவையிற்றை விற்றல் குறிக்கும் வேறுகொடிகளும். நனி : மிகுதிகுறித்த உரிச்சொல். மிகவும் நெருங்கி என்க. பதாகை - கொடி (வடசொல்.)

இப் பூம்புகார்க் கொடிகள்போன்று,

ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச்
சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப்
புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடிப் பதாகை நிலைஇ  (365-73)

என, மதுரை மாநகரத்தே உயர்த்தப்பட்ட பண்டைநாட் கொடிச் சிறப்பை மதுரைக் காஞ்சியினும் காண்க.

பட்டின மறுகிற் பல்பொருள் வளங்கள்

183-193 : செல்கதிர் .................... மறுகின்

பொருள் : செல் கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின் - செல்கின்ற ஞாயிற்றின் ஒளி புகமாட்டாத வளவிய ஊர் எல்லைக் கண், செல்லா நல்லிசை அமரர் காப்பின் - கெடாத புகழினையுடைய தேவர்கள் பாதுகாவலாலே, நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் - கடலின்கண் மரக்கலங்களிலே வந்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும், காலின் வந்த கருங்கறி மூடையும் - நிலத்தின்கண் சகடங்களிலே வந்த கரிய மிளகுப் பொதிகளும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் - மேருவிலே பிறந்த மாணிக்கமும் சாம்பூநதம் என்னும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் - குடகுமலையிற் றோன்றிய சந்தனமும் அகிலும், தென்கடல் முத்தும் -தென்றிசைக் கடலிற் பிறந்த முத்தும், குணகடல் துகிரும் - கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கைவாரியும் - காவிரியாற்றில் உண்டாகிய பொருளும், காவிரிப்பயனும் - காவிரியாற்றில் உண்டாகிய பொருளும்,  ஈழத்துணவும் - இலங்கையினுண்டாகிய பொருளும், காழகத்து ஆக்கமும் - கடாரத்துண்டான பொருளும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி - பெறற் கரியனவும் பெரியனவுமாகிய இன்னோரன்ன பொருள்கள் நிலனெளியும்படி திரண்டு, வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் - செல்வம் தலைதெரியாது மயங்கிக்கிடக்கும் அகன்ற இடங்களையுடைய தெருவினையும்;

கருத்துரை : (பல்வேறு பதாகை நிழல் செறிதலாலே) செல்கின்ற ஞாயிற்றின் ஒளி புகுதமாட்டாத வளவிய ஊர் எல்லையின்கண், கெடாத புகழையுடைய தேவர்கள் பாதுகாவலாலே, கடலில் மரக்கலத்தே வந்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளும், நிலத்தில் சகடங்களில் வந்த கரிய மிளகுப்பொதிகளும், மேருவிலே பிறந்த மாணிக்கமணியும், சாம்பூநதம் என்னும் பொன்னும், குடகுமலையிற் பிறந்த சந்தனக்குறடும், அகின் மரமும், தென்றிசைக் கடலிற் பிறந்த முத்தும், கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கையாற்றிற் பிறந்த பொருள்களும் காவிரியிற் பிறந்த பொருள்களும், ஈழத்தே தோன்றிய பொருள்களும், கடாரத்துப் பிறந்த பொருள்களும், இன்னோரன்ன பிற இடங்களிலே பெறுதற்கரியனவும் பெரியனவுமாகிய பொருள்கள் நிலம் நெளிய வந்து குவிந்து, தலைதெரியாது மயங்கிக் கிடக்கும் மறுகினையுடைய, (பட்டினம்) என்பதாம்.

அகலவுரை : பல்வேறு கொடிகளும் வானத்தே செறிதலின், செல் கதிர் நுழையாதாயிற்றென்க. வரைப்பு - எல்லை. செல்லா நல்லிசை - கெடாத நல்லபகழி. அமரர் - தேவர். பெருங்கடலில் இயங்கும் மரக்கலங்கள் தெய்வங்களின் திருவருளாலே கரைசேரல்வேண்டும் என்பதும், தீங்கின்றிக் கரைசேர்ந்த மரக்கலங்களைத் தெய்வம் காத்து நல்கின என்பதும் பண்டையோர் கொள்கைபோலும். கோவலன் குல முதல்வன் ஒருவனைக் கடலின்கண் உண்டான தீதகற்றிக் கலத்தொடு ஒரு தெய்வம் கரையேற்றிக் காத்ததாக, அத்தெய்வத்தின் பெயரையே மாதவிமகவிற்கு நன்றியறிதற் கறிகுறியாக இடவேண்டும் என்று கோவலன் கூறியதாகவும் அத்தெய்வமே கூறும் மணிமேகலையான் அறியலாம்; அது

திரையிரும் பௌவத்துத் தெய்வம்ஒன் றுண்டெனக்
கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென்
நாமஞ் செய்த நன்னாள் நள்ளிருள்  (மணி-7 : 33-5)

என்பது.

நீர்-ஈண்டுக் கடல். நிமிர்பரிப் புரவி - நிமிர்ந்த செலவினையுடைய குதிரை. காலின் வந்த - கால்களையுடைய சகடங்களிலே வந்த, கால் - உருளை. சகடத்திற்கு ஆகுபெயர் என்க. இதன்கண் உள்ள காலின் என்ற சொல்லை நீரின் காலின் வந்த என முன்னர்க் கூட்டி கடலிலே காற்றான் வந்த எனவும், காலின் என்பதன் முன்னர் நீரின் என்பதனை இயைத்துக் கடலிலே காற்றான் வந்த கருங்கறி மூடையும் எனவும் வேண்டாதே கூறினர் நச்சினார்க்கினியர். கருங்கறி மலைநாட்டுப் பொருளாகலின் சகடத்தில் வந்த எனலே நேரிதாம். இங்ஙனமே சிலப்பதிகாரத்து, மனையறம்படுத்த காதைக்கண் கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட (7) என்னும் அடிக்கு அடியார்க்கு நல்லாரும் கால் -வட்டை எனப் பொருள் கூறுதலறிக. வட்டை - உருள். வடமலை - மேருமலை. இம்மலையின் தென்பால் உள்ள நாவல் மரத்தின் கனிச் சாற்றிலிருந்து இப்பொன் உண்டாகும் என்ப. மணி-மாணிக்கம். குடமலை - குடகுமலை; அல்லது மேற்றிசைக்கண் உள்ள மலை எனினுமாம். ஆரம் - சந்தனம். தென்கடல் முத்தென்றது கொற்கைத் துறையிற் குளிக்கும் ஒளிமுத்தை என்க. வாரி - வருவாய். அஃதாவது பொருள் ஏரி னுழாஅர் உழவர் புயல் என்னும், வாரி வளங்குன்றிக் கால், என்னும் திருக்குறளினும், வாரி - வருவாய் என்னும் பொருட்டாதல் காண்க.

காவிரிப்பயன் - காவிரியால் விளைந்த பொருள் : அவை கரும்பு, நெல் முதலியன என்க. ஈழத்துணவும் என்றதற்கு இஃது ஈழத்துளவும் என்றிருத்தல் வேண்டும் என்றும், ஈழத்துள்ள பொருள்கள் என்பது கருத்தென்றும், ஈழத்திலிருந்து சோழநாட்டிற்கு ஒருபொழுதும் உணவுப் பொருள் வந்ததில்லை என்றும் ஏடெழுதினவர் உளவும் என்பதனை உணவும் எனத் தவறாக எழுதினர் என்றும் திரு. ரா. ரா. அவர்கள் கூறுவர். ஈழத்துணவும் என்னுந் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையும் இல்லாதிருத்தல் பிற்காலத்தார் அங்ஙனம் பிறழக்கொண்டமைக்குக் காரணமாகலாம். ஆதலால் ஈழத்துளவும் என்ற பாடமே சிறத்தல் அறிக. முன்னர் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் எனக் கூறி வந்தவர் பின்னர்க் கங்கைவாரி காவிரிப்பயன் காழகத்தாக்கம் எனப் பொதுவிற் கூறுதலும், இவற்றினிடைக்கிடந்த ஈழத்துணவும் என்பது ஈழத்துளவும் என்றே இருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்றாதலும் அறிக. அரிய - புகார் பட்டினத்தன்றிப் பிற நாட்டிற் கிடைத்தற்கரிய என்க. பெரிய புரவி போன்ற பெரும் பொருள் என்க. நனந்தலை - அகன்ற இடம். மறுகு - தெரு. தெருவினையுடைய பட்டினம் என இயைத்துக் கொள்க.

பூம்புகார் வாழும் குடிமக்கள் மாண்பு வேளாளர் குடிச்சிறப்பு

194-205 : நீர் நாப்பண்ணும் ....................... உழவர்

பொருள் : நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி - நீரிடத்தும் நிலத்தின் மேலும் மகிழ்ந்து இனிதாகத் துயின்று, கிளை கலித்து - தம் சுற்றம் தழைக்கப்பெற்று, பகை பேணாது - தம்மைக் கொல்லும் பகையாவாரிவர் என்பதனைக் கருதாமல், வலைஞர் முன்றில் மீன் பிறழவும் -வலையால் மீன் பிடிப்போர் முற்றத்தே மீன் பாயவும், விலைஞர் குரம்பைமா ஈண்டவும் - ஊன் விற்போர் குடிலிடத்தே விலங்குகள் திரண்டு நிற்பவும் இங்ஙனமாக, கொலை கடிந்தும் - கொலைபுரிவாரிடத்து அக்கொலைத் தொழிலை நீக்கியும், களவு நீக்கியும் - களவு காண்பாரிடத்து அத் தொழிலை நீக்கியும், அமரர்ப்பேணியும் - தேவரைப் போற்றியும், ஆவுதி அருத்தியும் - வேள்வி செய்வித்து அவற்றால் அவியுணவினை நுகர்வித்தும், நல் ஆனொடு பகடு ஓம்பியும் - நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறையோர் புகழ் பரப்பியும் - நான்மறை வல்லார்க்கு உண்டாம் புகழை அவர்க்கு நிலைபெறச் செய்தும், பண்ணியம் அட்டியும் - விருந்தினர் நுகர்தற்குரிய பல பண்டங்களையும் கொடுத்தும், பசும்பதம் கொடுத்தும் - அடப்படாத அரிசி முதலிய பசிய உணவைப் பிறர்க்குக் கொடுத்தும், புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை - இல்லறத்தினியல்பு குன்றாத பிறர்க்குக் குளிர்ந்த நிழல் போன்ற வாழ்க்கையினையுடைய, கொடு மேழி நசை யுழவர் - வளைந்த மேழித் தொழிலையே விழையும் வேளாண்மாந்தரும்;

கருத்துரை : மீன்களும் விலங்குகளும் நிரலே நீரினும் நிலத்தினும் மகிழ்ந்து உறங்கித் தம்மினங்கள் பெருகித் தழையாநிற்ப, இவர் தமக்குப் பகைவர் என்று எண்ணாதனவாய், மீன் பிடிப்போர் முற்றத்தே மீன்கள் பாயவும், ஊன் விற்போர் குடிசைகளிலே விலங்குகள் வந்து திரளவும், இவ்வாறாகக் கொலை செய்வோரைக் கொலைத்தொழில் செய்யாமலும், களவு செய்வோரை அத்தொழில் செய்யாமலும் விலக்கியும், தெய்வம் போற்றியும், தெய்வங்கட்கு அவியுணவீந்தும், நல்லபசுக்களையும் எருதுகளையும் பாதுகாத்தும், நான்மறை வல்லோர் புகழைப் பரவுமாறு செய்தும், விருந்தினர்க்கு உணவு முதலிய பண்டங்களை நல்கியும், பசிய உணவுகளை அவை வேண்டுவார்க்குக் கொடுத்தும் இவ்வாறாக இல்லறம் முட்டுப்படுதலில்லாத பிறர்க்குக் குளிர்ந்த நீழலாக அமையும் வாழ்க்கையையுடைய வளைந்த மேழியாலே உழும் உழவுத்தொழிலை விரும்புகின்ற வேளாண் மாந்தரும் என்பதாம்.

அகலவுரை : காவிரிப்பூம்பட்டினத்து வாழும் குடிகளின் சிறப்போதப்புக்க ஆசிரியர், அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் பால் வேறு தெரிந்த நால் வேறு குடிகளுள் வைத்து, அரசர் குடி இந்நூல் முழுதும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறுதலான், அதனையொழித்து ஏனைக்குடிகளுள் வேளாண் குடியே ஏனைய குடிகளின் சிறப்பிற்குக் காரணமாதல் கருதி, முதற்கண் ஓதுகின்றார் என்க.

ஆண்டு வாழும் வேளாளர், தாமும் கொல்லாமை மேற்கொண்டொழுகி மேலும், கொல்லுந் தொழிலுடையார்க்கும் நென் முதலிய நல்லுணவளித்து அறிவு கொளுத்துமாற்றால், அவர் தம் கொலை களவு முதலிய தீத்தொழிலைத் தவிர்க்கும் சான்றோராவார் ஆகலின், கொலை கடிந்தும் களவு நீக்கியும் என அவர் மேற்றாக்கிக் கூறினார். வலைஞரும், ஊன் விற்போரும் கொல்லாமை மேற்கொண்டொழுகு வாராய்விட்டமையால், அவர் முன்றிலினும் குடிலிலும் முறையே மீன்கள் அஞ்சாது பிறழ்வனவும், விலங்குகள் அஞ்சாது திரள்வனவும் ஆயின என்க. நீர்நாப்பண் மீனும், நிலத்தின்மேல் விலங்கும் தமக்குப் பகையின்மையின் ஏமாப்ப இனிது துஞ்சின என்க. இது நிரல்நிரை. நாப்பண் - நடு, ஏமாப்ப என்பதனை ஏமாப்புற்று எனத் திரித்துக் கொள்க. ஏமாப்பு - மகிழ்ச்சி. அச்சமின்மையால் இனிது துஞ்சின என்க. துஞ்சுதல் - தூங்குதல். கொல்வாரின்மையின், கிளை கலித்து என்றார். கிளை ஈண்டு மரபு. மீன்களும் விலங்குகளும் மிகப்பல்கி என்றவாறு. கலித்து - தழைத்து. ஈண்டவும் - திரளவும். அமரர்ப்பேணுதல் - திருக்கோயில்கட்குச் சிறப்பும், பூசனையும் செய்வித்தல். ஆவுதி - தெய்வங்கட்குத் தீயிலிடும் நெய் முதலியன; வேள்வி செய்வாரைக் கொண்டு வேள்விசெய்தும் என்றவாறு. உலகிற் சிறந்த உணவுப்பொருளாகிய பாலையும் உழுதற்கு எருதுகளையும் நல்கி உதவலின் நல்லான் என்றார்; பகடு - உழவெருதுகள். நான்மறையாளர் புகழும், உழவினார் தந்தொழில் செய்யினல்லது இன்றாய் விடுதலின், அப்புகழ் பரவுதற்கு ஏதுவாஞ் சிறப்புப்பற்றி வேளாண் மாந்தர் தொழிலாகக் கூறினார். இதனால் பூம்புகாரில் புகழ்சால் நான்மறையாளர் குடிவளம் கூறினமையும் காண்க.

பண்ணியம் - பண்டம். ஈண்டு பண்ணியாரம் என்க. விருந்தினர்க்குச் சோறேயன்றிச் சுவைமலிந்த பண்ணியாரங்களையும் செய்து அளித்தென அவர் விருந்தோம்பற் சிறப்பை விதந்தோதியவாறு. புண்ணியம் - அறம். ஈண்டு இல்லறத்தின் மேனின்றது. புரப்போர் கொற்றமும் இரப்போர் சுற்றமும் உழவிடைவிளைத்து ஏனைக் குடிகட்கும் தண்ணிழலாம் தன்மையுடையதாகலின் வேளாண் வாழ்க்கையைத் தண்ணிழல் வாழ்க்கை என்றார்.

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.  (குறள். 1039)

என்னுந் திருக்குறளில் வள்ளுவனாரும் அரசன் குடைநிழற்றுவதெல்லாம் அலகுடை நீழலாலே எனக் குறிப்பிடுதல் காண்க. இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஈண்டு வேளாண்குடிக்குரைத்த சிறப்பை எல்லாம் பின் கூறப்படுகின்ற வணிகர்க்கே ஏற்றினர். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை மெய்தெரி வகையின் எண்வகை யுணவின், செய்தியும் வரையா ரப்பா லான என்பவற்றால் வாணிகர்க்கு உழவுத்தொழி லுரித்தாகலாற் பகடோம்பியும் என்றார். யாகத்திற்குப் பசுவை ஓம்பியும் என்றார், என்பது அவர் கூறிய விளக்கம். பண்ணிய மட்டி என்பதற்குச் சோற்றை ஆக்கியிட்டும் என்பாரும் உளர். பசும்பதம்-அரிசியும் கறியும் என்பாரு முளர், என்பனவும் நச்சினார்க்கினியர் குறிப்புக்களேயாம்.

வணிகர் குடிவளம்

206-212 : நெடுநுகத்து ..................... துவன்றிருக்கை

பொருள் : நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் - நெடிய நுகத்திற்றைத்த பகலாணிபோல நடுவு நிலை என்னும் குணம் நிலைபெற்ற நன்றாகிய நெஞ்சினையுடையோர் ஆகிய வணிகர், வடுவஞ்சி வாய் மொழிந்து - தம்குடிக்குப் பழியாமென்று அஞ்சி மெய்யே பேசி, தமவும் பிறவும் ஒப்ப நாடி - தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒரு பெற்றியாகக் கண்டு, கொள்வதூஉம் மிகை கொளாது - தாம் கொள்ளும் சரக்கையும் தாம் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது - தாம் கொடுக்கும் சரக்கையும் தாம் கொள்ளும் பொருட்குக் குறையாகக் கொடாமல், பல்பண்டம் பகர்ந்து வீசும் - பல்வேறு பண்டங்களையும் அவையிற்றின் ஊதியத்தை வெளியாகச் சொல்லிக் கொடுக்கும், தொல் கொண்டித் துவன்று இருக்கை - இம்முறையே தொன்றுதொட்டு ஈட்டிய பொருளினையுடைய நிறைந்த குடியிருப்பினையும்;

கருத்துரை : (வேளாளருடைய) நெடிய நுகத்தில் தைத்த பகலாணி போல நடுநிலை என்னும் குணம் நிலைபெற்ற நன்றாகிய நெஞ்சினையுடைய வணிகர், தம் குடிக்குப் பழியாதலை அஞ்சி எப்பொழுதும் மெய்யே பேசித் தம்முடைய பொருளையும் பிறர் பொருளையும் சமனாகக் கண்டு, தாங் கொள்ளுங்கால் தாம் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளாமலும், தாங் கொடுக்குங்கால் கொள்ளும் பொருளுக்குக் குறையக் கொடாமலும், பல பண்டங்களையும் அவற்றிற்குத் தாம் பெறக் கிடந்த ஊதியப் பொருளை வெளியாகக் கூறி இந்நெறி நின்றே தொன்று தொட்டு ஈட்டிய பொருள் நிறைந்த குடியிருப்பினையும் என்பதாம்.

அகலவுரை : நெடுநுகம் - கலப்பையில் எருதுகளைப் பிணைக்கும் நீண்ட தடி. இதனை நுகத்தடி எனவும் கூறுப. இத் தடியின் நடுவிடம் தெரிதற் பொருட்டு ஓர் ஆணி தைத்திருப்பர்; இங்ஙனம் ஆணி தைத்தலை இன்றுங் காணலாம். நன்கு அளந்து செம்பாதியில் இவ்வாணி தைக்கப்படுதலால் நடுவுநிலை என்னும் குணத்திற்கு இவ்வாணியை நல்லிசைப் புலவர் பலரும் உவமையாக எடுத்தோதுவர்.

அறவோர்க்குப் போல வணிகர்க்கும் நடுவுநிலை இன்றியமையாச் சிறப்பிற்றென்பதனைத் திருவள்ளுவனார் திருக்குறளில் நடுவுநிலை என்னும் அதிகாரத்தே,

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.  (குறள் - 120)

என உரைத்த மெய்ம்மொழியின் கருத்தை ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் பொன்னேபோற்போற்றி, அக்குறளின்கண் வந்த பிறவும் தமபோல் என்னும் சொற்களையும் தமவும் பிறவும் என எடுத்தாண்டிருத்தலோடு, ஆண்டுக் கூறப்பட்ட நடுவுநிலைக்குப் பகலாணியை உவமை கூறிப்போற்றுதல் காண்க. அத் திருக்குறட்கும், பரிமேலழகர் பிறவும் தமபோற் செய்தலாவது கொள்வது மிகையும், கொடுப்பது குறையுமாகாமல் ஒப்ப நாடிச்செய்தல் என இப்பட்டினப்பாலைப் பொருளையும் சொல்லையும் பொன்போற் போற்றிக் கூறுதலும் காண்க.

நடுவுநின்ற நன்னெஞ்சினோர் என்றது, நடுவுநிலைமையோடு ஏனைநற் குணங்களும் நிறைந்த நல்ல நெஞ்சினோர் என்றவாறு. கொள்வதூஉம், கொடுப்பதூஉம் என்பன இன்னிசையளபெடை என்க. பகர்தல் - பண்டங்களின் விலைப்பொருளில் தமக்குரிய ஊதியம் இனைத்து என வெளிப்பட உரைத்தல். இங்ஙனம் உரைப்புழி வடுவஞ்சி வாயே கூறுவார் என்க. வடு-பழி. வாய் - மெய்ம்மொழி. தம - தம்முடைய பண்டங்கள். பிற - தம்முடையவல்லாத பண்டங்கள்; பிறர் பண்டங்கள் என்றவாறு. ஒப்பநாடுதல் - அவ்வப் பொருள்களின் தகுதியைச் சமனிலையினின்று ஆராய்தல். தொல்கொண்டி - தொன்று தொட்டீட்டப்பட்ட பொருள்; பழையபொருள் என்றதாயிற்று. இது வணிகரின் குடிப்பழைமை கூறியவாறென்க. நெஞ்சினோர் நாடிப் பகர்ந்து வீசும் கொண்டி துவன்று இருக்கை என இயைபு காண்க. இனி, முற்போந்த வேளாளரையும் எண்ணும்மை கொடுத்து உழவரும் நெஞ்சினோரும் துவன்று இருக்கை எனக் கொள்ளலுமொன்று. இருக்கையையுடைய பட்டினம் எனப் பட்டினத்திற்கே அடையாக்குக.

முட்டாச் சிறப்பிற் பட்டினம்

213-218 : பல்லாயமொடு .................. பட்டினம்

பொருள் : பல் ஆயமொடு பதிபழகி - உலகில் உள்ள பல்வேறு மக்கட் கூட்டங்களோடும் பல்வேறு நாடுகளினும் சென்று பழகி, வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் - வெவ்வேறான உயர்ந்த அறிவுகள் நிரம்பப்பெற்ற சுற்றத்தினையுடையராகிய சான்றோர், சாறுஅயர் மூதூர் சென்று தொக்காங்கு - திருவிழாக் கொண்டாடும் பழைதாகிய ஓரூரிலே சென்று கூடினாற்போன்று, மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் - பலதேயத்தும் சென்று பழகுதல் காரணமாகத் தத்தம் தாய் மொழியே யல்லது வேறுபல மொழியறிவுகளும் பெருகக் கற்ற தம் நாட்டினின்றும் பெயர்ந்து வந்த வாணிகர், கலந்து இனிது உறையும் - தன்கண் வாழும் மக்களோடு அன்பால் உளம் கலந்து இனிதாக வாழ்தற்கு இடமாகிய, முட்டாச் சிறப்பின் பட்டினம் - குறைவுபடாத ஏனைச் சிறப்புக்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினம்;

கருத்துரை : உலகின்கணுள்ள பல்வேறு மக்கட் கூட்டங்களோடும் பல்வேறு நாட்டினும் சென்று பழகியதன் காரணமாகப் பல்வேறு அறிவுகளும் நிரம்பிய சுற்றத்தையுடைய சான்றோர் திருவிழாக் கொண்டாடுவதொரு பழைய ஊரிலே சென்று கூடினாற்போன்று, பல நாட்டினும் சென்று பல மொழிகளையும் பேசுகின்ற பிறநாட்டு வாணிகர் பலரும் வந்து கூடித் தன்கண் வாழும் மக்களோடே உள்ளங்கலந்து மகிழ்ந் துறைதற்கிடமாகிய குறைவற்ற தலைமையையுடைய காவிரிப் பூம்பட்டினம் என்பதாம். (காவிரிப்பூம் பட்டினத்தையே பெறுவதாயினும் என மேலே தொடரும்.)

அகலவுரை : பல்ஆயம் - பல்வேறு மக்கட் கூட்டம். பதி -நாடு. பல் ஆயமொடு பல்பதி பழகி என்க. பல நாட்டினும் சென்று பல மக்களோடும் பழகுவார்க்குப் பல்வேறு அறிவுகளும் நிரம்புதல் உண்மையின், வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் என்றார். முது - அறிவு. வாய் - வாய்த்தல்; நிரம்பப் பெறுதல். ஒக்கல் - சுற்றத்தையுடையராகிய சான்றோர் என்க. சாறு - திருவிழா. அயர்தல் - கொண்டாடுதல். மூதூர் - பழைய ஊர். இச் சான்றோர் - புலம்பெயர் மாக்கட்கு உவமை என்க. சாறயர் மூதூர், பட்டினத்திற்கு உவமை என்க. ஆண்டுவந்த புலம் பெயர் மாக்களும் மகிழ்ந்துறைதற் சிறப்பினைக் காட்டும் குறிப்பேதுவாகச் சாறயர்மூதூர் என்றார். புலம்பெயர் மாக்கள் பலநாட்டு மொழிகளையும் அறிதலின் மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் என்றார், அவர் தாமும் நாகரிகம் சிறந்த தேயத்தினரே என்பார், பழிதீர்தேஎம் என்றார். ஒருநாட்டு மக்கள் பிறநாட்டு மக்களுடன் கலந்து வாழ்தல் அரிதாகவும், இப்பட்டினத்து மாக்கள் அயலோரையும் கலந்து ஆதரிப்பர் என்பது தோன்றக் கலந்துறையும் என்றார். புலம்பெயர் மாக்கட்கும் இப்பட்டினம் வேற்றுமையின்றி இன்பம் நல்கும் சிறப்பிற்று என்பார் இனிது உறையும் என்றார். இவர் தாமும் நீண்ட நாள் தங்குவர் என்பது தோன்ற உறையும் என்றார். இதற்கு இங்ஙனம் செவ்வனே பொருள் காணமாட்டாது. பிறரெல்லாம் தாம் வேண்டியவாறே ஆசிரியர் கருத்தொடு மாறுபடக் கூறினர்.

மக்கள் வாழ்விற்குரிய எல்லாச் சிறப்பும் தன்கண் உளவென்பார் முட்டாச் சிறப்பென்றார். பட்டினம் என்பது சிறப்பால் காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்து நின்றது. ஊர் எனப்படுவது உறையூர் என்றாற்போன்று. இனி 1. முதல் 218 வரையிற் றொடர்ந்து ஆங்காங்கே நின்ற பட்டினச் சிறப்புக்கள் அனைத்தையும் எண்ணும்மையாற் பின்வருமாறு அணுக இயைத்துக் கொள்க.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பொன்கொழிப்பதும், ஆலைத்தீத் தெறுவிற் பூச்சாம்பும் புலத்தையுடையனவும் எருமைக் குழவி துயில் வதியப்பெறுவனவும் தெங்கு முதலியவற்றை உடையனவுமாகிய பகையறியாப் பாக்கங்களையும், குறும்பல்லூரையும் உடையதுமாகிய சோணாட்டில், கழிசூழ் படப்பையினையும், தண்டலையினையும், பொய்கைகளையும், ஏரிகளையும், காப்பினையும், அட்டிலினையும், சாலையினையும், பள்ளியினையும், காவினையும், புறச் சேரியினையும் முன்றிலினையும், ஆவணத்தையும், துவன்றிருக்கையையும் உடைய புலம்பெயர் மாக்கள் இனிதுறையும் சிறப்புடைய பட்டினம் என்க. இத்தகைய பட்டினமே பெறுவதாயினும் என மேற்றொடர் கொள்க.

பட்டினப்பாலை என்னும் பெயர்க்கேற்ப முன்னர்ப் பட்டினச் சிறப்புக்களையே விதந்தோதி வந்தவர், இனிப் பாலை ஒழுக்கம் என்னும் பாட்டின் உயிர்ப்பொருட்கு ஈண்டுத் தோற்றுவாய் செய்கின்றார். பாலை என்பது பிரிதலும் பிரிதனிமித்தமுமாம். அது, கல்வியிற்பிரிவு முதலிய பல பிரிவுகளையுடைத்து, ஈண்டுப் பட்டினம் பெறினும் எனத் தொடங்குவதனால் இப்பிரிவு பொருள்வயிற்பிரிவு என்க. என்னை? பொருள்களுள் தலைசிறந்த பட்டினமே பெறுவதாயினும் வாரேன், நெஞ்சே என்கின்றமையின். பட்டினம் பெறினும் என்பதன்கண் ஏகாரந்தொக்கது. இனி, இன்மைய திளிவும் உடைமைய துயர்ச்சியும் எடுத்துக்காட்டிப் பொருள்வயிற் பிரியக் கடைக் கூட்டிய தன் நெஞ்சை முன்னிலைப்படுத்து வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறுகின்றானாக அமைந்தன, பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே, என்னும் அடிகள். இவ்வடிகளே இப்பனுவல் பாலை என்னும் பெயர் பெற்றதற்குக் காரணமாய்ச் சிறந்தன என்க.

தலைவன் நெஞ்சிற்குக் கூறியது

218-220 : பெறினும் .................... நெஞ்சே

பொருள் : பெறினும் - (முட்டாச்சிறப்பின் பட்டினத்தையே) எனக்கு உரிமையாகப் பெறுவேனாயினும், வார் இருங்கூந்தல் வயங்கு இழை ஒழிய - நீண்ட கரிய கூந்தலையுடைய விளங்குகின்ற பூணினை உடையாள் ஈண்டுப் பிரிந்திருப்ப, வாரேன் வாழிய நெஞ்சே - யான் நின்னோடு உடன்பட்டுக் கூட வருவேனல்லேன் நெஞ்சே நீ வாழ்வாயாக.

கருத்துரை : இத்தகைய சிறப்புடைய பட்டினமே யான் பெறுவேனாயினும், நீண்ட கரிய கூந்தலையும் விளங்கும் பூணினையும் உடைய இவள் தனித்துறையும்படி விட்டு யான் நின்னோடு வருவதற்கு உடன்படேன் ஏ நெஞ்சமே நீ வாழ்வாயாக என்பதாம்.

அகலவுரை : வாரிருங் கூந்தல் என்றது தலைவியின் இயற்கையழகின் சிறப்பிற்கு ஒன்று கூறியவாறு. வயங்கிழை, என்றது ஒப்பனையழகிற்கு ஒன்று கூறியவாறென்க. எனவே இயற்கையழகானும் செயற்கையழகானும் ஒப்பின்றி உயர்ந்த இவள் இக்கூந்தல் உலறிக்கிடப்பவும், இழை நெகிழவும் வருந்தும்படி விட்டு உன்னோடு வரும் வன்கண்ணன் அல்லன் யான் என்றவாறு. இவளைப் பிரியக்கருதிய நீயோ பெரிதும் வன்கண்மை உடையை; அத்தகைய வன் கண்ணர் வாழ்தலும் அரிது; எனினும் நீ வாழ்வாயாக என வாழ்த்திய படியாம். வார் இருங்கூந்தல் - நீண்டகரிய கூந்தல். வயங்குதல் - விளங்குதல். வயங்கிழை : அன்மொழித்தொகை. ஒழிய என்றது யான் பிரியின் இவள் இறந்துபடுவள் என்பது தோன்ற நின்றது.

இருங்கண் ஞாலத்து ஈண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினும் ................
............................................................
கோலமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார்  (குறுந்-278 : 1-6)

என்னும் குறுந்தொகையினும் ஒழிய என்பது இக்கருத்துடையதே.

இங்ஙனமாக இப்பாட்டின் திணைப்பொருளை இடையே தோற்றுவித்தது ஓதுவோர் உணர்வு சலியாமைப் பொருட்டென்க. இனி இப்பாட்டுடைத் தலைவன் சிறப்பினை ஓதி அவன் வேலையும் கோலையும் தலைமகன் செல்ல நினைந்த கானத்திற்கும் தலைவியின் தோளிற்கும் உவமை கொண்டு வாராமைக்குரிய காரணம் கூறும் அருமை பெரிதும் போற்றற்பாலது. இனி 220. கூருகிர் என்பது தொடங்கி 299. திருமாவளவன் என்னுந் துணையும் ஒரு தொடர். இத்திருமாவளவனைப் பொருநராற்றுப் படை கொண்ட கரிகால்வளவன் என்றே பண்டையோர் கொண்டனராக மகாவித்துவான் ரா. ராகவையங்கார் அவர்கள் திருமாவளவன் என்பான் கரிகாலனல்லன் அவனின் வேறாகிய கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னனே திருமாவளவன் ஆவான் எனத் தமது ஆராய்ச்சி நூலில் கூறியுள்ளார்கள். இனி, இப்பகுதியில் திருமாவளவனின் தெறலுடைமையும் அளியுடைமையும் பிறவுமாகிய சிறப்புக்கள் விரித்தோதப்படும்.

திருமாவளவன் சிறையிடைத்தப்பியதும், தாயம் பெற்றதும்

220-227 : கூருகிர் ................. ஊழின்எய்தி

பொருள் : கூர்உகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு - கூரிய உகிரினையும் வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து வளர்ந்தாற் போன்று, பிறர் பிணி அகத்து இருந்து பீடுகாழ் முற்றி - பகைவர் காவலிடத்தே இருந்து தனக்குரிய பெருமைக்குணம் வயிரமாக முதிர்ந்து, அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று - ஏறி உய்தற்கரிய கரைகள் இடிந்து வீழும்படி தன் கோட்டாலே குத்தித் தான் வீழ்ந்திருந்த குழியைத் தூர்த்து, பெருங்கை யானை பிடி புக்காங்கு - பெரிய கையினையுடைய களிற்றியானை அக் குழியினின்றும் ஏறித் தன் பிடியானையிடத்தே சென்றாற் போன்று, நுண்ணிதின் உணர நாடி - தன் உணர்வு கூரிதாக உணரும்படி இதுவே செயத்தக்கதென்று ஆராய்ந்து, நண்ணார் செறிவுடைத் திண் காப்பு ஏறி- அப்பகைவருடைய நெருங்கிய திண்ணிய காவற்சிறை மதிலை ஏறிக் கடந்து, வாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தி - தன் வாளை உறைகழித்து அச்சம் பொருந்தின தன் அரசுரிமையை முறையாலே பெற்று;

கருத்துரை : கூரிய உகிரினையும், வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி, கூட்டில் அடையுண்டிருந்து வளர்ந்தாற் போன்று, பகைவருடைய சிறைக்கோட்டத்தே இருந்து, தனக்குரிய பெருமைக்குணங்கள் வயிரமாக முதிரப்பெற்றுக் குழியில் வீழ்ந்த களிற்றியானை தன் கோட்டாலே அக்குழியின் கரைகளைக் குத்தி வீழ்த்து அக்குழியைத் தூர்த்துக் கரையேறிப் பிடியானையிடத்தே சென்றாற்போன்று, தன் அறிவாலே வினைசெயும் வழியை நன்கு ஆராய்ந்து பகைவர் சிறையை ஏறிக் கடந்து, அவ்வழித் தன் வாளை உறைகழித்துப் பகையையும் அடர்த்துக் கடந்து, அச்சம் பொருந்தின தன் அரசுரிமையை முறையாலே பெற்று என்பதாம்.

அகலவுரை : இதனால் திருமாவளவனை இளம்பருவத்தே அவன் பகைவர் சிறைக்கோட்டத்தே இட்டு வலிய காவலிட்டு ஓம்பினர் என்பதும், அம்மன்னிளஞ் செல்வன் ஆண்டுறையும்போது தனது கூர்த்த அறிவாலே அச்சிறையைக் கடந்துபோம் வழியை ஆராய்ந்து, தக்க செவ்வி பெற்றவுடனே, அச்சிறைக்கோட்டத்து இடிக்கவேண்டிய அரணை இடித்து, ஏறவேண்டிய மதிலை ஏறித் தப்பினான் என்றும், சிறையிற் றப்பியவுடன் அவன் பகைவரோடே கடும்போர் ஆற்றினான் என்றும், அப்பகைவரையும் கடந்த பின்னர் அப்பகைவரான் முன்னர்க் கவர்ந்து கொள்ளப்பட்ட தனக்குரிமையான அரசுரிமையைக் கைப்பற்றினான் என்றும் உணரலாம்.

இவன் பகைவராவோர் இவன் தாயத்தார்களே ஆதலால், குடிமக்கள் பழி கூறுதற்கு அஞ்சி இவனைச் சிறைக்கோட்டத்திலிட்டு வைத்தனர் என்று ஊகிக்கலாம். வீரனான இவ்விளைஞன் சிறைபட்டுக் கிடந்தமைக்குக் கூட்டில் அடைபட்டுக்கிடந்த புலிக்குட்டியையும், அச்சிறை தகர்த்து வெளிப்பட்டமைக்குத் தான் வீழ்ந்த குழியைத் தூர்த்துக் கரையேறிய களிற்றியானையையும் உவமை கூறும் அழகு பெரிதும் இன்பந்தருதலறிக.

யானை பிடிப்போர் வஞ்சகமாகக் களிற்றைக் குழியில் வீழ்த்தியது போன்று திருமாவளவனைப் பகைவர் வஞ்சகத்தாலே சிறை செய்யப்பட்ட தல்லால் அவர்தம் ஆற்றலால் அன்றென்பது குறிப்பு. சிறைக்கோட்டத்துள்ளும் இவன் கையிலிருந்த வாளைப் பற்றிக்கொள்ளமாட்டாது விட்டு வைத்தனர் என்பது தோன்ற கூருகிர்ப் புலிக்குருளை என்றார். கொடு வரிக்குருளை என்றார் ஆண்டும் அரசிளங் குமரனுக்குரிய சின்னங்களோடே உறைந்தான் என்றற்கு யானை பிடிபுக்காங்கு என்றமையால் திருமாவளவன் திருமணங்கொண்ட பின்னரே சிறையிடைப்பட்டமை புலனாதல் அறிக. அவ்விளம்பருவத்தே வலிய சிறையிடைத் தப்புதற்குரிய வழிகளைக் கண்ட சிறப்புடைமையை, நுண்ணிதின் உணர நாடி என்ற தொடரால் தெரிய விளம்பினார். கடத்தற்கரிய சிறை என்பார், செறிவுடைத்திண் காப்பு என்றார்; என்றது, சிறையின் மதிற்காப்பினையும், படைக்காப்பினையும் என்க. ஏறி என்றது மதிலை ஏறி என்றபடி. அம்மதிலகத்தே தன்னையிடப்பட்ட சிறைக்கூடத்தை இடித்தென்று அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று என உவமை கூறிய அடையாற் பெறவைத்தார். சிறையிடைத் தப்பி வெளிவந்த பின்னரும் போராலேயே தன் பகையடர்த்துத் தாயமெய்தினான் என்பதனை வாள் உறைகழித்து என்பதனாற் பெற வைத்தார். இவ்வாறு அரிதிற் பெற்ற தாயமென்பார் உருகெழுதாயம் என்றார். அத்தாயந்தானும் தனக்குரியதே என்பார் முறையின் எய்தி என்றார்.

கூருகிர் - கூரிய நகம். கொடுவரி - வளைந்த கோடு; அன்மொழித் தொகையாய்ப் புலியை உணர்த்தும். புலியின் உடலினமைந்த கோடென்க. பிணியகம் - சிறைக்கோட்டம். பீடு - அரசனாகிய தனக்குரிய பெருமைக்குணங்கள். காழ்-வயிரம். வயிரமாக முற்றி என்க. அருங்கரை - ஏறிக் கடத்தற்கரிய கரை. குத்தி என்றதனால் கோட்டால் என வருவித்துரைக்கப்பட்டது. குழி கொன்றென்றது - குழியைத் தூர்த்து என்றவாறு. பிடி - பெண்யானை. திருமாவளவன் சிறையிற் றப்பித் தன் உரிமைச் சுற்றத்தை அடைந்ததனை இவ்வுவமையாற் பெற வைத்தார். வாள் கழித்தல்-போர் செய்தல் அல்லது பகைவரை அச்சுறுத்தல் கருதி என்க. நுண்ணிதின் உணர நாடுதலாவது, வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிக் காலமும் இடனும் வாலிதின் ஆராய்ந்து அறிந்து கோடல் என்க.

திருமாவளவன் செய்த உழிஞைப்போர்

228-239 : பெற்றவை ........................... தண்பணை எடுப்பி

பொருள் : பெற்றவை மகிழ்தல் செய்யான் - தான் இறையாகப் பெற்ற அரசுரிமையால் மகிழ்ச்சி எய்தாதவனாய், செற்றொர் கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின் - தம்மரசனாற் செறப்பட்ட பகைவருடைய காவலையுடைய அரண்களை இடிப்பனவும் அவர் தம் கோபுரவாயிற் கதவுகளை முறிக்கும் கொம்பினையுடையனவும், முடியுடைக் கருந்தலை புரட்டும் முன் தாள் உகிர் உடை அடிய - அப்பகைவருடைய முடியுடைய கரிய தலைகளை உதைத்து உருட்டும் முன் காலில் உகிருடைய அடியுடையனவும் ஆகிய, ஓங்கு எழில் யானை - உயர்ந்த அழகினையுடைய யானைகளோடும், வடிமணிப் புரவியொடு - வடித்த மணிகட்டின குதிரைகளோடும் சென்று, வயவர் வீழ - மறவர்கள் பட்டு வீழும்படியும், பெருநல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப - பெரிதாகிய நல்ல வானிடத்தே பருந்து உலாவித் திரியும்படியாகவும், தூறு இவர் துறுகல்போலப் போர்வேட்டு வேறுபல் பூளையொடு உழிஞை சூடி - தூறு படர்ந்த நெருங்கின மலைகள் போன்று போரை விரும்பி எழுந்தமைக்கு அடையாளமாகப் பூளைப் பூவோடு உழிஞைப் பூவையும் சூடி, பேய்க்கண் அன்ன பிளிறு கடி முரசம் மாக்கண் அகல் அறை அதிர்வன முழங்க - பேயின் கண்ணை ஒத்த கண்ணையுடைய முழங்கும் காவலையுடைய முரசம் பெருமை உடைத்தாகிய இடத்தையுடைய அகன்ற பாசறையிலே அதிர்ந்து முழங்கா நிற்ப, முனைகெடச் சென்று முன்சமம் முருக்கி - பகைவர் போர்முனையிற் கெட்டோடும்படி தன் கன்னிப் போரிலேயே வென்று, தலைதவச் சென்று - அவ்வளவின் அமையாதே அப்பகைவர் அரணிடத்தே மேலும் மிக்கு நடந்து, தண்பணை எடுப்பி - ஆண்டு மருத நிலத்துள்ள குடிகளைத் துரத்தி;

கருத்துரை : இவ்வாறு, தான் பெற்ற அரசுரிமை யளவில் அமைதியுறாதவனாய், பகைவருடைய அரண்களை இடிப்பனவும், அவர் தம் கோபுரவாயிற் கதவங்களை முறிப்பனவும், பகையரசர் முடித்தலையை உதைத்துருட்டும் முன்கால் நகங்களையுடையனவும், உயர்ந்த அழகினை யுடையனவும் ஆகிய யானைகளோடும், வடித்த மணியையுடைய குதிரைகளோடும் சென்று, பகைமறவர் வீழவும், பெரிய வானத்தே பருந்துகள் உலாவித் திரியவும், தூறுபடர்ந்த துறுகல் போன்று தான் விரும்பிய போர்க்கு அடையாளமாகப் பூளைப்பூவையும், உழிஞைப் பூவையும் சூடிப் பேய்க்கண் போன்ற பெரிய கண்ணையுடைய முரசம் அதிர்ந்து முழங்கப் பகைவர் போர்முனை கெட்டோடுமாறு, தன் முதற் போரிலேயே அவரை வென்று, அவர் நாட்டில் உள்ள மருதநிலத்தூர்களிற் குடிகளைத் துரத்தி என்பதாம்.

அகலவுரை : பெற்றவை முன்னரே தனக்குரிய தாயப்பொருளே ஆதலால் அவற்றால் மகிழ்தற் கிடமின்மையின் பெற்றவை மகிழ்தல் செய்யான் என்றார். செற்றோர் ஈண்டுத் தன்னைச் சிறையிடையிட்ட பகைவர். அப்பகைவருடைய அரணைத் தொலைத்துக் கதவுகொன்று முடித்தலை உருட்டிய யானைகளோடு என்க. எனவே, அவ்வியானைப் படையின் போர்ப் பயிற்சி கூறியவாறென்க. இப்போர் முன் நிகழ்ந்த போர் என்றற்கு, கடியரண் தொலைத்த, என இறந்த காலத்தாற் கூறினார். உகிர்-நகம். ஓங்கு எழில் - யானைக்குக் கூறிய இலக்கண முழுதும் அமைந்த அழகென்க. வயவர் வீழ - பகைமறவர் இறந்துபட. பருந்துலாய் நடப்ப என்றதற்கு இப்படையினாற் றுகள் எழுந்து வானத்தே செறிதலால் பறத்தற்குரிய பருந்து உலாவி நடப்பவாயின என்பர் ரா.ராகவையங்கார் அவர்கள். பெருநல் வானம் என்றதும் முன்னர்த் துகளின்றித் தூய்தாக்கிடந்த நல்ல வானம் என்றபடியாம்.

பூளை, உழிஞை முதலிய பூக்களைச் சூடிய மறவர் கூட்டத்திற்குத் தூறு படர்ந்த நெருக்கமுடைய கற்கள் உவமை என்க. பூளை - பெரும் பூளைப்பூ. உழிஞை - சிறு பூளைப்பூ. இப்போர் பகை மன்னருடைய அரணை முற்றலும், கோடலும் ஆதலின் உழிஞை சூடிச் சென்றார் என்க. உழிஞைப் போராவது,

முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற் றாகு மென்ப  (தொல்.புற-10)

என்பது தொல்காப்பியம். இப்போர்க்கு அடையாளமாக உழிஞைப் பூச்சூடிச் சேறல் மரபு. முரசத்தின் அகன்ற கண்ணுக்குப் பேயின்கண் உவமை. மாக்கண் அகலறை - பெரிய இடத்தாலே அகன்ற பாசறை என்க. இனி கரிய இடத்தையுடைய அகன்ற மலைப்பாறைகள் எதிரொலியா லதிர்வன வாம்படி முழங்க என்பாருமுளர். கடிமுரசம் - காவல் முரசம். முனை கெட என்றற்குத் தூசிப்படை கெட்டொழிய எனினும் பொருந்தும். முன்சமம் - தலைப்போர்; கன்னிப்போர். தன்படையின் செலவினாலேயே முனைகெட முன்சமமுருக்கி என்றவாறு. தலை-பகைவர் அரணிடம். தவச் செல்லுதல் - மிக்குச் சேறல். தண்பணை - மருதநிலத்துக் குடிமக்கட்கு ஆகுபெயர். எடுப்பி என்றது, அக்குடி எழுந்து ஓடச்செய்து என்றவாறு.

திருமாவளவன் போருழக்கிய மருதநிலத்தின் தன்மை

240-245 : வெண்பூ .................... உகளவும்

பொருள் : வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி - வெள்ளிய பூக்களையுடைய கரும்புகளுடனே செந்நெல்லும் வளர்ந்து, மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி - பெரிய இதழ்களையுடைய குவளையோடே நெய்தலும் மயங்கப்பட்டு, கராஅங்கலித்த கண் அகன் பொய்கை - முன்னர் முதலைகள் செருக்கித் திரிந்த இடம் அகன்ற பொய்கைகளிடத்தே, கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடி - இப்பொழுது கொழுவிய தண்டுகளையுடைய அறுகோடே கோரையும் அடர்ந்து, செறுவும் வாவியும் மயங்கி - வயலும் வாவிகளும் தம்முள் வேற்றுமையின்றி ஒன்றாகத் திரிந்து, நீர் அற்று - தண்ணீர் இன்றி, அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும் - அவ்விடங்களிலே அறல்பட்ட கொம்பினையுடைய புல்வாய் கலையோடு மான்பிணைகள் துள்ளி விளையாடா நிற்பவும்.

கருத்துரை : இங்ஙனம் மருதநிலத்து மக்கள் குடி ஓடிப் போனமையாலே, முன்னர் வெள்ளிய பூவையுடைய கரும்போடு செந்நெல்லும் வளர்ந்து, பெரிய இதழையுடைய குவளையோடே நெய்தலும் மயங்கிக்கிடந்த, இடமகன்ற வயல்களும், பொய்கைகளும், இப்பொழுது கொழுவிய தண்டையுடைய அறுகம் புல்லும், கோரைப் புற்களும் வளரப்பட்டு, இது வயல் இது பொய்கை என்றறியாதபடி ஒன்றுபட்டு, நீரில்லாதனவாய் விட்டபடியால், ஆண்டு அறல்பட்ட கொம்பையுடைய புல்வாய்க் கலைகளோடே, மான்பிணைகள் விளையாடா நிற்பவும் என்பதாம்.

அகலவுரை : பூக்கும் பருவமே கரும்பிற் சாறு நிறை பருவமாகலின் வெண்பூக் கரும்பென்றார். நிலத்துக் கணி என்ப நெல்லும் கரும்பும் என்பவாகலின் சிறப்புடைமை கருதிக் கரும்பையும் நெல்லையுமே விதந்தோதினார். கரும்பொடு செந்நெற் காயெரியூட்டி (புறப்-வெ-மா-56) என்றார் பிறரும். கரும்புஞ் செந்நெல்லும் கழனிகளிடத்தேயும், குவளையும் நெய்தலும் பொய்கையிடத்தேயும் உள்ளனவாகக் கொள்க. மாயிதழ்-கரிய இதழுமாம். மயங்கி - கலந்து. கராஅம்-முதலை வகையுள் ஒன்று. கலித்தல்-செருக்கித் திரிதல். இவையிற்றால், அம் மருதநிலத்தின் நிலவளம் நீர்வளங்களை நன்கு விளக்கியவாறு காண்க. இங்ஙனம் இருந்தது திருமாவளவன் போர் செய்தற்கு முன் என்பார் கலித்த என இறந்தகாலத்தாற் கூறினார். கண்ணகல் என்றதனோடு பின்வரும் செறுவினைக் கூட்டி கண்ணகன் செறுவும் பொய்கையும் என்க. அறுகு நீரற்ற விடத்தே தழைக்கும் புல்; அது நன்கு தழைத்த தென்பார், கொழுங்காற் புதவம் என்றார். கொழுத்த வேரினையுடைய அறுகம்புல் என்றவாறு. செருந்தி - நெட்டிக்கோரை. நீடி, மயங்கி என்னும் இரண்டும் ஈரிடத்தும் வந்தமை காண்க. கராஅங் கலித்த பொய்கையில் நீரற்றமையால், கலையும் மானும் துள்ளுவனவாயின. மருதநிலம் நீர்வறந்து முல்லைக் கருப்பொருளாகிய மான்கள் உகளும் காடாயிற்று என்க.

நீர் அறுதல், திருமாவளவன் படைகள் நீர் அருந்துதலானும், கோடுகளை உடைத்தமையானும் என்க. துறைநீர்க் கைம்மான் கொள்ளுமோ என உறையுள் முனியும் அவன் செல்லு மூரே (புறம்-96:7-9) என்றும், கரும்பொடு காய் நெற் கனையெரி யூட்டிப் பெரும் புனல் வாய் திறந்த பின்னும் (புறப்-வெ-மா. 50) என்றும்,

வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்
தூரறிய லாகா கிடந்தனவே - போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு  (முத்தொள்.116)

என்றும், பிறரும் ஓதுதல் காண்க.

கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப்
பாழா யினநின் பகைவர் தேஎம்

என்றார் மதுரைக் காஞ்சியினும். அறுகோடு - அறுப்புடைய (வரியுடைய) கொம்பு. இரலை - கலைமான். உகளல் - துள்ளி விளையாடுதல்.

அம்பலங்களின் நிலைமை

246-251 : கொண்டிமகளிர் .......................... உறையவும்

பொருள் : கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்திமாட்டிய நந்தா விளக்கின் - தம் பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையிலே மூழ்கி அந்திக் காலத்தே கொளுத்தின அவியாத விளக்கினையுடைய, மலரணி மெழுக்கம் ஏறி - மலரால் அழகு செய்யப்பட்ட மெழுகின இடத்திலே ஏறிச் சென்று, பலர்தொழ - உள்ளூரார் பலரும் தொழுது செல்லுதற்குரிய, வம்பலர் சேக்கும் - புதியவராய் வந்தார் தொழுது தங்கும், கந்துடைப் பொதியில் - அருட்குறியாகிய தறியினையுடைய அம்பலங்கள் எல்லாம், பருநிலை நெடுந்தூண் ஒல்க - பருத்த நிலைமையினையுடைய நெடிய தூண்கள் சாயும்படி, தீண்டிப் பெருநல் யானையொடு பிடிபுணர்ந்து உறையவும் - தம்முடம்பு உரிஞ்சிப் பெரிய நல்ல களிற்றியானைகளோடே பிடியானைகள் கூடித் தங்கா நிற்பவும்;

கருத்துரை : தம் பகைவர் நாட்டினின்றும் பிடித்துவந்த அவர் மனையோராகிய மகளிர், ஊரார் பலரும் நீருண்ணும் துறையிலே முழுகி, அந்திமாலைப் போதிலேயே கொளுத்திய அவியாத விளக்கினையுடைய மலரால் அழகு செய்யப்பட்ட மெழுகிய இடத்திலே ஏறிச்சென்று உள்ளூரார் பலரும் தொழுது செல்வனவும், புதியராய் வந்தார் தங்குதற்குரியனவுமாகிய கடவுட்டறி நடப்பட்ட அம்பலங்கள் எல்லாம் காட்டி யானைகள் புக்குத் தூண்கள் சாயும்படி தம்முடலுரிஞ்சி ஆண்டே உறையா நிற்பவும் என்பதாம்.

அகலவுரை : கொண்டி - கொள்ளை; பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர் என்க. பண்டை நாள் அரசர்கள் தம்பகை நாட்டுறையும் மகளிரைச் சிறைபிடித்து வருதலும், அம்மகளிரைக் கற்பழித்தல் முதலியன செய்யாது திருக்கோயிற்றிருப்பணி செய்வித்து ஓம்புவர் என்பதும் இதனால் உணரலாம். கொண்டி மகளிர் என்பார், கோயிற் பணி புரியும் பதியிலார் என்றும் இவர் தாமே தம் போகத்திற்கு ஆடவரை வரிப்பவராதலிற் கொண்டி மகளிர் என்றார் என்றும் கொண்டி யாயின வாறென்றன் கோதையே (தேவாரம் 710-7) என்பதனாலிதன் உண்மையுணர்க. வண்டிற் றுறக்கும் கொண்டிமகளிர் (மணி-18,109) என்றார் பிறரும் எனவும் விளக்கங் கூறினர், ரா. ராகவையங்கார் அவர்கள். தெய்வந் தொழுமிடத்தே இப் பதியிலாரை விளக்கேற்றிக் கடவுளுக்குத் தொண்டியற்ற வைத்தனர் என்பது பொருந்தாமை யுணர்க. வரைவின் மகளிரைக் கொண்டி மகளிர் என்றதும் அவர் பிறர் பொருளைக் கொள்ளை கொள்ளுதலைக் கருதியே ஆகலின் கொண்டி மகளிர் என்றதற்குக் கொள்ளையிடப்பட்ட மகளிர் எனலே சிறப்பாம் என்க.

இனிப் பண்டை நாளில் அம்பலங்களே இறைவணக்கம் செய்தற்குரிய திருக்கோயில்களுமாகும் என்பதனை அவ்வம்பலத்தே தெய்வத்தின் அருட்குறியாக நடப்பட்ட கந்துகள் உண்மையான் அறிக. கந்து - தறி; சிவலிங்கம். கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே, என்றார் திருநாவுக்கரையரும். இரவு வருமுன்னரே கொளுத்தப்பட்டும், இரவு முழுதும் அவியாத சிறந்த விளக்கென்பார், அந்தி மாட்டிய நந்தா விளக் கென்றார். நந்தா விளக்கு - அவியாத விளக்கு. ஊரார் நீருண்ணுந் துறையில் ஊர் மக்கள் முழுகக் கூடாதாயினும், தெய்வத்திருப்பணி செய்யும் இம் மகளிரைத் தெய்வத்தோடொப்பக் கொள்ளுதலின் அவர் மட்டும் ஆண்டு முழுகும் உரிமை உடைமை தோன்ற, உண்டுறை மூழ்கி என்றார். அம்பலம் உள்ளூரார்க்குத் திருக்கோயிலாதலோடு, விருந்தினர்க்கு உறையுளாகவும் அமைந்தமை வம்பலர்ச் சேக்கும் அம்பலம் என்பதனால் அறியலாம். அம்பலம் என்ற பெயர், தில்லைத் திருக்கோயிலுக்கு இன்றும் வழங்குதல் காண்க. சேக்கும் - தங்கும். அம்பலங்களிலே தெய்வம் ஏறிய கந்துகள் உண்மையை,

அருந்திறற் கடவுள் திருந்துபலிக் கந்தமும் (மணி-6:10) என்றும், இலகொளிக் கந்தமும் (மணி-24: 162) என்றும், மரஞ்சேர் மாடத்தெழுதணி கடவுள் போகலிற் புல்லென் றொழுகுபலிமறந்த மெழுகாப் புன்றிணை (அகம் 177 : 14-6) என்றும், மாத்தாட் கந்தின் சுரையிவர் பொதியில் அங்குடிச் சீறூர் நாட்பலி மறந்த (அகம் 287: 4-6) என்றும் புதலிவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து (அகம் 307 : 11-2) என்றும், வருவனவற்றானும் உணர்க. குறிஞ்சி நிலத்தே வசித்தற்குரிய யானைகள் உறையும் என்றது பகைவர் நாடு காடாயின என்றவாறு.

இழிபறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய எரிமேய
நாடெனும்பேர் காடாக
ஆசேந்தவழி மாசேப்ப  (மதுரை : 154-7)

என்றார் மாங்குடி மருதனாரும்.

பாழடைந்த மன்றங்கள்

252-260 : அருவிலை .................... துவன்றவும்

பொருள் : அருவிலை நறும்பூத் தூஉய் - அரிய விலைக்குக் கொண்ட நறிய பூக்களைச் சிதறித் தொடங்கிய, தெருவின் முதுவாய்க் கோடியர் - தெருவிடத்தே அறிவு வாய்த்தலையுடைய கூத்தருடைய, முழவொடு புணர்ந்த திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும் - முழவிசையோடு இயைந்த முறுக்குதல் புரிந்த நரம்பின் இனிதாகிய கட்டினையுடைய யாழிசையைக் கேட்டற்குக் காரணமான, பெருவிழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்து - பெரிய திருநாள் இல்லையான அச்சம் முதிர்ந்த மன்றத்திடத்தே, சிறு பூ நெருஞ்சியொடு அறுகை பம்பி - சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடே அறுகம்புல் பரவப்பெற்று, அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் - கூவிளியையுடைய வாயையுடைய நரிகள் பிறர்க்கு அச்சந்தோன்றும்படி ஊளையிடவும், அழுகுரற் கூகையொடு ஆண்டலை விளிப்பவும் - அழுகின்ற குரலையுடைய கூகைகளோடு ஆண்டலைப்புட்கள் கூப்பிடவும், கணங்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப் பிணந்தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும் - திரட்சிகொண்ட ஆண்பேய்களுடனே மயிரைத் தாழ்த்து ஆடிப் பிணந்தின்னும் யாக்கையை உடைய பெண் பேய்கள் நெருங்கவும்;

கருத்துரை : அரிய விலைக்குக் கொண்ட நறிய பூக்களைச் சிதறித்தொடங்கிய தெருவிடத்தே அறிவு வாய்த்தலையுடைய கூத்தருடைய முழவோடியைந்த முறுக்கிய நரம்பின் இனிய கட்டமைந்த யாழிசையைக் கேட்டற்குக் காரணமான பெரிய திருவிழாக்கள் இல்லையாயொழிந்த அச்சந்தரும் மன்றத்திலே, சிறிய பூவையுடைய நெருஞ்சியோடே, அறுகம் புல்லும் மண்டிக்கிடப்பவும், கூவிளியுடைய வாயினையுடைய நரிகள் ஊளையிடவும், அழுகுரலையுடைய கூகைகளோடு, கோட்டான்கள் கூப்பிடவும், கூட்டமான ஆண்பேய்களுடனே மயிரைத் தாழவிட்டு ஆடிப்பெண் பேய்கள் நிறையவும் என்பதாம்.

அகலவுரை : முன்னர் அம் மன்றங்கள் பண்டு இருந்த நிலையினைக் கூறிப் பின்னர் அவை பாழ்பட்ட நிலை கூறுகின்றார். நறிய மணம் பொருந்திய பூவாகலின் அருவிலைப்பூ என்றார். விழாநாளில் மக்கள் எல்லாம் பூவை விரும்பிக்கோடல் உண்மையின் அரிய விலையுடைய பூ என்றார், எனினுமாம். கோடியர் - கூத்தாடுவோர். அம் மன்றங்களின் முன்றிலில் திருவிழா நாளிற் கூத்தர் நாடகம் ஆடுவார் என்றும் அந்நாடகத்தே ஆடல்பாடல் முதலியவற்றை மன்றத்திலிருந்து மாந்தர் ஓர்ப்பர் என்றும் கூறியவாறாம். கூத்தாடுதற்கு முன்னர்ப் பூச்சிதறிக் கடவுளை வாழ்த்துதல் கூத்தர் மரபென்க.

நாடக நூலறிவு நன்குவாய்த்த கூத்தர் என்பார் முதுவாய் கோடியர் என்றார். முழவு, அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, காலைமுழவு என, முழவு எழுவகைப்படும். அவையிற்றுள் அகமுழவினுள்ளும் உத்தமமான மத்தளத்தையே ஈண்டு முழவென்றார் என்க. இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலான் மத்தளம் என்ப. மத்து - ஓசை. முழவொடு புணர்ந்த - முழவிசையோடு கூடிய. குற்றமற ஆராய்ந்த நரம்பென்பார், திரிபுரிநரம் பென்றார். நரம்பின் தொடையே யாழ் எனப்படுதலின் தீந்தொடையென யாழிற்குப் பெயர் கூறினார். தீந்தொடை அன்மொழித்தொகை என்க; ஆகுபெயர் என்பர் நச்சினார்க்கினியர். சிறப்புப்பற்றி முழவும் யாழுமே கூறினாரேனும், ஏனைய கூத்திற்குரிய இசைக் கருவிகளோடும் கூடிய யாழ் என்க. என்னை?

கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை  (சிலப்-அரங்-138-142)

எனப் பிறவும் கருவிகள் கூறுபவாகலான்.

ஓர்க்கும் என்றது, இசையுணரும் மக்களைப் புகழ்ந்தவாறு. அரசனை உள்ளிட்டோர் எடுக்கும் விழா என்பார், பெருவிழா என்றார். கழிந்த என்றது இல்லையாய் ஒழிந்த என்றவாறு. இங்ஙனம் மகிழ்தற்குரிய நிலையில் இருந்த மன்றம் பாழ்பட்டு மக்கள் அணுகுதற்கும் அஞ்சும் நிலையை எய்தின என்பார், பேஎம் முதிர் மன்றம் என்றார். பேஎம் - அச்சம். பேநாம் உரும் என வரூஉம் கிளவி, ஆமுறை மூன்றும் அச்சப் பொருள (உரி-67) என்பர் தொல்காப்பியனார்.

இனிப் பேஎம் முதிர்வதற்குக், காரணங்கள் மேலே கூறுகின்றார். மக்கள் வழக்கற்றமை குறிப்பார், சிறுபூ நெருஞ்சியோடு 824 அறுகைபம்ப என்றார். அறுகை - அறுகம்புல். பம்ப - படர. இறுதியி னற்கதி செல்லும் பெருவழி அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண்ணடைத்து (12:59, 60) என்றார் மணிமேகலையினும். அழல் வாய்ஓரி - அழுகின்ற வாயையுடைய நரி என்க. கேட்டோர் அழுதற்குக் காரணமான குரலையுடைய நரி என்றும், நரி ஊளையிடுதல் தீநிமித்தம் ஆகலின் அங்ஙனம் கூறினார் என்றும் கூறுவாருமுளர். அழல்வாய் - கொடிய வாய் என்றாருமுளர். கதிர்ப்பவும் -ஊளையிடவும். கூகை கோட்டான் என்பன ஓரினப் பறவைகள். ஆண்டலை - கோட்டான்; ஆந்தை என மருவி வழங்குவதுமது.

சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்  (மணி.6. 76. 8)

எனவரும் மணிமேகலையால் இப் பறவைகள் பிணந்தின்னும் பறவைகளாதல் அறிக. இவையிற்றின் குரல்கள் கேட்டோர்க்கு அச்சம் உண்டாக்கும் தன்மையன. யாழிசை ஓர்க்கும் மன்றங்களில் நரியின் ஊளையும், கூகையின் குழறலும், ஆந்தையின் அலறலும் எழுந்துபேஎம் முதிர்ந்தன என்றவாறு. கணம்-கூட்டம். கூளி-பேய். பின்னர்ப் பேய் மகள் என வருகின்றமையாற் கூளி - ஆண்பேய் என்க. பேய்மகள் : பண்புத்தொகை; பெண்பேயென்க. அசைஇ-ஆடி. கதுப்பு - மயிர்; இகுத்து - தாழவிட்டு. முதுவாய்கோடியர் ஆடிய மன்றத்தே ஆண் பேய்களோடு கூடிப் பெண்பேய்கள் மயிர் விரித்து ஆடின என்றவாறு. துவன்றவும், நிறையவும் - நெருங்கவும் என்றபடி துவன்று நிறைவாகும் (உரி-34) என்பது தொல்காப்பியம்.

இலங்குவளை மடமங்கையர்
துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப
அவையிருந்த பெரும் பொதியில்
கவையடிக் கடுநோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்புஆட  (159-63)

என்றார் மதுரைக் காஞ்சியினும்.

பாழ்பட்ட பகைவர் நகரம்

261-268 : கொடுங்கால் ..................... குழறவும்

பொருள் : கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி - உருண்ட தூண்களையுடைய மாடத்தின் நெடிய தலைவாயிலிலே சென்று நெருங்கியிருந்து, விருந்து உண்டு ஆனாய் பெருஞ்சோற்று அட்டில் - விருந்தினர் இடையறாதுண்டும் குறையாத பெரிய சோற்றினையுடைய அடுக்களையை உடைய, ஒண் சுவர் நல்லில் உயர்திணை இருந்து - சாந்திட்ட சுவரையுடைய நன்றாகிய இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளின் மேலிருந்து, பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழுநகர் - பசிய கிளிகள் மழலை பேசுதற்குக் காரணமான பால் நிறைந்த வளவிய ஊர்கள், தொடுதோலடியர் துடிபடக் குழீஇக் கொடுவில் எயினர் கொள்ளையுண்ட - செருப்பிட்ட அடியையுடையராய்த் துடிமுழங்கத் திரண்டு சென்று கொடிய வில்லையுடைய வேடர் கொள்ளை கொண்டு உண்டு விட்டமையாலே, உணவில் வறுங்கூட்டு உள்ள கத்து இருந்து - பின்னர் நெல்லாகிய உணவு இல்லையான, வறிய நெற்கூடுகளின் உள்ளாகிய இடத்தே இருந்து, வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும் - வளைந்த வாயினையுடைய கூகைகள் அடியொத்த காலத்தே குழறும் படியாகவும்;

கருத்துரை : உருண்ட தூண்களையுடைய மாடத்தின் தலைவாயிலிலே சென்று நெருங்கியிருந்து விருந்தினர்கள் இடையறாதுண்டும் குறைதலில்லாத மிக்க சோற்றையுடைய அடுக்களை பொருந்தியனவும் சுதையால் ஒளியுடைய சுவருடையனவும் ஆகிய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலே இருந்து, பசிய கிளிகள் மழலை பேசுதற்குக் காரணமான ஆன்பால் வளமிக்க நகரங்களிலே, செருப்பணிந்த காலை யுடையராய்த் துடியொலிப்பச் சென்று, கொடிய வில்லையுடைய வேடர்கள் கொள்ளை கொண்டு உண்டு விட்டமையாலே, உணவின்றி வறிதே கிடக்கும் நெற் கூடுகளின் உள்ளிடத்தே இருந்து வளைந்த வாயினையுடைய கூகைகள் நன்பகற் போதினும் குழறும்படியாகவும் என்பதாம்.

அகலவுரை : கொடுங்கால் என்பதனை வளைந்த கால்களையுடைய பேய்மகள் என முன்னே கூட்டுக, என்பர் நச்சினார்க்கினியர். கொடுங்கால் - ஈண்டு உருண்ட தூண் என்க. தூணின் உருட்சியை வளைவு என்றார், கொடும்பறை என்புழிப்போல. விருந்தினர் பலரும் இருந்துண்ணற்குரிய என்பார் நெடுங்கடை என்றார்; கடை-தலைவாயில். விருந்து - புதியராய் வந்தவர்கள். பலராகிய விருந்தினர் இடையறா துண்டும் உணவறாத செல்வமுடைய இல்லம் என்பார், ஆனாப்பெருஞ் சோற்று அட்டில் என்றார். அட்டில் - அடுக்களை; சமையல் செய்யுமிடம். அட்டில் தனியே இருத்தலின் புகையுண்ணாத சுவருடைய இல்லென் பார் ஒண்சுவர் நல்லில் என்றார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு  (குறள்-81)

என்றபடி, விருந்தோம்பும் அறமுடைய இல் என்பார், நல்இல் என்றார். திணை-திண்ணை: இடைக்குறை; உயர்திணை ஒப்பவிருந்தென்பாரும் உளர். பைங்கிளி பாலையுண்டு மகிழ்ச்சியாலே மிழற்றும் என்றவாறு. பைங்கிளிகட்கும், பாலருத்துவார் எனப் பால்வளத்தை விதந்தோதியவாறு. இவை அந்நகரங்களின் பண்டை நாட்சிறப்பு.

இனி அந்நகரங்கள் பாழ்பட்டமை கூறுகின்றார் என்க. பாலை நிலமாக்கள் ஆகலின், எயினரைத் தொடுதோலடியர் என்றார். தொடுதோல் - செருப்பு. துடி - ஓர் இசைக்கருவி. இவ்வெயினர் கொள்ளையிடப் போம்போது கூட்டமாகத் துடிமுழக்கிச் செல்வர் என்க. கொலைத் தொழில் செய்யும் கருவியாதல் பற்றி வில்லைக் கொடுவில் என்றார். கொடுவில்-கொடிய வில்; வளைந்த வில்லெனல். ஈண்டுச், சிறப்பின்று. கொள்ளை உண்ட - கொள்ளைகொண்டு உண்ட. உண்ட என்னும் எச்சம், ஏதுப்பொருட்டாய் நின்றது. உணவு - நெல்முதலியன. கூடு-நெற்கூடு, குதிர்முதலியன. பண்டு திண்ணையில், கிளி பால் அருந்தி மிழற்றிய இல்லங்களில், இப்பொழுது நெற்கூட்டுள் உறையும் கூகைக்கும் உணவில்லை என்றவாறு. கூகை பசியால் நன்பகலிலும் குழற என்க.

இதனோடு,

நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளி
குடுமிக் கூகை குராலொடு முரல  (169-70)

எனவரும் மதுரைக் காஞ்சியடிகளை ஒப்புக் காண்க. விருந்துண்ட இல், கொள்ளையிட்டுண்ணப் பட்டமையும், கிளி பாலார்ந்த இல், கூகைக்கு உணவில்லாததாயினமையும், கிளி மிழற்றும் இல்லில் கூகை குழறினமையும் காண்க. இத்துணையும் திருமாவளவன் பகைவர் தேஎம் பாழ்படுத்தியது கூறினார். இனி அம் மன்னனுடைய வெற்றிச் சிறப்போதுகின்றார்.

திருமாவளவனின் கருதியது முடிக்கும் கழிபேராற்றல்

269-273 : அருங்கடி ..................... துறைபோகலின்

பொருள் : அருங்கடி வரைப்பின் ஊர் கவின் அழிய - அரிய காவலையுடைய மதில்சூழ்ந்த பகைவர் ஊர்களெல்லாம் அழகு கெடும்படி, பெரும்பாழ் செய்தும் அமையான் - பெரிய பாழாகச் செய்தமையாலும் அவர் மேற்கொண்ட செற்றம் தணியப்பெறாதவனாய், மருங்கற - முழுதும் இல்லையாம்படி, மலையகழ்க்குவனே - தெய்வத்தன்மை யுடையன் ஆதலால் இம் மலைகளை எல்லாம் அகழ்தலைச் செய்வன், கடல் தூர்க்குவனே - கடல்களை எல்லாம் தூர்த்தலைச் செய்வன, வான் வீழ்க்குவனே - வானத்தை விழச் செய்வன். வளிமாற்றுவன் என - காற்றை இயங்காமல் விலக்குவன் என்று உலகத்தார் எல்லாரும் மீக்கூறும்படியாக, தான் முன்னியதுறை போகலின் - தான் கருதிய எச்செயலையும் கருதியவாறே செய்து முடிக்கவல்லன் ஆதலின்;

கருத்துரை : இவ்வாறாக அரிய காவலமைந்த மதிலையுடைய பகைவர் ஊர்கள் எல்லாம் பெரிதும் பாழ்படுத்தியும், அவர்மேல் எடுத்தசினம் தணியப் பெறாதவனாய், முழுதும் இல்லையாம்படி இவன் இம் மலைகளை எல்லாம் அகழ்தலைச் செய்வான்; கடல்களைத் தூர்ப்பான்; வானத்தை வீழ்த்துவன்; காற்றினை இயங்காதபடி மாற்றுவன், என்று உலகத்தோர் இவன் ஆற்றலை வியந்து மீக்கூறும்படியாகத் தான் கருதியதனைக் கருதியவாறே செய்து முடிக்கும் வன்மையுடையன் ஆகலின் என்பதாம்.

அகலவுரை : இஃது உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு (தொல்.புற-12) என்னும் துறை கூறியவாறு.

நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை.  (புறம்-38)

என்றார் பிறரும். இனி மலையகழ்தல் முதலிய செயல்களில் ஒரோ ஒன்றாக இவன் முன்னோர்கள் செய்தனர் என்றும் அவர் பலர் செய்த செயல்களையும் இவன் ஒருவன் செய்யவல்லான் என்று உலகம் மீக்கூறும் என்றும் உரைத்து இச் செயல்கட்கு, இவன் முன்னோன் ஒருவன் காவிரி கொணர்தற்கு குடகக்குவட்டினை அகழ்ந்தானென்றும்,

கொங்கிற் குடகக் குவடூ டறுத்திழியத்
தங்கும் திரைப்பொன்னி தந்தானும்  (மூவருலா)

மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட
கண்டன்  (தக்கயாகப்)

இவன் குல முதலாகிய அயோத்தியரிறை கடல் தூர்த்தனன் என்றும், மற்றொருவன் வளியைத்தான் விரும்பியவண்ணம் இயக்கினான் என்றும் வளியிரு முந்நீர் நாவாயோட்டி, வளித்தொழிலாண்ட (புறம். 66) வான் வீழ்க்குவன் என்றற்கு வானத்தின்கண் தூங்கெயிலை விழ எறிந்தான் ஒருவன் என்றும் கூறினார். ரா. ராகவையங்கார் அவர்கள். இவற்றில், சோழர்கள் சூரியகுலத்தினர் என்பது பிற்றைநாட் பவுராணிகர் பொய்க்கூற்றாகலானும், வளித்தொழிலாண்ட என்றற்கு வளியால் நடக்கும் நாவாய்த் தொழில் என்பதே நேரிய பொருளாகலானும், வானத்தின்கட் டூங்கெயில் வீழ்த்தமை வான் வீழ்த்தமை ஆகாமையானும், இங்ஙனம் பொருள்கோடல் வலிந்துகொள்ளும் மிகை என்க. மற்றிது என் சொல்லியவாறோ எனின், செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் விளைக்கும் ஆற்றலை என்றாற்போன்று செயற்கருஞ் செயலையும் செய்யவல்லான் என்னும் கருத்துபட இவ்வாறு கூறியதென்க. அகழ்க்குவன் - அகழ்வான்; பிறவுமன்ன. முன்னிய துறை - கருதிய செயல். என - என்று உலகம்புகழ - இங்ஙனம் கருதியது முடித்தலால் எனப் பின்வருவனவற்றிற்கு இதனை ஏதுவாக்குக.

திருமாவளவன் வெற்றிச்செயல்கள்

274-282 : பல்லொளியர் .................. சாய

பொருள் : பல் ஒளியர் பணிபு ஒடுங்க - பலராகிய ஒளி நாட்டார் தாழ்ந்து மறங்கெட்டொடுங்கவும், தொல் அருவாளர் தொழில் கேட்ப - பழைய அருவாள நாட்டில் அரசர்கள் தாங்கள் செய்யுந் தொழிலை வந்து கேட்பவும், வடவர் வாட - அதற்கு வடதிசைக்கண் நாட்டிலுள்ள அரசர் வாடவும், குடவர் கூம்ப - குடநாட்டரசர் மனவெழுச்சி குன்றவும், தென்னவன் திறல் கெடச் சீறி - பாண்டியன் வலி குறையவும் சீறி, மன்னர் மன்எயில் கதுவும் மதனுடை நோன்றாள் மாத்தானை மறமொய்ம்பில் - பகைமன்னருடைய நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் செருக்கினையும் வலியினை உடைய தாளினையும் உடைய யானைப்படையும் மறத்தாற் சிறந்த வலிமையும் உடைமையால், செங்கண்ணால் செயிர்த்து நோக்கி - சினத்தாற் சிவந்த கண்ணாலே வெகுண்டு பார்த்து, புன்பொதுவர் வழிபொன்ற - புல்லிய முல்லைநில மன்னர் கால்வழி முழுதும் கெட்டுப்போகவும், இருங்கோவேண் மருங்கு சாய - இருங்கோவேளின் சுற்றத்தார் கெடவும்;

கருத்துரை : பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து மறங்குன்றி ஒடுங்கவும், பழைய அருவாள நாட்டரசர் ஏவல் கேட்பவும், வடநாட்டரசர் அச்சத்தால் வாடவும், குடநாட்டரசர் மனவெழுச்சி குன்றவும், பாண்டியன் வலிமை குறையவும், சீறிப் பகைமன்னர் மதில்களைக் கைப்பற்றும் செருக்குடைய வலிமிக்க தாளுடைய யானைப்படையும், மறவன்மையும் உண்மையால் தனது செங்கண்ணாற் செயிர்த்து நோக்கிப் புல்லிய முல்லை நில வேந்தர் மரபு கெட்டழியவும், இருங்கோவேள் என்பான் சுற்றத்தோடு சாயவும் செய்து என்பதாம்.

அகலவுரை : ஜயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயில் நாட்டு ஒளிப்பற்று வாளுவ மங்கலம் என்ற புதுக்கோட்டை சாசனத்தில், ஒளிப்பற்று என்றது இவ்வொளிநாடு என்ப. ஒளியர் - ஒளிநாட்டார். இவரை, மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர், என்பர் நச்சினார்க்கினியர்.

அருவாளர் - அருவா நாட்டை ஆளும் அரசர். இது கொடுந் தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று; இதனை,

தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்  (நன்னூல். 273 மேற்.)

என்னும் வெண்பாவானறிக. வடவர் - தமிழ்நாட்டின் வடக்கில் உள்ள அரசர். இனி அருவா வடதலை நாட்டரசர் எனினுமாம். அவர் வாடுதற்குக் காரணம் நம் மேலும் போர் செய்ய வருவான் என்னும் அச்சமாம் என்க.

குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப
வலமுறை வருதலு முண்டென்று அலமந்து
நெஞ்சுநடுங் கவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே  (புறம்-31)

என்றார் பிறரும். குடவர் - தன்னாட்டிற்கு மேற்கிலுள்ள நாட்டினர் எனலுமாம். இனி, கொடுந் தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்றாகிய குடநாட்டார் எனினுமாம். தென்னவன் - பாண்டியன். மன்னர் - பகையரசர். மாத்தானை என்பதனை உம்மைத் தொகையெனக் கொண்டு மாவும் ஏனைப் படைகளும் எனினுமாம். மறமொய்ம்பு - வீரச்செருக்கு. புன்பொதுவர் - புல்லிய இடையராகிய வேந்தர். நோக்கின மாத்திரையிலேயே புன்பொதுவரும் இருங்கோவேளும் பொன்றக் கெட்டனர் என்க. இருங்கோ வேண்மான் - வேளிர்களுள் ஓர் அரசன். இதனை இருங்கோ வேண்மான் அருங்கடிப் பிடவூர் என்னும் புறப்பாட்டான் அறிக. இருங்கோவேள் என்றதற்கு ஐம்பெரு வேளிரும் என்பர் நச்சினார்க்கினியர். இதுகாறும் தெறற் சிறப்போதி இனி அளிச் சிறப்பு ஓதுகின்றார்.

திருமாவளவன் நாடு பண்படுத்தினமை

283-292 : காடு .................... எறிப்ப

பொருள் : காடு கொன்று - சோழ மண்டலத்திற் காடாகிய இடங்களை அழித்து, நாடாக்கி - அவ்விடங்களை நாடாகச் செய்து, குளந்தொட்டு - குளங்கள் அகழ்வித்து, வளம்பெருக்கி - பல்வேறு செல்வங்களையும் மிகுத்து, பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கி - பெரிய நிலைகளையுடைய மாடங்கள் அமைந்த உறையூரை விரிவுறச் செய்து, கோயிலொடு குடிநிறீஇ - திருக்கோயில்களோடே குடிகளையும் ஆண்டு நிலைபெறச் செய்து, வாயிலொடு புழையமைத்து - பெரிய வாயில்களோடே சிறிய வாயில்களையும் உண்டாக்கி, ஞாயில்தொறும் புதை நிறீஇ - அதன் தலையில் எய்துமறையும் சூட்டுத்தொறும் அம்புக் கட்டுக்களையும் கட்டி வைத்து, பொருவேமெனப் பெயர் கொடுத்து ஒருவேம் எனப் புறக்கொடாது - பகைவர் யாரேயாயினும் அவரொடு யாமே போர்புரியக் கடவேம் என முன்னர் வஞ்சினங் கூறிப் பின்னரும் அவ்வஞ்சினத்திற்கியைய உயிர் போந்துணையும் போர் முனையினின்று நீங்கோம் என்னும் உறுதியோடே புறங் கொடாது நின்று, திருநிலைஇய பெருமன் எயில் மின்னொளி எறிப்ப - வெல்லுதற்குக் காரணமான வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய தலைமையினையுடைய மதில் மின் போன்ற ஒளியை வீசுதலானே;

கருத்துரை : தன் நாட்டிற் காடுகளை வெட்டியழித்து நாடாகச் செய்து, குளங்கள் அகழ்ந்து பல்வேறு வளங்களையும் பெருகச்செய்து, பெரிய நிலையுடைய மாடங்களமைந்த உறையூரை விரிவுறச்செய்து, அங்குத் திருக்கோயில்களையும், குடிகளையும் நிலையுறச்செய்து, மேலும் பெரிய வாயில்களும், சிறிய வாயில்களும் உண்டாக்கி, மதிற்றலையிற் குருவித்தலைதோறும் அம்புக் கட்டுகளை அமைத்து, பகைவர் யாராயினும் போர் செய்வோம் எனச் சூள்மொழிந்து, பின்னர் அச் சூள் மொழிக்கேற்பவே, உயிர் போந்துணையும் இவண் விட்டகலோம் எனப்போர் முனையிற் புறங்கொடாது நின்று, வெல்லுதற்குக் காரணமான வீரத்திருமகள் நிலைபெற்ற பெரிய தலைமையினையுடைய மதில் மின்போன்று ஒளி வீசுதலானே என்பதாம்.

அகலவுரை : எயில் ஒளி வீசுதலானே தம்மொழி மழுங்கி எனத் தொடரும். காடுகள் வெட்ட வெட்டத் தளிர்த்துப் பின்னும் காடாக அடரும் இயல்புடையன ஆகலின், அவ்வாறு மீண்டும் காடாகாதபடி வேரொடு களைந்தென்பார், காடு கொன்று எனக் கொலைவினை கொடுத்தோதினார். நாடாக்குதல், நீர்வளம் நிலவளங்கள் பொருந்தும்படி கால்வாய் ஏரி குடியிருப்பிடம் முதலியனவும் கழனிகள் பொழில்கள் முதலியனவும் இயற்றுதல்.

தலைமைபற்றிக் குளந் தொட்டென்றார்; எனவே நாடு நீர்வளம் மிகும்படி ஏரி, கால்வாய், யாறு முதலியனவும் இயற்றி என இனம் செப்புமாற்றாற் கொள்க. என்னை?

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணிரியோர் ஈண்(டு)
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே  (புறம்-18)

என நீர்நிலை பெருகச்செய்தல் இன்றியமையாதாதலைப் பிறரும் நன்கு ஓதுதல் காண்க. நீர் உயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும் என்பதனால் வளம் பெருக்கற்குக் குளந்தொடுதல் ஏதுவாகக் கூறினார்.

பிறங்கு - பெரிய. உறந்தை - உறையூர். இது சோழர் தலைநகரில் ஒன்று. உறந்தை போக்கி - உறந்தையை விரிவுறப்பண்ணி; போக்குதல் - நீளச்செய்தல் வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (உரி - 19) என்பது தொல்காப்பியம். மக்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகிய வீடுபேற்றிற்கு ஏதுவாதல் பற்றிக் கோயிலை முற் கூறினார். கோயிலில்லா வூரிற் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழர் அறிவுரை : திருக்கோயில் இல்லாத திருவில் ஊர் .................. அடவிகாடே என்றார் பெரியாரும். வாயில் - பெரியவாயில். புழை - சிறிய வாயில்; இதனைத் திட்டி வாயில் என்ப. ஞாயில் - மதிலகத்தோருறுப்பு. மதில்மேல் நின்று புற நின்றாரை எய்து மறைவதற்கியன்ற இடமாகலின் இதன்கண் புதைநிறீஇ என்றார். புதை - அம்புக்கட்டு. நிறீஇ - இருக்கச்செய்து. திரு - வெற்றித்திரு. பொருவேம் - போர் செய்வோம். பெயர் கொடுத்தலாவது, கொடியன் எம்மிறை எனக் கண்ணீர் பரப்பிக், குடிபழி தூற்றும் கோலே னாகுக என்று கூறும் வஞ்சினத்தால் தனக்கு ஒரு பெயர் பெறுதலின் வஞ்சினத்தைப் பெயர் என்றார் என நச்சினார்க்கினியர் இனிது விளக்கினர். ஒருவேம் - ஒருவமாட்டேம், போர்முனையினின்று உயிர் போந்துணையும் போகோம் என்றவாறு. எயில் மின்னொளி எறிப்ப என்றது அவ்வரணுடையான் வெற்றிப் புகழ் உலகெலாம் விளங்குதலாலே என்றவாறு.

திருமாவளவனின் இன்பச் சிறப்பு

292-299 : தம்மொளி .................... திருமாவளவன்

பொருள் : தம் ஒளி மழுங்கி - தம்முடைய மறவிளக்கங்கெட்டு, விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருதபரேர் எறுழ்க் கழற்கால் - வார் இறுக்கின முழவினையுடைய அதுகாறும் வழிபாடு செய்யாத வேந்தர் அஞ்சி வந்து, இவன் அருணோக்கம் பெறுதற்பொருட்டு வணங்குதலானே அவர் முடியிற் சூடிய பச்சைமணி உரிஞ்சப்பெற்ற பரிய அழகிய வலிமிக்க வீரக்கழல் கட்டின காலினையும், பொன்தொடிப் புதல்வர் ஓடியாடவும் - பொன்னாற் செய்த தொடியினையுடைய பிள்ளைகள் ஓடிவந்து ஏறி விளையாடுதலானும், முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் - மெய்முழுதும் அணிந்த அணிகலன்களை யுடைய மகளிருடைய தாமரை மொட்டுப் போன்ற முலைகள் புணர்தலானும், செஞ்சாந்து சிதைந்த மார்பின் - சிவந்த சந்தனம் அழிந்த மார்பினையும், ஒண்பூண் - ஒளியுடைய பேரணிகலன்களையும் உடையனாய், அரிமா அன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன் - சிங்கவேற்றை யொத்துப் பகைவரை வருத்துதலுடைய வலியினையும் உடைய திருமாவளவன் என்னும் வேந்தன்;

கருத்துரை : (எயில் மின்னொளி எறித்தலான்) தம்மொளி மழுங்கிய பகைமன்னர் அஞ்சிவந்து அடிவீழ்ந்து வணங்குதலானே, அவர் முடியிற் சூடிய பசுமணி உரிஞ்சப்பெற்ற; பரிய அழகும் வலியும் உடைய வீரக்கழல் கட்டின காலினையும், பொன்னாற் செய்த தொடியினையுடைய தன் மகார் ஓடிவந்து ஏறி விளையாடுதலானும், முற்றிய இழையினையுடைய மகளிரின் முகை போன்ற முலை புணர்தலானும் செஞ்சாந்து அழியப் பெற்ற மார்பினையும், ஒள்ளிய அணிகலன்களையுமுடையனாய், பகைவரைச் சிங்கவேற்றை ஒப்ப வருத்தும் வலியினையும் உடைய திருமாவளவன் என்னும் வேந்தன் என்பதாம்.

அகலவுரை : எயில் மின்னொளி எறிப்பத் தம்மொளி மழுங்கி என்றது திருமாவளவனின் வெற்றிப் புகழ் கேட்ட மாத்திரையானே தம்முடைய மறங்குன்றி அஞ்சி என்றவாறு. அங்ஙனம் அஞ்சிய மன்னர் மேலும் வாழ்தலை விரும்பி அவன் அருணோக்கம் பெறற் பொருட்டு அவனடிகளிலே வீழ்ந்து வணங்கலின் அவர் முடியிற் சூடிய பசுமணி பொருத கால் என்க.

இதற்கு, வேந்தர்தம் அரசிழத்தலின் தமக்கு முன்புள்ள விளக்கங்கெட்டுப் பின்பு அவ்விளங்குகின்ற விளக்கந் தோன்றும்படியாகத் தம் முடிமேலே சூடின வீரக்கழலினையுடைய காலினையும், என்றும், பசுமணி பொருத என்றதற்குப் பசிய மணிகளோடே மாறுபட்ட என்றும் உரை கூறினர் நச்சினார்க்கினியர். பொருத என்பதற்கு இசைத்தல், சேர்த்தல் எனப் பொருள் கொண்டு பகைவேந்தர் சூடிய முடிமணியால் இயற்றிய கழல் எனவே மிகப் பொருந்தும் என்று,

நீரே, பிறரோம் புற்றமன் னெயில்
ஓம்பாது கடந்தட் டவர்முடி புனைந்த
பசும்பொன்னி னடிபொலியக்
கழறைஇய வல்லாளனை வயவேந்தே  (புறம்-40)

என்னும் புறப்பாட்டினைக் காட்டுவாருமுளர். பரேர் எறுழ் - பரிய அழகும் வலியும். பருமைஏர் - பரேர் எனப் புணர்ந்தது. எறுழ் - வலி; எறுழ் வலியாகும் (உரி - 90) என்பது தொல்காப்பியம். உலகில் எத்தகைய சிறந்த செல்வம் பெற்றிருப்பினும் மக்கட் பேறில்லாதார் வாழ்க்கை பயனின்றாகலின் புதல்வர் ஓடியாடும் பேற்றினை முன்னர்க் கூறினார். இதனை,

படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டும் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே  (புறம்-188)

எனவரும் பாண்டியன் அறிவுடைநம்பி பனுவலானும் உணர்க. மக்கண் மெய்தீண்டல் உடற்கின்பம் ஆகலின், இது திருமாவளவன் இன்பநுகர்வு கூறியவாறு. இனி மங்கலமாகிய மனைமாட்சி கூறுவர். முற்றிழை - மெய்முழுதும் அணியப்பெற்ற அணிகலன். தொழின் முற்றுப்பெற்ற அணிகலன் எனலுமாம். ஆடை அணி இரண்டானும் முற்றிய மகளிர் என்றற்கு இரண்டற்கும் பொதுவாகிய இழை என்னும் சொற்பெய்துரைத்தார் என்க. முகிழ் - முகை; மலர் மொட்டு. ஈண்டுத் தாமரை மொட்டென்க. முகிழ்முலை : வினைத்தொகையுமாம். திளைத்தல்-புணர்தல். இதனால் திருமாவளவன் இன்பச்சிறப்பு ஓதினார். பசுமணி பொருத பரேர் எறுழ் கழற்கால் என்று முன்னர் அவன் பொருட் சிறப்புரைத்தார், அறச்சிறப்புப் பின்னர் ஓதுவர். அணங்கு - வருத்தம். துப்பு - வலி. திருமாவளவன் இப்பட்டினப்பாலை கொண்ட பாட்டுடைத் தலைவன் என்க.

பாட்டின் பொருண் முடிவும், தலைவியின் சிறப்பும்

299-301 : தெவ்வர்க்கு ...................... மென்றோளே

பொருள் : தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம் - தன் பகைவர்மேல் ஓச்சிய வேலைக்காட்டினும் கடியவாயிருந்தன நாம் செல்லக்கருதிய காடு, அவன் கோலினும் தண்ணிய தட மென்றோள் - அவன் செங்கோலினும் குளிர்ந்திருக்கின்றனயாம் இப்பொழுது எய்தியிருக்கின்ற இவளுடைய பெரிய மெல்லிய தோள்கள்.

கருத்துரை : (திருமாவளவன்) தன் பகைவர்மேல் ஓச்சிய வேலினும் நாம் செல்லக் கருதிய காடு வெப்பமுடையன. நாம் இப்பொழுது எய்தியிருக்கின்ற இவள் தோள்களோ அவன் செங்கோலினும் குளிர்ந்தனவாம் ஆகலான் என்பதாம்.

அகலவுரை : முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன், வாழியநெஞ்சே! அஃதெற்றாலெனின், திருமாவளவன் தெவ்வர்க்கோக்கிய வேலினும் வெய்ய கானம், அவன் கோலினும் தண்ணிய தடமென்றோள் ஆகலான் என இப்பட்டினப்பாலையின் பொருளை இயைத்துக் காண்க. இவையே இப்பாட்டின் கருவாகிய பொருள் என்க.

தெவ்வர் - பகைவர். ஓக்கிய - ஓச்சிய; எறிந்த. வெய்ய - கொடியன. கானம் - காடு. கோல்-செங்கோல். தண்ணிய - தட்பமுடையன. வளவன் வேல் அஞ்சித் தஞ்சமடைந்துழிக் காயாதாகலின் தஞ்சம் புக்காரையும் காயும் காடு வேலினும் வெய்யவாயின என்க. தடமென்றோள் தரும் இன்பம் இம்மையிற்பெறும் இன்பம் அனைத்தினும் ஒப்பற்றுயர்ந்த பேரின்பமாகலின், கோல்தரும் இன்பம் புறவின்பங்களுட் சிறந்ததாயினும், இவ்வின்பத்திற்கு ஒவ்வாமையின் கோலினும் தண்ணிய என்றான் என்க.

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்  (குறள்-1106)

என்றும்,

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு  (குறள் - 1103)

என்றும், மகளிர் தோள்தரும் இன்பம் சான்றோராற் போற்றப்படுதல் காண்க.

உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை  (தொல்.உவம-2)

என்றமையான் உவமைப்பொருள் உயர்ந்ததென்னுங் கருத்தாலே உவமைகொண்டு அவ்வுவமையினும் பொருள் உயர்ந்ததாகக் கூறுங்காலும் பொருள் மேலும் சிறப்படையக் கூறுதலன்றி உவமையினும் உயர்ந்ததாகாமை தாம் வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிது கொல், தாமரைக்கண்ணா னுலகு என்னும் குறளின்கண் வீட்டின்பம் இவ்வின்பத்திற்கு மேலும் இனிதாவதன்றென்பது வீட்டின்பத்தின் சிறப்பையே புலப்படுத்தி நிற்றல் போன்று கோலினும் தண்ணிய தடமென்றோளே என்ற இவ்விடத்தும் உவமையுயர்ச்சி குன்றாமை காண்க. இவ்வுவமைப் பொருள்களால், திருமாவளவன் தெறற் சிறப்பும் அளிச்சிறப்பும் ஒருங்கோதினமை உணர்க. கோலின் தட்பம் கூறித் திருமாவளவனின் அறமுடைமை கூறினராதல் காண்க. எனவே அறம்பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றனையும் அவன் உடையனாதல் கூறினமையின் இப்பனுவல் முழுமைபெற்ற மெய்ந்நூல் ஆதல் அறிக.

இனி 218. முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் என்பது தொடங்கி நூன்முடியுங்காறும் விரிந்துகிடந்த இத்தொடர்ப் பொருளை வயங்கிழை ஒழிய வாரேன் நெஞ்சே! அது எற்றாலெனில், பிறர் பிணி யகத்திருந்து, முற்றி, ஏறிக்கழித்து, எய்திப்பெற்றவை மகிழ்தல் செய்யான், முனைகெடச் சென்று, எடுப்பி, உகளவும், உறையவும், விளிப்பவும், குழறவும், பாழ்செய்து, துறைபோகலில் ஒளியர் ஒடுங்க, அருவாளர் கேட்ப, வடவர் வாட, குடவர் கூம்ப, தென்னவன் கெடச் சீறிநோக்கி, பொதுவர் பொன்ற, வேள் சாயச்செய்து, தொட்டுப் பெருக்கிப் போக்கி நிறீஇ, திருநிலைஇய எயில் ஒளி எறிப்பத் தம்மொளி மழுங்கி, வேந்தர் சூடிய பசுமணி பொருத காலினையும், ஆடவும் திளைப்பவும் சாந்து சிதைந்த மார்பினையும், பூணினையும், துப்பினையும், உடைய திருமாவளவன் வேலினும் வெய்ய கானம் அவன் கோலினும் தண்ணியதோள் ஆகலான் என இயைபு காண்க.

இனி, 1. முதல், 301-வரை தொடர்ந்த, இப்பாடலின் பொருளை, காவிரி பொன் கொழிக்கும், பாக்கங்களையும் குறும்பல்லூரையும் உடைய சோணாட்டினகத்துள்ள கழிசூழ் படப்பையினையும், தண்டலையினையும், பொய்கைகளையும், ஏரிகளையும், சாலையினையும், அட்டிலினையும், பள்ளியினையும் தாழ்காவினையும் புறச்சேரியினையும், முன்றிலினையும், விழாவறா ஆவணத்தையும், மக்கள் கலந்து இனிது உறையும் மறுகினையும், இருக்கையினையுமுடைய முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்,

வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே!

அஃதெற்றாலெனின் : திண் காப்பு ஏறி, வாள்கழித்து, தாயம் ஊழின் எய்தியும் மகிழ்தல் செய்யான், மேலும் யானை புரவியொடும் வயவர் வீழப் பருந்து உலாய் நடப்பப் போர்வேட்டுச் சூடி முழங்க முனை கெடச் சென்று, முருக்கிப் பணை எடுப்பி, உகளவும், உறையவும், துவன்றவும், குழறவும் பாழ்செய்தும் அமையான், அகழ்க்குவன், தூர்க்குவன், வீழ்க்குவன், மாற்றுவன் எனத் தான் முன்னிய துறைபோகலின், ஒளியர் முதலியோர் ஒடுங்கக் கேட்ப, வாட, கூம்ப, கெட, சீறிநோக்கி, பொதுவர் பொன்ற, இருங்கோவேள் சாயச்செய்து, காடுகொன்று நாடாக்கிப் பெருக்கி, உறந்தை போக்கி, நிறீஇ, அமைத்து, நிறீஇ, எயில் ஒளி எறிப்ப, தம்மொளி மழுங்கி வேந்தர் சூடிய பசுமணி பொருத காலினையும் புதல்வர் ஆடவும் மகளிர் திளைப்பவும் சாந்து சிதைந்த மார்பினையும் பூணினையும் உடைய திருமாவளவன் ஓக்கிய வேலினும் வெய்ய கானம் ஆதலானும், அவன் கோலினும் தண்ணிய இவள் தடமென்றோள் ஆதலானும், என மாட்டேற்றாற் சொற்சிதைத்துக் கொண்டு கூட்டாமலே யாற்றொழுக்கதாகச் சொற்கிடந்த முறையானே பொருளியைபு கண்டுகொள்க.

வெண்பா

தனிப் பாடல்

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால் செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று.
 
சோழன் திருமாவளவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையும் பெருமழைப் புலவர், பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரையும் முற்றுப்பெற்றன.

 
மேலும் பட்டினப்பாலை »

பட்டினப்பாலை பகுதி-1 செப்டம்பர் 27,2012

பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar